Tuesday, June 29, 2010

‘வாட் வில் பி த ரீசன்?’





உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கூற இது சமயமில்லை. எதுசொன்னாலும் இந்த காக்காய்களின் கரைச்சலில் இப்போது எடுபடாது.


ஆனால் தினமணி இதழில் மதியின் அடடே..! கார்ட்டூன் சொல்லும் விமர்சனம் ஒராயிரம் வரிகளின் உள்ளடக்கம்.


மேற்கத்திய பாணியில் உடையணிந்த இரண்டு மாணவிகள் பள்ளி வளாகத்தில் பேசிக்கொள்வது போன்ற கார்ட்டூன் இது.



அதான் ‘ஐ ஆம் நாட் ஏபிள் டூ அண்டர்ஸ்டாண்ட்!’

தமிழோட ‘க்ரோத்’துக்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர்.....னு இத்தனை சீஃப் மினிஸ்டர்ஸ் ‘டமிள் கான்ஃபரன்ஸ்’ நடத்தியும் நம்மால தமிழ்ல நல்ல மார்க் ‘ஸ்கோர்’ பண்ணமுடியலையே?’
‘வாட் வில் பி த ரீசன்?’



இதே நிலை நீடிக்குமானால் தமிழ்த்தாய்கூட தமிழ்நாட்டில் நல்ல ‘ஸ்கோர்’ பண்ணமுடியாது என்பதுதானே சரி.

Saturday, June 19, 2010

கிளியைப்போன்ற பெண்டாட்டியும்......குரங்கைப்போன்ற வைப்பாட்டியும்




தனியார் பள்ளிகளை தமிழக அரசு தாங்கிப்பிடிக்கும் செய்தி இன்றைய தினமணியில் வெளியாகி உள்ளது.

தமிழக அரசே தன்னுடைய பள்ளிகளை புறக்கணிக்கும் செய்தி ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

தன்னுடைய வீட்டிலேயே ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர் இருக்கும்போது அடுத்த தெருவில் இருக்கும் மருத்துவரிடம் டோக்கன் வாங்கிக்காத்திருக்கும் அவலம் போன்றது அரசின் இந்தச்செயல்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் இனத்தைச்சேர்ந்த மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு 2007-2008 ஆம் ஆண்டில் ஒரு திட்டம் கொண்டுவந்தது.

மாவட்ட அளவில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சிப்பள்ளி இவற்றில் பயின்று முதல் பத்து இடங்கள் பெறுவோர் தலா 28 ஆயிரம் ரூபாய் ஆண்டு உதவித்தொகை பெறுவார்கள்.

உதவித்தொகை பெறும் மாணவர் தான் விரும்பிய பள்ளியில் சேர்ந்து பயிலலாம். அரசே செலவினத்தை ஏற்கும் என்பதுதான் அந்தத்திட்டம்.

இதே போன்று ஊராட்சி ஒன்றிய அளவில் 5 ஆம் வகுப்புத்தேர்வில் முதலிடம் பெறும் ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் தான் விரும்பிய பள்ளியில் சேர்ந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலலாம். அரசே செலவினத்தை ஏற்கும்.

இவையெல்லாம் போற்றுதலுக்கும், நன்றி பாராட்டுதலுக்கும் உரிய திட்டங்கள் என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை.

ஆனால் இதுபோன்று உதவித்தொகைகள் பெறும் மாணவர்கள் தனியார் பள்ளிகளையும், அரசின் உதவிபெறாத பள்ளிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் கொஞ்சம்
நெருடலாக இருக்கிறது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 320 மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு தலா 56 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 89.60 லட்சம் அரசு செலவிடுகிறது.

தமிழகத்தின் 385 ஊராட்சி ஒன்றியங்களைச்சேர்ந்த 385 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 92 லட்சம் அரசு செலவிடுகிறது.

தமிழகத்தில் 2320 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 2820 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 93 நகராட்சி மாநகராட்சிப்பள்ளிகள், 1062 அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கின்றன.

ஆட்டிற்கு தாடி எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமான ஆட்கள், அம்பு, சேனை எல்லாம் இருக்கின்றன.



இத்தனை இருந்தும், நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறாத தனியார் பள்ளிகளை நாடிச்செல்வது விசித்திரமாக இல்லையா?

அண்மையில் நடைபெற்ற பொதுதேர்வில் ஓர் அரசுப்பள்ளி மாணவர்தானே முதலிடத்தைப்பிடித்தார்.

கிளியைப்போன்ற ஒரு பெண்டாட்டி இருந்தும் குரங்கு போன்ற ஒரு வைப்பாட்டியைத் தேடிப்போனானாம் ஒருவன்.


தமிழக அரசுக்கும் அந்த குரங்குபுத்திக்காரனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?