Sunday, March 13, 2011

"கோர்ட்டுக்கு வெளியே சொன்ன தீர்ப்பு"

1985 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களும், ஆசிரியர்களும் இணைந்து அரசுக்கெதிராக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். தங்களுடைய கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்த அரசுக்கு எதிராக ஒரு வழக்கையும் நடத்தினார்கள். மூத்த வழக்குரைஞர் திரு.என்.டி.வானமாமலை போராட்டக்குழு சார்பாக வழக்கில் வாதாடி வெற்றிபெற்றுக்கொடுத்தார்.

தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், ஆசிரியர்கள் ஒரு பெரிய தாம்பூலத்தட்டில் பழங்களுடன் ஒரு பெரிய தொகையை ஃபீசாக வைத்து என்.டி.வி.யிடம் நீட்டினார்கள். அப்போது என்.டி.வி. சொன்னது:

"ஏழை மாணவர்களுக்கு ஒழுங்காக படிப்புச் சொல்லிக்கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அவர்களுக்கு ஒழுங்கான கல்வி கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. அவர்கள் மட்டும் நன்றாகப்படிக்க வாய்ப்பு கிடைத்தால் பல பிரச்சினைகள் இந்த நாட்டில் தீர்ந்துவிடும். நீங்கள் எல்லோரும் ஆசிரியர்கள். இனிமேலாவது ஏழை மாணவர்களுக்கு சீராக கல்வி கற்றுக்கொடுப்போம் என்று உறுதிமொழி எடுப்பீர்களானால் அதுதான் நீங்கள் எனக்குக்கொடுக்கும் அதிகபட்ச ஃபீஸ்."

நடந்தது என்ன?

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் புழக்கத்தில் இல்லாத மெட்ரிக் கல்விமுறை தமிழ்நாட்டில் மட்டும் தழைத்து நிற்கிறது.

தமிழ்க்குழந்தைகளின் நாவில் தமிழ் தவிக்கிறது.

ஆங்கிலம் தள்ளாடுகிறது.

கல்வி வியாபாரிகளின் காட்டில் மழையோ மழை!

இறகு

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராப்பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
----தருமு சிவராம்