Friday, May 29, 2009

அரசுப்பள்ளிகளில் தொடரும் அவலம்




அரசுப்பள்ளிகளை அரசே புறக்கணிக்கும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழியாக தவறுகளை சுட்டிக்காட்டியும் அடிப்படை வசதிகளற்ற சூழலில் அரசுப்பள்ளிகள் இயங்குவதைக்கண்டு நாம் துக்கப்படாமல் இருக்கமுடியாது.

இன்றைய செய்தித்தாளில் தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதநிலை பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் கொன்றைக்காடு கிராமத்தில் இயங்கிவரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறவைக்கும் நூற்றுக்கு நூறு பள்ளியாகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப்பள்ளியில் இருந்து பொதுத்தேர்விற்கு அனுப்பப்பட்ட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கூடம் மட்டும் அடிப்படை வசதிகள் என்கிற தேர்வில் ஒவ்வோர் ஆண்டும் தோற்றுப்போய்க்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். பள்ளியில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. ஆறு வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இருப்பதோ மூன்று வகுப்பறைகள்தான். இப்போதைக்கு மாணவர்கள் அமர்ந்துபடிக்க உதவிசெய்வது மரநிழல்தான். மழைக்காலத்தில் மரங்கள் கைவிரித்துவிடும். அப்போது மாணவர்பாடு திண்டாட்டம்தான். கலைமகளுக்கு தமிழக அரசைநினைத்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரசு கணினியை வழங்கியுள்ளது. ஆனால் அந்த கணினியை வைப்பதற்கு போதிய வசதி கொண்ட அறை இல்லாததால் கணினி தற்போது முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறது. குதிரை கொடுக்கும்போது சாட்டையும் கூடவே கொடுக்கவேண்டாமா?

“முதலில் சாட்டையைத்தருகிறேன்; கொஞ்சகாலம் கழித்து குதிரையை வந்து வாங்கிப்போ” என்பதெல்லாம் கவைக்குதவாத வேலை.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மனுக்கள் அனுப்பியாயிற்று என்பது எல்லா ஆசாமிகளுக்குத்தெரியும்.

மனுக்களுக்கு என்னகதியாயிற்று என்பது அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் சாமிக்குமட்டும்தான் தெரியும்.

Tuesday, May 26, 2009

மாநகராட்சிப்பள்ளிகள் மாற்றாந்தாய் பிள்ளைகளா?




பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தனியார் பள்ளிகள் சரிப்பட்டுவராது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதன்காரணமாகத்தான் ஏழைகள் மாநகராட்சிப்பள்ளிகளை நாடிப்போகிறார்கள். நடந்துமுடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பணம் சம்பாதிக்கும் தனியார்பள்ளிகளை பின்னுக்குத்தள்ளி நுங்கம்பாக்கம் மாநகராட்சிப்பள்ளி மாணவி அகல்யாராணி 490 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வேளச்சேரி அரசு பள்ளி மாணவர் கார்த்திக் 489 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 79 சதவீதமாக இருந்த மாநகராட்சிப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் 27 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 14 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியும் அளிக்கப்படுகிறது. மாநகராட்சிப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் படித்தவர்கள் தனியார் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பது சாத்தியமில்லை.
ஆனால் தனியார் பள்ளிகள் வடிகட்டி வீசிஎறிந்த பிள்ளைகளுக்கு மாநகராட்சிப்பள்ளிகளை விட்டால் வேறு வழியில்லை. மாநகராட்சிப்பள்ளிகளில் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேரமுன்வருவார்கள் என்பது நிச்சயம்.

மாணவர்சேர்க்கை அதிகமாக இருந்தபோதும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை உயரவில்லை என்பது இன்றைய செய்தி. பெற்றோர்-ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியரை நியமித்துக்கொள்வது என்பதெல்லாம் மாநகராட்சிப்பள்ளிகளுக்கு சரிப்பட்டு வராது. பெற்றோர்கள் முதலில் ‘மொட்டை பெட்டிஷன்’ போட்டுவிட்டு அப்புறமாகத்தான் பணம் தருவார்கள். தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே கூடுதல் பணிச்சுமை. இந்த கூடுதல் தலைவலி அவருடைய பணித்திறனை நிச்சயம் பாதிக்கும்.

அரசு மனம் இரங்க வேண்டும்.

மாநகராட்சிப்பள்ளிகளின்பால் அருட்பார்வையை செலுத்தவேண்டும்.

கல்வியாண்டு தொடங்கும்போது பாடநூல்கள் கொடுத்துவிடுவதால் அரசின் கடமை முடிந்துவிடாது.

ஆசிரியர்களையும் நியமிக்கவேண்டும்.

செய்வார்களா?

Monday, May 25, 2009

கல்வியா? செல்வமா?




அண்மையில் தினமணியில் வெளியான ஒரு கட்டுரையில் படித்தது இது.

நர்சரி பள்ளியில் படிக்கும் ஒரு தமிழ்க்குழந்தை சொன்னதாம்: “நான் பெரியவன் ஆனதும் என்னுடைய அப்பாவிற்கு ஒரு வீடு வாங்கித்தருவேன். ஏனென்றால் எங்களுடைய வீட்டை விற்றுத்தான் என்னை நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.”

நகைச்சுவைக்காக இது சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழ்நாட்டின் கல்விச்சூழ்நிலை இதுதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கல்வியை ‘கல்விச்செல்வம்’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தக்கல்வியைப்பெறுவதற்கு பொருட்செல்வம் தேவை என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆரம்பத்தில் கடன்வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிடுவதும், காலப்போக்கில் கட்டணம் செலுத்தமுடியாமல் அரசுப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றம் செய்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியதுதான்.

நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப்பயன்படுத்தி இந்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ள யாருமே இல்லை.
கட்டாய நன்கொடைக்கு எதிராக புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்வது வாடிக்கையான சமாதானம்தான். தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிநிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?

இந்த அரசாங்கம் எதைஎதையோ இலவசமாகக்கொடுக்கிறது. இன்னும் கொடுக்கப்போவதாக சொல்லி வருகிறது.

தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே, அது ஏன்?