Monday, March 30, 2009

முன்மாதிரியான கல்வி அதிகாரி

29.03.2009 நாளிட்ட தினமணி செய்தியில் திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ஏ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. எழுத இருக்கும் மாணவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று உற்சாகப்படுத்துவதாக படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை உணராத பெற்றோர்கள் தேர்வு சமயம் என்பதைக்கூட பொருட்படுத்தாது தம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பணி கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

முதன்மைக்கல்வி அலுவலர் வீட்டு சந்திப்பின்போது மாணவர்களை மட்டுமின்றி அவர்தம் பெற்றோரையும் சந்தித்து மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்யும் சூழலை வீட்டில் ஏற்படுத்தித்தருமாறு கோருவது பாராட்டிற்குரியது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இதுபோன்று முன்மாதிரியாக் செயல்படுவதைப்போன்று அவருக்குக்கீழ் பணிபுரியும் ஆசிரியத்தோழர்களும் செயல்படுவதை தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டால் ஆசிரியர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்பது என் கருத்து.

Monday, March 23, 2009

லஞ்சலீலா தரங்கிணி

காலையில் காபிகுடிக்கும் நேரத்திலேயே வாசல் கேட்டில் நண்பரின் தலை தெரிந்தது. தலை வழுக்கையின் பரப்பளவு முன்பைவிட அதிகமாக இருந்தது. புயலில் அடிபட்டவர் போலிருந்தார். காரணம்....... தெரிந்ததுதான். சிமெண்ட், மணல், கம்பி, ஆள்கூலி என்கிற புயல்களில் சிக்கிச் சீரழிந்து வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். நாலைந்து நாட்களில் கிரஹப்பிரவேசம் வைத்திருக்கிறார். காபி கொடுத்து உபசரித்தபிறகுதான் விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் அவருடைய விஜயத்தின் நோக்கம் புரிந்தது.

எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி வந்த மனிதருக்கு ஒரு தாண்டமுடியாத பிரச்சினை. புதுவீட்டுக்கு முனிசிபாலிட்டி ஆபீஸில் குடிநீர் இணைப்பு வாங்கவேண்டுமாம். செலவானாலும் பரவாயில்லை என்று மனிதர் என்னிடம் சொன்னார். சொல்ல வேண்டிய இடம் முனிசிபல் ஆபீஸ். சொன்ன இடமோ என் வீட்டுத்திண்ணை. எனவே பிரச்சினையை நான் ஏற்றுவாங்கிக்கொண்டேன்.

காலை பத்துமணிக்குப்போனால் ஆபீசில் ஈ காக்காய் இருக்காது என்பது பள்ளிக்கூட பிள்ளைகளுக்குக் கூட தெரியும். டீ குடிப்பதற்காகவே ஆபீஸுக்கு வருகிறவர்கள் போல் டீ நேரத்தில் நிச்சயமாக எல்லோரும் ஆபீசில் இருப்பார்கள். அவர்களுடைய நாற்காலியில் அல்ல. சுற்றியுள்ள டீக்கடைகளில்.

நான் ஆபீசுக்குள் நுழைந்து வராண்டாவில் உட்கார்ந்திருந்தவரிடம் வந்த காரணத்தை சொன்னபோது அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்தேன். அங்கே அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. கல்யாணமண்டபத்தில் பந்திபோடுவதுபோல் மேசைகளின் வரிசை அமைப்பு. நான் தான் இங்கே தலைவன் என்கிறமாதிரி ஒரு மேசையும் நாற்காலியும். அதற்குப்பின்னால் 'கண்காணிப்பாளர்' என்ற சரிந்து கிடந்த மங்கலான பெயர்ப்பலகையும், அந்த பலகைக்கு மரியாதை கொடுப்பதுபோல் சரிந்து உட்கார்ந்திருந்த கண்காணிப்பாளரும் ஒரு பறவையின் பார்வையில் எனக்குப் பதிவானது.

கண்காணிப்பாளரை நான் அணுகியதும் அவரோடு அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண் பணியாளர் தன்னுடைய மேசைக்குபோய், விட்ட பணியைத் தொடர்ந்தார். அதாவது பூ கட்டிக் ச்ச்கொண்டிருந்தார். மேசைமேல் குவித்து வைத்திருந்த கனகாம்பரப்பூவை கட்டும்பணியைத் தொடர்ந்துசெய்ததை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வந்த விவரத்தையும் எனக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வேண்டுமென்ற கோரிக்கையையும் கண்காணிப்பாளரிடம் சொல்லத் தொடங்கினேன். கேட்கக்கூடாத வார்த்தையை கேட்டுவிட்ட போலீஸ்காரர் தோரணையில், "இல்லை சார். புதிய இணைப்பெல்லாம் இப்போது இல்லை. கோடைகாலம் முடியட்டும். அப்புறமாக வந்து பாருங்கள்" என்றார் கண்காணிப்பாளர்.

கோடைகாலம் முடிந்த பிறகு மழைக்காலம் வந்துவிடும். மழைக்காலத்தில் நண்பருக்கு குடிநீர் இணைப்பு அனாவசியம். அவர் வீடுகட்டியிருப்பதே மழைநீர் புரண்டோடும் வாய்க்காலில்தான்.

நான் பொறுமையாக என்னுடைய சட்டையின் மேல்பாக்கெட்டை தடவியபடி, "குடிநீர் இணைப்பு இப்போதே அவசியமாக இருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை," என்று சொன்னவாறே அவர் நிமிர்ந்துபார்க்கும் வரையில் சட்டையின் மேல்பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு என்கிற ஆயுதம் இருப்பது எனக்குத்தெரியும். அதைமறைக்கும்கெட்டிக்காரத்தனம் அந்த சட்டைத்துணிக்கு இல்லை என்பதும் எனக்குத்தெரியும்.

அடுத்து நடந்ததெல்லாம் ஸ்விட்ச் போட்டதும் பல்பு எரிகிற வேலை. "மேடம், அந்த நாற்காலியை இப்படி நகர்த்துங்க." பூ கட்டிக்கொண்டிருந்த மேடம், அந்தப்பணியை நிறுத்திவிட்டு எனக்கென நாற்காலியை நகர்த்திப்போட்டதும், நான் உட்கார்ந்ததும், பிளம்பர் வடிவேலுவை அங்கே வரச்சொன்னதும், என்னை அவரிடம் அறிமுகம் செய்து கூட்டிப்போகச்சொன்னதும் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது.

பிளம்பர் வடிவேலு என்னை வராந்தாவிற்கு அழைத்து வந்து அங்கிருந்த பலகையில் உட்காரவைத்தார். நான் தயாராக கொண்டுபோன பேப்பரையும் பேனாவையும் பிளம்பர் வடிவேலு கையில் கொடுத்து சொன்னேன்.

"நாளை காலையில் வீட்டில் தண்ணீர் பிடிக்கவேண்டும். என்ன செலவாகும். எழுதுங்கள்" என்றேன். பிளம்பர் வடிவேலு நேர்மையானவர். ஐந்தாறு இனங்களில் செலவுகளை எழுதி கூட்டிப்போட்டார்.

இதெற்கெல்லாம் பில் உண்டு.......இதற்கெல்லாம் பில் இல்லை என்று தமிழ்நாட்டுக் குடிமகனுக்கு புரியும்படி சொன்னார். நான் பணத்தை எண்ணிக்கொடுத்தேன். அப்போது அவர்செய்த காரியம் என்னை புல்லரிக்க வைத்தது.

எழுந்து நின்று பணத்தை கும்பிட்டு வாங்கிக் கொண்டார். அன்று மாலையில் இனிமேல் கண்தெரியாது என்ற இருட்டில் வடிவேலுவும் இன்னும் இரண்டு ஆட்களும் என் நண்பரின் வீட்டில் குடிநீர் இணைப்பு கொடுத்தனர்.

அரசாங்க அலுவலகங்களில் வேலை ஆகவில்லை என்று குறைபட்டுக் கொள்வதில் பிரயோஜனமில்லை. உங்கள் வீட்டுப்பிள்ளை ஆபீசுக்கு சும்மா போய்விட்டுவந்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்களா? உழைப்பது காசுக்காகத்தானே?..... பெண் கேட்கும்போதே கேட்கிறார்களில்லையா?...... மாப்பிள்ளைக்கு மேல்வரும்படி உண்டா என்று......

நிர்வாகம் என்பது கும்மிருட்டு! அதில்
லஞ்சம் என்பது அகல் விளக்கு!

ஒரு பிளான் அப்ரூவல் தேவைப்பட்டது. விண்ணப்பம் செய்தேன். சம்பந்தப்பட்ட எழுத்தர் நல்லவர். என்னுடைய அப்பா வயது. என்னை நிறைய தடவைகள் அலையவிட்டார். ஒவ்வொருமுறை நான் போகும்போதும் வெறும் ஐந்து ரூபாய்தான் வாங்குவார். முற்பகலில் அவருடைய நாற்காலியில் இருக்கமாட்டார். ஐந்து ரூபாய் கிடைத்ததும் பக்கத்து சினிமா தியேட்டரில் காலைக்காட்சி பார்க்கப்போய்விடுவார். அது கண்கவர் மலையாளப்படம் மட்டும் போடும் தியேட்டர்........ பாவம் . அவருடைய வீட்டில் இரண்டு முதிர்கன்னிகள் திருமணத்திற்காக காத்து இருக்கிறார்களாம். விபரம் கேட்டதும் நான் இந்தப்பிறவியில் சொந்த வீடுகட்டவேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் இன்னும் வாடகை வீட்டில் இருப்பதன் ப்ளாஷ் பாக் இதுதான்.

அவருடைய மேலதிகாரியின் கதை வேறுமாதிரி. ஸ்ரீரங்கத்துக்காரர் அவர். அரை மணிக்கு ஒரு பஸ் ஸ்ரீரங்கத்திற்கு இருக்கிறது. இருந்தாலும் அவருக்கு மூன்று மணி பஸ்தான் ரொம்பப்பிடிக்கும். சரியாக மூன்றுமணிக்கு பஸ் ஸ்டாண்டில் அவரைப்பார்த்து லஞ்சப்பணத்தை கொடுத்து விடவேண்டும். அவருடைய லஞ்ச கவுண்டர் மூன்று மணிக்கு திறக்கும். அரசாங்க பங்குபத்திரங்கள் விற்கும் கவுண்டர் மாதிரி சில நிமிடங்களுக்குள் மூடப்படும் என்பது தான் நடைமுறை. தாமதிப்பவர்கள் வாய்ப்பை இழப்பார்கள்.

சில அதிகாரிகள் படுத்துப் புரள்கிற மாதிரி பெரிய மேசை போட்டிருப்பார்கள். லஞ்சப்பணம் கருமக்காசு என்பது அவர்கள் அபிப்ராயம். அதனால்தான் அவர்கள் கையால் அதைத் தொடுவதில்லை. பெரிய மேசையின் டிராயர் அனிச்சையாக திறந்துகொள்ளும். தபாலில் கடிதம் சேர்க்கிறமாதிரி நாம் காணிக்கையை டிராயருக்குள் செலுத்திவிடவேண்டும்.

வேறு சிலருக்கு பயம். எதிரே 'துணிவே துணை' என்று எழுதிவைத்திருப்பதன் மர்மம் அதுதான். நம்மை பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்கள் செலவில் டீயும் வடையும் வாங்கிக்கொடுத்து லஞ்சத்தை வாங்கிக்கொள்வார்கள். இங்கே டீயும் வடையும் நமக்குக் கிடைக்கும் தள்ளுபடி.

ஒரு அதிகாரியின் பயணப்படி பட்டியல் மேல் அலுவலகத்தில் தேங்கிக்கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நகர்த்துவதற்கு நிரம்ப சாமர்த்தியம் வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியின் பியூன் ஒரு பலாப்பழத்தையோ, பத்து இருபது தேங்காயையோ, ஐந்தாறு மரக்கால் நிலக்கடலையையோ எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் பயணப்படி பட்டியலின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் எழுத்தர் வீட்டுக்குப்போய் வாசல் கதவைத்தட்டுவார். அங்கிருக்கும் மனைவி குழந்தைகளின் கண்களில் படும்படி குசேல சன்மானங்களை வைத்துவிட்டு, வீட்டம்மாள் கொடுக்கும் காப்பியையும் குடித்துவிட்டு எந்த ஐயா கொடுத்தனுப்பினார் என்கிற விபரத்தையும் மறக்காமல் சொல்லிவிட்டுவருவார் அந்த பியூன்.

அத்தோடு வந்த பியூனின் டிரான்ஸ்பர் விஷயமும் அங்கே பேசப்படும். பலாப்பழத்தையும், நிலக்கடலையையும் திருப்பியனுப்பிவிட்டால் குழந்தைகளின் கையில் எழுத்தர் நார் நார் தான். இங்கே கவனிக்க வேண்டியது பள்ளிக்கூட விடுமுறைநாளில் போகவேண்டுமென்பது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எண்ணெய் போன்றவர்கள். லஞ்சம் வாங்காத அதிகாரிகள் வெறும் தண்ணீருக்கு சமமானவர்கள். நிர்வாகம் என்ற விளக்கு எரிவது தண்ணீர் மேல் மிதக்கும் எண்ணெயினால்தான்.

இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக பிடிபட்ட செய்தியை அடிக்கடி போடுகிறார்கள். அத்தோடு போனஸ் செய்தியாக அவருடைய மாளிகைவீட்டின் படத்தையும், துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அந்த அதிகாரி நிற்கிற அல்லது ஓடிக்கொண்டிருக்கிற படத்தையும் போட்டு 'தனக்குக் கிடைக்கவில்லையே' என்கிற எரிச்சலை தணித்துக்கொள்கிறார்கள். பலவருடங்களுக்கு முன்னால் பத்திரிக்கைகளில் "லஞ்சம் வாங்கிய அதிகாரியை 'லபக்' என்று பிடித்ததாக செய்திவரும். இப்போதெல்லாம் யாரும் 'லபக்' கென்று பிடிப்பதில்லை. பொறிவைத்துப் பிடிக்கிறார்கள்.

செல்போன் காமிரா, ஒலிப்பதிவு என்ற நவீன தொழில் நுட்பங்களைப் பார்த்து எந்த அதிகாரியும், எந்த அரசியல் வாதியும் பயப்படுவதில்லை. பினாமிகளின் பெயரில் டிராஃப்ட் அப்புறம் சூட்கேஸ் என்று அந்தப்பக்கமும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

காரியத்தை செய்து கொடுத்தபிறகு லஞ்சம் வாங்குவது என்பது சங்ககால நடைமுறை. ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவெல்லாம் முடிந்தபிறகு முண்டாசு கட்டிய பியூன் வராந்தாவரை வந்து மிராசுதாரை வழியனுப்பி வைப்பார். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எப்போது அந்த மிராசுதார் கையில் வைத்தார் என்பதும் எப்போது அந்த பியூன் வாங்கிக் கொண்டார் என்பதும் தெரியாது. இப்போதெல்லாம் பதிவு செய்யப்போகும் பத்திரத்திற்குள்ளேயே ரூபாய்நோட்டு இருக்கவேண்டுமென்று கேள்வி.

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பயந்து கொண்டு லஞ்சம் வாங்காமல் இருப்பதில்லை. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் கைகளுக்குள் சிக்காமல் லஞ்சம் வாங்க வேண்டுமென்பதில் தான் கவனமெல்லாம்.

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு மென்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு 'பெப்பப்பே' காட்ட முயற்சி செய்து மென்னியைப்பிடித்த சம்பவங்களும் உண்டு. லஞ்சப்பணத்தை சன்னலுக்கு வெளியே வீசி 'தண்ணி' காட்ட முயன்றவர்களும் உண்டு. லஞ்சப்பணத்தை தூக்கியெறிந்து விட்டு சந்நியாசிக்கோலத்தில் அலுவலகத்தைவிட்டு ஓடியகதைகளும் உண்டு.

சில அலுவலகங்களில் லஞ்சம் எழுதப்படாத சட்டமாகவே இருக்கும். லஞ்ச கலெக்க்ஷன் முழுவதும் ஒரே கவுண்டரில் நடைபெறுவதால் வாடிக்கையாளரின் சிரமம் குறையும். குறிப்பிட்ட தினங்களில் அது தரம் வாரியாக நேர்மையான முறையில் பிரித்துக் கொள்ளப்படும்.

அரசியல் நாகரிகம் முதிர்ச்சி அடையும் போதெல்லாம் லஞ்ச நாகரிகமும் முதிர்ச்சி அடைகிறது. ஒரு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட் என்று வைத்துக்கொண்டால், இருபது சதவீதத்தை முன்பே கொடுத்துவிட்டுதான் காண்ட்ராக்டைப்பெறமுடியும் என்பது நாகரிகத்தின் முதிர்ச்சிதானே!

வகுப்பறையில் சதவீதக்கணக்கை சரியாகப் போடாமல் குட்டுவாங்கிய பையன்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தபின் சதவீதக்கணக்கில் புலியாக இருப்பது தான் ஆச்சரியம்.

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு வர்க்கப்போராட்டம் மெளனமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்களா?

அல்லது அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்களா? என்பதுதான் அந்த கோடி ரூபாய் விலையுள்ள கேள்வி.

இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதற்காக இந்த நாட்டின் ஏழைபாழைகளும் பஞ்சை பராரிகளும் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சத்தம்போடாமல் நமக்கு வரும் சூட்கேஸை வாங்கிக்கொள்வோம் வேகமாக வாருங்கள்......!

சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்

குமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத்தெரியும்.

ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச்செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது.

யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது.

எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம்.

எஸ்தோனியாவைப்போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம்.

குமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வழக்கமான குமிழ் பல்புகளைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத்தருகின்றன.

இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன.

மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடுவதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2008/10/081001093454.htm

எலக்ட்ரானிக் மூக்கு

இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத்தொழிலாக போய்விட்டிருக்கிறது.

வெடிகுண்டுகளை நாய்கள் முகர்ந்து பார்த்து கண்டுபிடித்தது பழங்கதையாகப்போகப்போகிறது.

மிகச்சிறிய நாணயத்தின் அளவிலானது இந்த புதிய கருவி.

ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள்.

உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தை கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச்சேருங்கள்...செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது.

இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!

ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்ட டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.

"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது.

இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம். வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/videos/2008/0704-sniffing_out_bombs.htm

Tuesday, March 17, 2009

உண்டியல் ஓசையில் ஒடுங்கிப்போன சில்லறை ஓசைகள்

பெட்டி பெட்டியாய்ப் பணமிருந்தும் இவர்களெல்லாம் உண்டியல் குலுக்குவது ஏன்?

அதெல்லாம் ஒரு பொற்காலம். மகாபலி சக்கரவர்த்தி மறுபிறவி எடுத்து தமிழ்நாட்டை ஆண்டுவந்த காலம்.

ஆண்டிற்கு ஆறுமாதங்களாவது கிராமத்து வாய்க்கால்களில் தொடர்ந்தாற்போல் தண்ணீர் வந்து கொண்டிருந்த காலம்.

குளிப்பதற்காக வாய்க்காலுக்குப்போகிறவர்கள் மீன் பிடித்துத்திரும்பிவந்த காலம். துள்ளத்துடிக்க மீன்குழம்பு வைத்து சாப்பிட்ட காலம்.

துண்டின் ஒரு முனையை கழுத்தில் முடிச்சுப்போட்டுக்கொள்ளவேண்டும். மறுமுனையை இரண்டு கைகளிலும் விரித்துப்பிடித்து, வாய்க்கால் ஓரங்களில் பரத்தித்தூக்கினால் வெள்ளி மீன்கள் துண்டுக்குள் துள்ளிக்கொண்டு கிடக்கும்.

துண்டேந்தி மீன்பிடிக்கும் தத்துவத்தை கட்சிக்கு நிதி வசூலிப்பதற்காக ஆதியில் கையாண்டவர்கள் திராவிடக்கட்சிக்காரர்கள்தான். பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தொண்டர்கள் துண்டேந்திவருவார்கள்.தலைவர்கள் மைக்கில் அறிவிப்பு கொடுப்பார்கள்.

அப்போதெல்லாம் ரூபாய் நோட்டுக்கள் பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்கிற கூக்குரல் சாமானியனின் தொண்டைக்குழிக்குள்ளிருந்து வீறுகொண்டெழுந்த காலம்.அதாவது நோட்டுகள் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், துண்டுகளில் சில்லறைக்காசுகள் மட்டுமே துள்ளி விழும்.

துண்டுகளில் திரட்டப்பட்டவை வெறும் காசுகள் மட்டுமல்ல;

உணர்வுகள்;

நாம் என்கிற உணர்வு.

திராவிட முன்னேற்றக்கழகம் சந்தித்த முதல் தேர்தலில் வெறும் எழுபதாயிரம் ரூபாய் தேர்தல்நிதியாக வசூலிக்கப்பட்டதாக ஒரு செய்தி.

அண்ணாவின் கூட்டத்தில் தேர்தல் நிதியாக கோழியும், ஆடும், பறங்கிக்காயும் கொடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

மனிதனுக்கு மட்டுமா பரிணாம வளர்ச்சி? கட்சிக்கும் பொதுவானதல்லவா பரிணாமம்?

அதற்கப்புறம் டிக்கெட்டுகள் அச்சடித்து கட்சிநிதி, வளர்ச்சி நிதி, போராட்டநிதி, வழக்குநிதி இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்தது இந்த பரிணாமம். இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ரூபாய் நோட்டுக்களைப்போல் நாசிக் நகரத்து அச்சகத்தில் அச்சடிக்கப்படவில்லை. உள்ளூர் அச்சகங்களில் சாணிப்பேப்பரில் அதுவும் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருந்தவர்களின் அச்சகங்களில் ஓசியில் அடித்துக்கொடுக்கப்பட்டதை நான் அறிவேன்.

யார்வேண்டுமானாலும்...அதாவது கட்சியில் குரல் ஓங்கி ஒலிக்கும் யார்வேண்டுமானாலும் இதுபோன்ற டிக்கெட் புத்தகங்களை அச்சடித்து வசூல் செய்ய வாய்ப்புக்கொடுத்தது இந்த பரிணாமம்.

ஒரு கால கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு தேர்தல் நிதியாக ரூபாய் பத்து லட்சம் வசூல் செய்யவேண்டும் என்று அண்ணா இலக்கு நிர்ணயித்திருந்தாராம். ஆனால் கலைஞர் பதினோரு லட்சரூபாய் வசூல் செய்து "திருவாளர் பதினோரு லட்சம்" என்று அண்ணாவால் பாராட்டுப்பெற்றாராம்.

இந்தி எதிர்ப்புப்போராட்ட காலத்தில் போராட்டநிதி வசூல் செய்யப்பட்டதை மறக்க முடியாது.

ஒரு ஓவல்டின் டப்பாவில் ஓட்டையை போட்டுக்கொண்டால் உண்டியல் தயார்.

வழியோடு போகிற அன்றைய பஸ்களை மாணவர்கள் நிறுத்தி உண்டியலை குலுக்குவார்கள்.

பொதுமக்கள் தாராளமாக அதில் காசு போடுவதற்கு அப்போதெல்லாம் நிறைய காரணங்கள் இருந்தன. மாணவர்கள் டீ குடிப்பதெல்லாம் அன்றைய கால கட்டத்தில் அபூர்வமானது. பெட்டிக்கடைகளில் விற்கும் தின்பண்டங்களே போராட்டக்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆரம்பத்தில் உண்டியல் வசூல் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அனுபவம் கூடிப்போனபிறகு உண்டியல்கள் உண்மையான கடத்தலுக்கு ஆளாகிப்போயின.

ஆட்சியைப்பிடித்ததும் நாடெங்கும் நடைபெற்ற பாராட்டுவிழாக்களை அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். பத்தடிக்கு ஒரு டியூப் லைட், பாராட்டு பெறும் தலைவர்களுக்கு மலராடை, மலர் கிரீடம், வாள், கேடயம், விளக்குத்தோரணங்கள், அலங்கார வளைவுகள் என்றெல்லாம் கோமாளித்தனமான செலவுகள்.

இதெற்கெல்லாம் பணம்? இருக்கவே இருக்கிறது வசூல்.

இந்த காலகட்டம் கொஞ்சம் வசதியாகிப்போயிருந்தது. ரசீது புத்தகங்கள் கொஞ்சம் பெரியதாகவும், வரிசை எண்கள் கொடுத்தும் அச்சடிக்கப்பட்டன. தொண்டர்கள் கடமை உணர்வோடு வசூலில் இறங்கினாலும், கணக்கு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. என்னதான் இருந்தாலும் பொறுப்பாளர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் இல்லையா?

திராவிடக்கட்சியின் வசூல் வரலாற்றில் பிணக்கம் ஏற்பட்டதால்தான் எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறினார் என்பதை இடைச்செருகலாக இந்த இடத்தில் சேர்த்துக்கொள்க.

அன்றைய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சாமானியர்களாயிருந்தனர். அவர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக கார் வழங்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் "சட்டமன்ற உறுப்பினர் கார் நிதி" வசூல் செய்யப்பட்டதை குறிப்பிடாமல் போனால் வரலாறு என்னை மன்னிக்காது.

இப்போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக ஏன் கார் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவில்லை.

நிதிவசூல் பரிமாணத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தாகிவிட்டது. வளர்ச்சி நிதி, வழக்கு நிதி, குடும்ப நிதி, போராட்ட நிதி, வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, போர் நிதி, அகதிகள் நிதி, கட்டிட நிதி என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. இயற்கை சக்திகள்கூட இந்த வசூல் விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன என்றால் இவர்களின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்!

தேர்தல்நிதி வசூல் நுணுக்கங்கள் திரவிடக்கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் இன்று அது எல்லா கட்சிகளிலும் கிளை பரப்பி நிற்பதுதான் ஆச்சரியமான விஷயம். இந்த நுணுக்கத்திற்காக பேடண்ட் உரிமை கோரப்படாதது அதைவிட ஆச்சரியமான விஷயம்.

இப்போதெல்லாம் தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை....ஆமாம்...தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை. தேர்தல்நிதி கிழிக்கப்படுகிறது. பல்வேறு நாணயவாரிகளில் அச்சடிக்கப்படும் இந்த ரசீதுகளின் குறைந்தபட்ச தொடக்கம் ஆயிரம் ரூபாய். வியாபாரிகளின் கடை அளவு, வியாபாரத்தின் அளவு, கடை சாலையை ஆக்கிரமித்திருக்கும் இடத்தின் பரப்பளவு, கடையில் இருக்கும் கண்ணாடி ஷோ கேஸ்களின் கனஅளவு, இவற்றையெல்லாம் பொறுத்து அவருக்கு ஒரு ரசீது கிழிக்கப்படும். வழுவழுப்பான பேப்பரில் அழகாக அச்சடிக்கப்பட்ட இந்த ரசீதுகளை தடவிப்பார்த்ததில் என்னுடைய நண்பருக்கு பணத்தை பறிகொடுத்த சோகம் மறந்துபோனது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கட்சி வசூல்செய்யும் நிதி இப்படியென்றால் வேட்பாளர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் வசூல் செய்வது வேறு விஷயம். சாதிசெல்வாக்கு மிக்கவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தினால் கட்சியில் இருந்து அவருக்கு தேர்தல் நிதி கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. வேட்பாளரின் சாதியைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை கவரில்போட்டு வேட்பாளரிடம் கொடுத்துவிட்டால் வேட்பாளரின் பணப்பிரச்சினை தீர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும் தகுந்த கைமாறு செய்துவிடவேண்டியது என்பதுதான் இங்கே எழுதப்படாத ஒப்பந்தம்.

இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதிவசூல். ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலுக்கும் இடையில் சிக்கித்தவிக்கிறார்கள் என்பதும், தமிழினத்தை காப்பாற்ற ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறு செய்பவர்களை நையாண்டி செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை.

தமிழ் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை மூடிப்புதைக்கும் நோக்கத்தில்தான் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கிறது என்று ஐயப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதுதான் இந்தக்கட்டுரையின் உந்துசக்தி.

அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் நடு மையமான தீர்மானமே இரண்டு வாரத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்பதுதான். ஆனால் மழையில் நனைந்தபடி மனித சங்கிலி...கின்னஸ் சாதனை என்றெல்லாம் பிரச்சினை திசைதிரும்பிப்போய்க்கொண்டிருக்கிறது.

அதிகபட்சநடவடிக்கையாக முதல்வர் கருதியது பிரணாப் முகர்ஜியின் சந்திப்பு மட்டும்தான். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும் பதவி துறக்கவேண்டும் என்பதும், உணர்வுபூர்வமான ஒற்றுமையை உலகிற்கு சொல்லவேண்டும் என்பதுதான். இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் தமிழர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ இதைப்போலத்தான் நாளை எதிர்கொள்ள இருக்கிற கர்நாடக, கேரள பிரச்சினைகளிலும் தமிழர்கள் நடந்துகொள்வார்கள் என்ற எண்ணத்தை விதைக்கத்தவறிவிட்டனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள்.

மற்ற கட்சித்தலைவர்கள் எப்படியாவது போகட்டும். குறைந்தபட்சம் முதல்வராவது முன்மாதிரியாக நடந்துகொண்டிருக்கலாம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருந்தால்கூட இதே பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்திருக்கத்தான் போகிறார். சொல்லப்போனால் சோனியாகாந்திகூட முதல்வரை சமாதானப்படுத்த சென்னைக்கு வந்திருக்கலாம். தமிழக மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கை தூக்கிநிறுத்த கிடைத்த ஒரு வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

முதல்வரின் இப்போதைய அறிக்கைகள் மோசத்திலிருந்து மிகமோசம் என்கிற நிலைக்குப்போயிருக்கிறது. மத்திய அரசு இயன்றவரை உதவிவருவதாகவும், அதனுடைய அதிகார எல்லையையும் நாம் உணரவேண்டாமா என்று முதல்வர் இப்போது கேட்கிறார். இந்தக்கேள்வி இதற்குமுன்னரே கிராமத்து டீக்கடை பெஞ்சுகளில் எழுப்பப்பட்டுவிட்டது. அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவை என்பது, அந்த தீர்மானங்கள் எழுதப்படும்போது எப்படித் தெரியாமல் போயிற்று? இரண்டுமுறை பதவி இழந்த தி.மு.க. மூன்றாவது முறையாக ஒருமுறை தமிழ் உணர்விற்காக பதவி இழந்தால் தமிழ்நாடு ஒன்றும் இப்போதைக்காட்டிலும் இன்னும் இருட்டாகப் போய்விடாது. மாறாக ஃபீனிக்ஸ் பறவைபோல நீங்கள் எழுந்துவரத்தான் அது உதவும்.

இதெயெல்லாம் கூட்டிக்கழித்துப்பார்க்கும்போது, நடிகர் விஜயகாந்த் சொல்வதுபோல் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முதல்வர் கையிலெடுத்துக்கொண்டாரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இடியோசையாக முழங்கிய கட்சிகளின் குரல்கள் டமார ஒலியாக குறைந்தது. அப்புறம் கீச்சுக்குரலாகி இப்போது மியாவ் மியாவ் ஆக முனகல் கேட்கிறது.

ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், முல்லைப்பெரியாறு பிரச்சினை, ரேஷன் அரிசி கடத்தல், ஆற்று மணல் கடத்தல் இவையெல்லாம் எங்கேயோ கேட்டகுரலாகிப்போய்விட்டன. விலைவாசி உயர்வால் ஏழை மக்களின் இன்னல்களை இனிபேசுவாரில்லை. மின்சார தட்டுப்பாடால் வீடுகள் இருண்டுபோனதை விளக்கிச்சொல்ல யாருக்கும் நேரமில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகள் வெறும் புள்ளிவிவரங்களில் மூழ்கிப்போய்விட்டன. பருவமழை பொய்த்துப்போனதன் தாக்கம் சம்பா அறுவடைநேரத்தில் வெளிப்படத்தான் போகிறது. விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதில் இருக்கும் குளறுபடிகளால் நொந்துபோன விவசாயிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஆளில்லை.

கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போர்க்கொடி தூக்கும் விவசாயிகள் வாதாடத்தொடங்கிவிட்டர்கள். கரும்பில் இருந்து மின்சாரம் எடுக்கிறீர்கள்; சாராயம் காய்ச்சுகிறீர்கள்; காகிதம் செய்கிறீர்கள்; வெறும் காட்டுக்கருவேல மரம் ஒரு டன் 2,500 க்கு விற்கும்போது கரும்புக்கு ஏன் 2,000 ரூபாய் கொடுக்கக்கூடாது என்று ஆணிஅடித்தாற்போல விவசாயிகள் கேட்கிறார்கள். சாராய வியாபாரத்தால் இலவசங்களை அள்ளி வீசும் நீங்கள் ஏன் அதனுடைய மூலப்பொருள் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கொடுக்கக்கூடாது? தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கூடுதல் விலை கொடுக்கும் அரசு, மூலப்பொருளான கரும்புச்சக்கையின் சொந்தக்காரனுக்கு கூடுதலாக ஏன் காசு கொடுக்கக்கூடாது?....இப்படியெல்லாம் கோரிக்கைகள் வளர்ந்துகொண்டே போகின்றன. மாற்றுவழி தேட வேண்டாமா? பழக்கப்பட்ட காரியத்தை கையிலெடுத்துக்கொண்டதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது...அதுதான் அந்த உண்டியல் வசூல். போகட்டும்...உண்டியல் குலுக்கும் ஓசை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் எதுசொன்னாலும் தமிழினத்துரோகியாகிப் போய்விடுவான்.

இத்தனை சந்தடியிலும் ஒரே ஒரு குரல்மட்டும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று மிகத்துணிவாக கூறிவருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பிழையாகப்பேசும் இந்த குரலுக்குரியவரை வெறுப்பாகப்பார்த்தாலும் சொன்னதையே திருப்பிச்சொன்ன இவரும் இப்போது உண்டியல் குலுக்கியது "எதற்கும் இருக்கட்டுமே" என்கிற எச்சரிக்கை உணர்வுதான்.

சினிமாக்காரர்கள் இப்போது நிதி திரட்டியிருக்கிறார்கள். காசோலை வைத்திருப்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டார்கள். இனிமேல் தொழிலதிபர்கள் வரிசையாக வருவார்கள்; அப்புறம் அதிகாரிகள்; அதற்குப் பின்னால் சங்கங்கள்; அரசு ஊழியர்களும் வருவார்கள் வழக்கமான ஒருநாள் ஊதியத்தோடு.

ஆனால் அண்ணாவின் முன்னிலையில் அன்று வைக்கப்பட்ட ஆடு, கோழி, பறங்கிக்காய் போன்ற எதையும் யாரும் கொண்டுவரமாட்டார்கள். அப்படிவைக்ககூடியவர்கள் எல்லாம் இப்போது வெகுதொலைவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்டியல் குலுக்கும் ஓசை மக்களவைத்தேர்தல் வரை ஓயாது.

காசுகள் குலுங்கும் இந்த ஓசை நம்முடைய நாடிநரம்புகளின் ஓசை.

நம் உணர்வுகளின் ஓசை.

நாம் என்ற உணர்வை தட்டியெழுப்பும் ஓசை.

"ஆரியக்கூத்தாடினாலும் தாண்டாவக்கோனே...ஓட்டுப்பெட்டிமீது கண்வையடா தாண்டவக்கோனே"
என்பது நம்மூர் அரசியல் சித்தர்களுக்கு பால பாடம்.

சிந்தாமல் சிதறாமல் அதிகாரத்தை கைமாற்றிவிட உதவும் ஓசை இது; அதிகாரத்தை கைப்பற்ற உதவும் ஓசையும் இதுதான்.

ஈழத்தமிழனுக்கு உதவும் ஓசை இதுவல்ல.

உண்டியல் ஓசையில் ஒடுங்கிப்போன சில்லறை ஓசைகள்

அதெல்லாம் ஒரு பொற்காலம். மகாபலி சக்கரவர்த்தி மறுபிறவி எடுத்து தமிழ்நாட்டை ஆண்டுவந்த காலம். ஆண்டிற்கு ஆறுமாதங்களாவது கிராமத்து வாய்க்கால்களில் தொடர்ந்தாற்போல் தண்ணீர் வந்து கொண்டிருந்த காலம். குளிப்பதற்காக வாய்க்காலுக்குப்போகிறவர்கள் மீன் பிடித்துத்திரும்பிவந்த காலம். துள்ளத்துடிக்க மீன்குழம்பு வைத்து சாப்பிட்ட காலம். துண்டின் ஒரு முனையை கழுத்தில் முடிச்சுப்போட்டுக்கொள்ளவேண்டும். மறுமுனையை இரண்டு கைகளிலும் விரித்துப்பிடித்து, வாய்க்கால் ஓரங்களில் பரத்தித்தூக்கினால் வெள்ளி மீன்கள் துண்டுக்குள் துள்ளிக்கொண்டு கிடக்கும்.

துண்டேந்தி மீன்பிடிக்கும் தத்துவத்தை கட்சிக்கு நிதி வசூலிப்பதற்காக ஆதியில் கையாண்டவர்கள் திராவிடக்கட்சிக்காரர்கள்தான். பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தொண்டர்கள் துண்டேந்திவருவார்கள்.தலைவர்கள் மைக்கில் அறிவிப்பு கொடுப்பார்கள். அப்போதெல்லாம் ரூபாய் நோட்டுக்கள் பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதாவது காங்கிரஸகாரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், துண்டுகளில் சில்லறைக்காசுகள் மட்டுமே துள்ளி விழும். துண்டுகளில் திரட்டப்பட்டவை வெறும் காசுகள் மட்டுமல்ல; உணர்வுகள்; நாம் என்கிற உணர்வு.

திராவிட முன்னேற்றக்கழகம் சந்தித்த முதல் தேர்தலில் வெறும் எழுபதாயிரம் ரூபாய் தேர்தல்நிதியாக வசூலிக்கப்பட்டதாக ஒரு செய்தி. அண்ணாவின் கூட்டத்தில் தேர்தல் நிதியாக கோழியும், ஆடும், பறங்கிக்காயும் கொடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். மனிதனுக்கு மட்டுமா பரிணாம வளர்ச்சி? கட்சிக்கும் பொதுவானதல்லவா பரிணாமம்? அதற்கப்புறம் டிக்கெட்டுகள் அச்சடித்து கட்சிநிதி, வளர்ச்சி நிதி, போராட்டநிதி, வழக்குநிதி இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்தது இந்த பரிணாமம். இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ரூபாய் நோட்டுக்களைப்போல் நாசிக் நகரத்து அச்சகத்தில் அச்சடிக்கப்படவில்லை. உள்ளூர் அச்சகங்களில் சாணிப்பேப்பரில் அதுவும் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருந்தவர்களின் அச்சகங்களில் ஓசியில் அடித்துக்கொடுக்கப்பட்டதை நான் அறிவேன். யார்வேண்டுமானாலும்...அதாவது கட்சியில் குரல் ஓங்கி ஒலிக்கும் யார்வேண்டுமானாலும் இதுபோன்ற டிக்கெட் புத்தகங்களை அச்சடித்து வசூல் செய்ய வாய்ப்புக்கொடுத்தது இந்த பரிணாமம்.

ஒரு கால கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு தேர்தல் நிதியாக ரூபாய் பத்து லட்சம் வசூல் செய்யவேண்டும் என்று அண்ணா இலக்கு நிர்ணயித்திருந்தாராம். ஆனால் கலைஞர் பதினோரு லட்சரூபாய் வசூல் செய்து "திருவாளர் பதினோரு லட்சம்" என்று அண்ணாவால் பாராட்டுப்பெற்றாராம்.

இந்தி எதிர்ப்புப்போராட்ட காலத்தில் போராட்டநிதி வசூல் செய்யப்பட்டதை மறக்க முடியாது. ஒரு ஓவல்டின் டப்பாவில் ஓட்டையை போட்டுக்கொண்டால் உண்டியல் தயார். வழியோடு போகிற அன்றைய பஸ்களை மாணவர்கள் நிறுத்தி உண்டியலை குலுக்குவார்கள். பொதுமக்கள் தாராளமாக அதில் காசு போடுவதற்கு அப்போதெல்லாம் நிறைய காரணங்கள் இருந்தன. மாணவர்கள் டீ குடிப்பதெல்லாம் அன்றைய கால கட்டத்தில் அபூர்வமானது. பெட்டிக்கடைகளில் விற்கும் தின்பண்டங்களே போராட்டக்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆரம்பத்தில் உண்டியல் வசூல் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அனுபவம் கூடிப்போனபிறகு உண்டியல்கள் உண்மையான கடத்தலுக்கு ஆளாகிப்போயின.

ஆட்சியைப்பிடித்ததும் நாடெங்கும் நடைபெற்ற பாராட்டுவிழாக்களை அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். பத்தடிக்கு ஒரு டியூப் லைட், பாராட்டு பெறும் தலைவர்களுக்கு மலராடை, மலர் கிரீடம், வாள், கேடயம், விளக்குத்தோரணங்கள், அலங்கார வளைவுகள் என்றெல்லாம் கோமாளித்தனமான செலவுகள். இதெற்கெல்லாம் பணம்? இருக்கவே இருக்கிறது வசூல். இந்த காலகட்டம் கொஞ்சம் வசதியாகிப்போயிருந்தது. ரசீது புத்தகங்கள் கொஞ்சம் பெரியதாகவும், வரிசை எண்கள் கொடுத்தும் அச்சடிக்கப்பட்டன. தொண்டர்கள் கடமை உணர்வோடு வசூலில் இறங்கினாலும், கணக்கு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. என்னதான் இருந்தாலும் பொறுப்பாளர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் இல்லையா? திராவிடக்கட்சியின் வசூல் வரலாற்றில் பிணக்கம் ஏற்பட்டதால்தான் எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறினார் என்பதை இடைச்செருகலாக இந்த இடத்தில் சேர்த்துக்கொள்க.

அன்றைய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சாமானியர்களாயிருந்தனர். அவர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக கார் வழங்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் "சட்டமன்ற உறுப்பினர் கார் நிதி" வசூல் செய்யப்பட்டதை குறிப்பிடாமல் போனால் வரலாறு என்னை மன்னிக்காது. இப்போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக ஏன் கார் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவில்லை.

நிதிவசூல் பரிமாணத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தாகிவிட்டது. வளர்ச்சி நிதி, வழக்கு நிதி, குடும்ப நிதி, போராட்ட நிதி, வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, போர் நிதி, அகதிகள் நிதி, கட்டிட நிதி என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. இயற்கை சக்திகள்கூட இந்த வசூல் விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன என்றால் இவர்களின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்!

தேர்தல்நிதி வசூல் நுணுக்கங்கள் திரவிடக்கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் இன்று அது எல்லா கட்சிகளிலும் கிளை பரப்பி நிற்பதுதான் ஆச்சரியமான விஷயம். இந்த நுணுக்கத்திற்காக பேடண்ட் உரிமை கோரப்படாதது அதைவிட ஆச்சரியமான விஷயம். இப்போதெல்லாம் தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை....ஆமாம்...தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை. தேர்தல்நிதி கிழிக்கப்படுகிறது. பல்வேறு நாணயவாரிகளில் அச்சடிக்கப்படும் இந்த ரசீதுகளின் குறைந்தபட்ச தொடக்கம் ஆயிரம் ரூபாய். வியாபாரிகளின் கடை அளவு, வியாபாரத்தின் அளவு, கடை சாலையை ஆக்கிரமித்திருக்கும் இடத்தின் பரப்பளவு, கடையில் இருக்கும் கண்ணாடி ஷோ கேஸ்களின் கனஅளவு, இவற்றையெல்லாம் பொறுத்து அவருக்கு ஒரு ரசீது கிழிக்கப்படும். வழுவழுப்பான பேப்பரில் அழகாக அச்சடிக்கப்பட்ட இந்த ரசீதுகளை தடவிப்பார்த்ததில் என்னுடைய நண்பருக்கு பணத்தை பறிகொடுத்த சோகம் மறந்துபோனது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கட்சி வசூல்செய்யும் நிதி இப்படியென்றால் வேட்பாளர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் வசூல் செய்வது வேறு விஷயம். சாதிசெல்வாக்கு மிக்கவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தினால் கட்சியில் இருந்து அவருக்கு தேர்தல் நிதி கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. வேட்பாளரின் சாதியைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை கவரில்போட்டு வேட்பாளரிடம் கொடுத்துவிட்டால் வேட்பாளரின் பணப்பிரச்சினை தீர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும் தகுந்த கைமாறு செய்துவிடவேண்டியது என்பதுதான் இங்கே எழுதப்படாத ஒப்பந்தம்.

இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதிவசூல். ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலுக்கும் இடையில் சிக்கித்தவிக்கிறார்கள் என்பதும், தமிழினத்தை காப்பாற்ற ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறு செய்பவர்களை நையாண்டி செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை.

தமிழ் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை மூடிப்புதைக்கும் நோக்கத்தில்தான் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கிறது என்று ஐயப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதுதான் இந்தக்கட்டுரையின் உந்துசக்தி.

அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் நடு மையமான தீர்மானமே இரண்டு வாரத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்பதுதான். ஆனால் மழையில் நனைந்தபடி மனித சங்கிலி...கின்னஸ் சாதனை என்றெல்லாம் பிரச்சினை திசைதிரும்பிப்போய்க்கொண்டிருக்கிறது.

அதிகபட்சநடவடிக்கையாக முதல்வர் கருதுவது பிரணாப் முகர்ஜியின் சந்திப்பு மட்டும்தான். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும் பதவி துறக்கவேண்டும் என்பதும், உணர்வுபூர்வமான ஒற்றுமையை உலகிற்கு சொல்லவேண்டும் என்பதுதான். இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் தமிழர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ இதைப்போலத்தான் நாளை எதிர்கொள்ள இருக்கிற கர்நாடக, கேரள பிரச்சினைகளிலும் தமிழர்கள் நடந்துகொள்வார்கள் என்ற எண்ணத்தை விதைக்கத்தவறிவிட்டனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள்.

மற்ற கட்சித்தலைவர்கள் எப்படியாவது போகட்டும். குறைந்தபட்சம் முதல்வராவது முன்மாதிரியாக நடந்துகொண்டிருக்கலாம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருந்தால்கூட இதே பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்திருக்கத்தான் போகிறார். சொல்லப்போனால் சோனியாகாந்திகூட முதல்வரை சமாதானப்படுத்த சென்னைக்கு வந்திருக்கலாம். தமிழக மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கை தூக்கிநிறுத்த கிடைத்த ஒரு வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

முதல்வரின் இப்போதைய அறிக்கைகள் மோசத்திலிருந்து மிகமோசம் என்கிற நிலைக்குப்போயிருக்கிறது. மத்திய அரசு இயன்றவரை உதவிவருவதாகவும், அதனுடைய அதிகார எல்லையையும் நாம் உணரவேண்டாமா என்று முதல்வர் இப்போது கேட்கிறார். இந்தக்கேள்வி இதற்குமுன்னரே கிராமத்து டீக்கடை பெஞ்சுகளில் எழுப்பப்பட்டுவிட்டது. அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவை என்பது, அந்த தீர்மானங்கள் எழுதப்படும்போது எப்படித் தெரியாமல் போயிற்று? இரண்டுமுறை பதவி இழந்த தி.மு.க. மூன்றாவது முறையாக ஒருமுறை தமிழ் உணர்விற்காக பதவி இழந்தால் தமிழ்நாடு ஒன்றும் இப்போதைக்காட்டிலும் இன்னும் இருட்டாகப் போய்விடாது. மாறாக ஃபீனிக்ஸ் பறவைபோல நீங்கள் எழுந்துவரத்தான் அது உதவும்.

இதெயெல்லாம் கூட்டிக்கழித்துப்பார்க்கும்போது, நடிகர் விஜயகாந்த் சொல்வதுபோல் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முதல்வர் கையிலெடுத்துக்கொண்டாரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இடியோசையாக முழங்கிய கட்சிகளின் குரல்கள் டமார ஒலியாக குறைந்தது. அப்புறம் கீச்சுக்குரலாகி இப்போது மியாவ் மியாவ் ஆக முனகல் கேட்கிறது.

ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், முல்லைப்பெரியாறு பிரச்சினை, ரேஷன் அரிசி கடத்தல், ஆற்று மணல் கடத்தல் இவையெல்லாம் எங்கேயோ கேட்டகுரலாகிப்போய்விட்டன. விலைவாசி உயர்வால் ஏழை மக்களின் இன்னல்களை இனிபேசுவாரில்லை. மின்சார தட்டுப்பாடால் வீடுகள் இருண்டுபோனதை விளக்கிச்சொல்ல யாருக்கும் நேரமில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகள் வெறும் புள்ளிவிவரங்களில் மூழ்கிப்போய்விட்டன. பருவமழை பொய்த்துப்போனதன் தாக்கம் சம்பா அறுவடைநேரத்தில் வெளிப்படத்தான் போகிறது. விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதில் இருக்கும் குளறுபடிகளால் நொந்துபோன விவசாயிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஆளில்லை.

கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போர்க்கொடி தூக்கும் விவசாயிகள் வாதாடத்தொடங்கிவிட்டர்கள். கரும்பில் இருந்து மின்சாரம் எடுக்கிறீர்கள்; சாராயம் காய்ச்சுகிறீர்கள்; காகிதம் செய்கிறீர்கள்; வெறும் காட்டுக்கருவேல மரம் ஒரு டன் 2,500 க்கு விற்கும்போது கரும்புக்கு ஏன் 2,000 ரூபாய் கொடுக்கக்கூடாது என்று ஆணிஅடித்தாற்போல விவசாயிகள் கேட்கிறார்கள். சாராய வியாபாரத்தால் இலவசங்களை அள்ளி வீசும் நீங்கள் ஏன் அதனுடைய மூலப்பொருள் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கொடுக்கக்கூடாது? தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கூடுதல் விலை கொடுக்கும் அரசு, மூலப்பொருளான கரும்புச்சக்கையின் சொந்தக்காரனுக்கு கூடுதலாக ஏன் காசு கொடுக்கக்கூடாது?....இப்படியெல்லாம் கோரிக்கைகள் வளர்ந்துகொண்டே போகின்றன. மாற்றுவழி தேட வேண்டாமா? பழக்கப்பட்ட காரியத்தை கையிலெடுத்துக்கொண்டதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது...அதுதான் அந்த உண்டியல் வசூல். போகட்டும்...உண்டியல் குலுக்கும் ஓசை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் எதுசொன்னாலும் தமிழினத்துரோகியாகிப் போய்விடுவான்.

இத்தனை சந்தடியிலும் ஒரே ஒரு குரல்மட்டும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று மிகத்துணிவாக கூறிவருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பிழையாகப்பேசும் இந்த குரலுக்குரியவரை வெறுப்பாகப்பார்த்தாலும் சொன்னதையே திருப்பிச்சொல்லும் துணிச்சல் பாராட்டுக்குரியது.

சினிமாக்காரர்கள் இப்போது நிதி திரட்டியிருக்கிறார்கள். காசோலை வைத்திருப்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டார்கள். இனிமேல் தொழிலதிபர்கள் வரிசையாக வருவார்கள்; அப்புறம் அதிகாரிகள்; அதற்குப் பின்னால் சங்கங்கள்; அரசு ஊழியர்களும் வருவார்கள் வழக்கமான ஒருநாள் ஊதியத்தோடு.

ஆனால் அண்ணாவின் முன்னிலையில் அன்று வைக்கப்பட்ட ஆடு, கோழி, பறங்கிக்காய் போன்ற எதையும் யாரும் கொண்டுவரமாட்டார்கள். அப்படிவைக்ககூடியவர்கள் எல்லாம் இப்போது வெகுதொலைவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்டியல் குலுக்கும் ஓசை மக்களவைத்தேர்தல் வரை ஓயாது. காசுகள் குலுங்கும் இந்த ஓசை உணர்வுகளின் ஓசை. நாம் என்ற உணர்வை தட்டியெழுப்பும் முயற்சி இது. சிந்தாமல் சிதறாமல் அதிகாரத்தை கைமாற்றிவிட உதவும் ஓசை இது. ஈழத்தமிழனுக்கு உதவும் ஓசை இதுவல்ல.

cauverynagarwest@gmail.com
*************************

Thursday, March 12, 2009

பெற்றுப் பிழைத்துவரும் பெண்சாதி...

வளையல்காப்பு போட்டவுடன் பிறந்தவீட்டுக்குப்போகும் கர்ப்பிணிப்பெண்களுக்காக பெரியவர்களின் அனிச்சையான வேண்டுதல்:

"இவள் நல்லபடியாக பெற்றுப்பிழைத்துவரணும் ஆண்டவனே!"

கர்ப்பிணிப் பெண்களுக்கெல்லாம் பொதுவான வேண்டுதல்தான் இது.

ஆனால் இந்தியப்பெண்களுக்கு அவசியமானது.

இல்லையென்றால் ஐக்கியநாடுகளின் சிறப்பு அறிக்கையில் இந்தியாவின் பேறுகால மரணங்களைக்குறித்து கவலை தெரிவிக்கப் பட்டிருக்கவேண்டியதில்லை அல்லவா?

உலகத்தில் நடைபெறும் பேறுகால மரணங்களில் இருபது சதவீத மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறதாம்.

அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு தாய் பிரசவ அறையில் மரணத்தை சந்திக்கிறாள்.

இத்தனைக்கும் இந்திய அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு செய்துள்ள நிதி ஒதுக்கீடு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. தற்போது 3.0 சதவீதமாக உள்ளது.

அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் எது தெரியுமா?

நிதியை முழுமையாக பயன்படுத்துவதில் இருக்கும் தடைக்கற்களாம்.

அது என்ன தடைக்கற்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அரசுநிர்வாகத்தில் உள்ள இரண்டாயிரம் சமுதாய நலக்கூடங்களுக்கு 6,000 பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் வெறும் 700 பயிற்சிபெற்ற மருத்துவர்களே இருக்கிறார்கள். ஆனால் தனியார் துறையில் 20,000 பயிற்சிபெற்ற மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு சேவைசெய்வதில் தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சமூகப் பொறுப்பும் அக்கறையும் வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை.

மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யப்போவதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும் மாணவ மாணவிகள் ஏன்தான் மனம்மாறிப் போனார்களோ?

கர்ப்பிணிப்பெண்களிடம் அதிகமாக காணப்படும் அனீமியா எனப்படும் இரும்புச்சத்து குறைபாடு தான் பேறுகால மரணங்களுக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பப்பெண்கள், படித்த பெண்மணிகள், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் இவர்களிடம்கூட இந்த இரும்புச்சத்து குறைபாடு நோய் காணப்படுகிறது என்பதுதான் அதிசயம்.

பெண்கள் இதுகுறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. பள்ளிக்கூட பருவத்திலேயே பெண்பிள்ளைகள் இந்த நோய்க்கு ஆளாகிப்போனதுதான் சோகம். கருத்தரித்த பெண்களில் முக்கால்வாசிப்பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் அனீமியா நோயால் ஏற்படும் மரணங்கள் மட்டும் எண்பது சதவீதம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 5 கிராம் / டெசி லிட்டருக்குக் குறையும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பேறுகால மரணங்களைப்பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை என்பது ஒரு அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

பேறுகால மரணங்களுக்கு அனீமியா அல்லாத வேறு காரணங்களும் உள்ளன. முடிவெடுப்பதில் தாமதம், மருத்துவ வசதிக்காக பிரயாணம் செய்யவேண்டியிருத்தல், போக்கு வரத்து வசதியின்மை காரணமாகவும் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன.

போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில், ஏழைக்குடும்பங்களில், பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படுமானால் அவர்கள் மவுண்ட்ரோட்டில் மாட்டிக்கொண்ட அணில் குஞ்சு மாதிரி தவித்துத்தானே போவார்கள்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

கலாமிடம் பாராட்டு பெறுவது சாதாரணமல்ல. அவருடைய ஆசையையும் அதே நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது அன்புமணிக்கான செய்தியாகத்தான் கருத வேண்டும்.

புகையிலை தடை சட்டம், மது ஒழிப்பில் ஆர்வம் போன்ற செயல்பாடுகளால் அமைச்சர் அன்புமணி பாராட்டுக்கு உரியவராகியிருக்கிறார்.

பேறுகால மரணங்களை தடுப்பதில் அன்புமணி முழுமையான ஆர்வம் காட்டினால் அவருடைய புகழ் தொப்பியில் இன்னுமொரு வண்ண இறகு நிச்சயம் சேர்ந்துகொள்ளும்.

நாட்டின் எந்தெந்தப்பகுதிகளில் பேறுகால மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, மரணத்தை உடனடியாக பதிவுசெய்யுமாறு உத்தரவிடவேண்டும்.

பேறுகால மரணம் சம்பவித்த குடும்பங்களில் நேர்காணல் நடத்தி உடல்நல மற்றும் சமூக காரணங்களை கண்டறிய வேண்டும்.

கிடைத்த விவரங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காணவேண்டும். கிடைத்த முடிவுகளை மீண்டும் சமூகக்குழுக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அதிகாரிகள் அனைத்து நடைமுறைகளையும் கண்காணிக்க வேண்டும்.

குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை.

வேதனையும், வெறுப்பும், சலிப்பும், இன்பமும், துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது.

பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப் பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண்.

ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர்.

"பிறக்குபோதே அம்மாவை விழுங்கிய துக்கிரி" என்கிற அபாண்டமான பழிச்சொல் நம்மில் சிலருக்கு இருக்கலாம்.

அப்படியொரு பழிச்சொல் எந்த மனிதருக்குமே ஏற்படாதவாறு நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆனதைச் செய்வோம்.

பீமா மூங்கில்...பிரமாதமான மூங்கில்

ஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.

பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக்கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம்.

ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.

இப்போது உலகம் வெப்பமடைவதற்குக்காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள், அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.

அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய்.

அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப்பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய்.

நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக்கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும்.

மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.

பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச்செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை.

அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப்பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்.

மேலும் படிக்க...

http://www.hindu.com/2008/08/04/stories/2008080458100200.htm

நன்றி: தினமணி கதிர்/07.09.2008

Tuesday, March 10, 2009

ஊழல் பாலத்திற்கு ஒரு 'செக்'

ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா?

இது என்ன கேள்வி? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.

கடந்த ஆகஸ்டு மாதம் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாக கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.

இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?

அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு.
பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்துபார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.

பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச்செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதுதான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.

பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்.

"பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம்" என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறது.

கூடவே, "தடையாணைகள் இருக்கிறதும் எனக்குத்தெரியும்" என்ற குரலும் கேட்கிறது.

"வாத்தியருங்கதான் சொன்னாய்ங்க."

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன.

தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.

தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி.

தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி.

வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிறமாதிரி
லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது.

கனவில் கூட அத்வானி பிரதமராகமுடியாது என்கிறார் லாலு.

மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது.
'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.

'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.

'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று
கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...

'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு
நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...

"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை.
சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது
காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ்.

பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக
காத்திருக்கின்றன.

வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?

இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி' கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன.
"மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..?"
இது அதிகார மையங்களின் கட்டளை.

'பீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது.

தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை.
பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன.

விலைவாசி ஏன் உயர்ந்தது?

விலைவாசியைக்குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது?

நீயும் தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்? நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?

மதுக்கடையை ஏன் திறந்தாய்? மணல்கொள்ளையில் ஆதாயமா? பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.

அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார்.

மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"

"இல்லேப்பா, காலேஜு இல்லை."

"என்னடா ஆச்சு?"

"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம்
வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"

"எப்போ வருவாங்களாம்?"

"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம்.
அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டாய்ங்க."

"யாருடா சொன்னது?"

"வாத்தியருங்கதான் சொன்னாய்ங்க."

"அது என்னடா வாத்தியாருங்களெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"

"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க. அது பலக்கமாயிப்போச்சு"

"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"

"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும்.
கத்துக்குடுவேன்."

Monday, March 9, 2009

ஓட்டுப் போட்ட சனங்களும் ஒட்டுப் போட்ட சாலைகளும்

சாலையில் இடதுபக்க ஓரமாக போகவேண்டும் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததும் மறுப்பு சொல்லாமல் நாம் கேட்டுக்கொண்டதும் அந்தக் காலம்.

''இடதுபக்கத்தில் பள்ளம் தோண்டியிருந்தால் என்ன செய்யவேண்டும்'' என்ற நியாயமான கேள்வியை சிறுவர்கள் கேட்பது இந்தக் காலம்.

சாலை பாதுகாப்பு வாரம் என்பதெல்லாம் பம்மாத்து வேலை.

''சாலைகளுக்கு பாதுகாப்புவாரம்'' கொண்டாடுவோம் என்று சொன்னால் நாமும் அதில் சேர்ந்து கொள்ளலாம். நம்முடைய ஊர்களில் உள்ள சாலைகளின் அவலநிலையைப்பற்றி வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் வாய்விட்டுச்சொல்லிக் கேட்க நமக்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிப்போனபிறகு அங்குள்ள ஊடகங்களில் நம்முடைய பிச்சைக்காரர்களின் பெருமைகளையும், குப்பைக் கூளங்களின் சிறப்பையும், அரசு இயந்திரம் சோம்பல் முறிக்கும் சுறுசுறுப்பையும், கண்ட கண்ட இடங்களில் காறித் துப்பும் கலாசாரத்தையும் கிழிகிழி என்று கிழித்தவுடன் நம்முடைய ஊர்ப் பத்திரிக்கைகாரர்கள் அதையெல்லாம் பொறுக்கியெடுத்து அச்சடித்து காசாக்கும் திறமையை நாம் தெரிந்துகொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.

நம்முடைய ஊரில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதை நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர விருப்பப்படுவதாகவும் வைத்துக் கொள்வோம். மனுவாக எழுதி அதிகாரிகள் கையில் கொடுத்து பைல் மூட்டைக்குள் அதற்கு சமாதி கட்டுவது ஒரு வழி.

ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டி ஓட்டுப் பொறுக்கும் அரசியல் பிரதிவாதிகளின் அடிவயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்துவது மற்றொருவழி.

இந்த இரண்டாவது வழியை கையிலெடுத்துக் கொள்ள எத்தனை ஊடகங்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் இன்று சம்மதிக்கும் என்பதில்தான் இந்த சனநாயகத் தூணின் வலிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமா?
அதற்கென ஒரு அதிகாரி இருக்கிறார்.

நகரத்தில் உள்ள ஒரு சாலையை சரிசெய்ய வேண்டுமானால் அதற்கு வேறு ஒரு அதிகாரி இருக்கிறார்.

மாநகரத்தில் உள்ள ஒரு சாலைக்கு இன்னும் பெரிய அதிகாரியும் மாநிலங்களை இணைக்கும் சாலைக்கு மிகமிக பெரிய அதிகாரியும் இருக்கிறார்.

இப்படி பல அதிகாரிகளை உண்டாக்கினால் பல அலுவலகங்களை உண்டாக்கலாம். பிரச்சினைகளை சிக்கலாக்கலாம். மக்களைக் குழப்பலாம். நாலு காசு பார்க்கலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அதிகாரிகள் வேறுவேறு என்றாலும் அவர்களை இயக்கும் அரசியல் பிரதிவாதி ஒருவராகவும் அவருடைய கையாட்கள் பலகிளைகளாக பிரிந்து இருப்பதும்தான்.

நம்முடைய நிதியமைச்சர்கள் புதுப்புதுவரிகளை கண்டுபிடிப்பதில் நிபுணர்கள்.

ஒருவர் விற்பனை வரி கண்டுபிடித்தார்.

வேறொருவர் நூலக வரி கண்டுபிடித்தார்.

அப்புறம் ஒருவர் கல்வி வரி கண்டுபிடித்தார்.

அதற்கப்புறமாக சர்சார்ஜ் என்ற ஒன்றை கண்டுபிடித்தார்கள்.

இப்போது சேவை வரி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நூலக வரி நம்முடைய நூலகங்களில் எந்த அளவிற்கு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

எல்லா விற்பனைகளும் விற்பனை ரசீதுப் புத்தகத்திற்குள் அடங்கியிருக்கிறதா?

கல்வி வரியால் ஓட்டல்களில் மேசை துடைக்கும் பையன்களுக்கு கல்வி கொடுக்க முடிந்திருக்கிறதா?

ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிக்கூடங்கள் மறைந்துபோய்விட்டனவா?

சேவைவரி குவிந்துபோய் அதை என்னசெய்வது என்று திகைக்கும் காலம் வரப்போகிறது.

இந்த நிதியமைச்சர்கள் சாலை மேம்பாட்டிற்கென ஒவ்வொரு ஆண்டும் பெரும் தொகையை ஒதுக்குவது உண்மைதான். ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாகவும் முறையாகவும் செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு தணிக்கைத் துறையும் உண்டு.

இந்த நடவடிக்கைகளில் ஓட்டையும் உண்டு.

நிதியமைச்சர்கள் ஒதுக்கும் தொகையில் ஒரு பகுதி ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தவும் அதிகாரிகளின் ஆடம்பர செலவுகளுக்கும் பயன்படுகிறது.

கட்சி வேறுபாடெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.

இந்தப் பணம் முறையாக செலவிடப்பட வேண்டும் என்பதும் முழுமையான பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் நம்முடைய கவலை.

அதைத் தூண்டுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஒரு கிராமத்தில் ஐந்து கிலோ மீட்டருக்கு சாலை போட வேண்டியிருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த ஐந்துகிலோமீட்டர் சாலையை போடும் காண்ட்ராக்ட் ஐந்து நபர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படவேண்டிய அவசியம் என்ன?

சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்படியும் கட்சியின் ஆரவாரங்களுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?

இதனுடைய விளைவாகத்தான் சாதாரண மழைக்குக் கூட பல்லை இளிக்கும் சாலைகள், அப்புறம் சிறுகுழிகளாகி, பெரும்பள்ளங்களாகி, பலரின் எலும்பை நொறுக்கி, சிலரின் உயிரைப் பறித்து, மனுகொடுத்து, தோற்று, சாலை மறியல் செய்து, சாலையில் நாற்று நட்டு அப்புறமாக எஸ்டிமேட்போட்டு காண்ட்ராக்ட் விட்டு மீண்டும் அதே கதை மறுபடியும் தொடருகிறது.

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டவுடன் கண்காணிப்புப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற என் பால்யகால நண்பரை அணுகினேன். அவருக்கு என் கவலை புரிய வேண்டுமென்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் வரிசையில் உள்ள அதிகாரிகள் குடியிருக்கும் ஒரு பிரதான சாலை வழியாக பேசிக்கொண்டே நடந்தோம்.

பாதாளசாக்கடை மூடிகள் அரைஅடி உயரத்திற்கு விம்மி நின்ற அந்த சாலையின் ஒட்டு வேலைகளில் எத்தனையோ இருசக்கரவாகனங்கள் நிச்சயமாக தடம் புரண்டிருக்கும். எத்தனை புதுமணத் தம்பதிகளோ! எத்தனை பள்ளிக்குழந்தைகளோ! இதற்கெல்லாம் அரசின் புள்ளிவிவரம் உண்டா என்ன?

''என்ன ராஜா! ஏன் இப்படியெல்லாம் இருக்கிறது?''

ராஜா-அவர்தான் என் நண்பர் சொன்னார்....

''நாங்கள் எஸ்டிமேட் போட்டு அரசுக்கு நிதிகேட்டு அறிக்கை அனுப்புவோம். அரசாங்கத்தில் இருந்து நிதி கிடைக்கும்போது கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிடும். எந்த ஒரு ஒப்பந்தக்காரரும் வேலையை எடுத்துச் செய்ய முன்வராதபோது நாங்களே ஒப்பந்தக்காரர்களின் கையை காலைப் பிடித்து மார்ச் மாதத்திற்குள் வேலையை முடித்துவிடுவோம்.''

''ஒப்பந்தத் தொகையில் ஒரு பகுதி அரசியல் பிரதிவாதிகளின் தலையீட்டால் கையிலே காசு வாயிலே தோசை என்ற எழுதப்படாத கொள்கை அடிப்படையில் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.''

''அந்தத் தொகைதான் அலங்கார வளைவுகள், ஆடம்பர மேடைகள், செயல்வீரர் கூட்டங்கள், மாட்டுக்கறி பிரியாணி, பேரணிகள் என்ற போர்வையில் மீண்டும் மக்களுக்கே சென்றுசேரும்.''

''எங்களைப் போன்ற அதிகாரிகள் ஆடம்பர ஓட்டல்களில் தங்குவதற்கும் அரசியல்பிரதிவாதிகளுக்கு தேவையான சப்ளை அண்ட் சர்வீஸ் செய்வதற்கும் கொஞ்சம் பணம் போய்ச்சேரும்.''

''அதெல்லாம் தெரிந்ததுதான் நண்பரே! இந்த சாலை இப்படி இப்படி இருக்கிறதே! பள்ளிக்கூட பிள்ளைகள் போய்வரும் சாலையாயிற்றே! இதற்கு என்ன வழி?''

''இதோ பாருங்கள்.....மாவட்டத்தின் பெரிய அதிகாரிகள் போகும் ஜீப்புகளே இந்த பள்ளத்தில் விழுந்து நொடித்துக்கொண்டு போகும்போது உங்களுக்கு என்ன?

நம்முடைய ஆசிரியர் சொன்னபடி சாலையில் இடது பக்க ஓரமாக போங்கள்.

பள்ளம் இருந்தால் தாண்டிப்போங்கள்.

தாண்டமுடியாவிட்டால் இறங்கிப்போங்கள்.

அதற்கப்புறம் நான் பேசவில்லை.

குதிரைமேல் ஏறிக்கொண்ட ஜனநாயகம்

அரசே, நலம். நலமறிய ஆவல்.

செங்கோட்டையில் குதிரை வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட வியாபாரிகள் சென்னைக் கோட்டையில் ஆர்ப்பரித்திருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. இது கோட்டைக்கு வெளியில் நடக்கிற வெட்டுக்குத்து. இந்த பலூன் மிரட்டலுக்கெல்லாம் நீங்கள் பயப்படமாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும். வேண்டிய ஊசிமருந்து டெல்லி அன்னையிடம் இருக்கிறது என்பதும் உங்களுடைய கண் ஜாடையில் அது குத்தியேற்றப்படும் என்பதும் எனக்குத்தெரியும்.

சிவப்பு நாடாவிற்குள் ஃபைல்கள் மூச்சு முட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு பிடிக்காது என்று படித்ததும் எனக்கு புல்லரித்துப்போனது.

உங்களுக்குப்பிடிக்காத ஒன்று சில அரசு ஊழியர்களுக்கு பிடித்திருக்கிறதே? அது ஏன்? அதையும் கொஞ்சம் கண்திறந்து பாருங்கள் அரசே!

நீங்கள் சிரமத்தில் இருப்பது எனக்குத்தெரியும்.

நான் நலமாக இருக்கிறேனா என்று நீங்கள் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமில்லை.

நான் நலமாக இருப்பதால் தான் தங்களுக்கு வரி, வாய்தா எல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீர்கள்.

சின்னத்திரைக்கு ரூபாய் கொட்டிக்கொடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் ரூபாயைக் கொட்டி ஆதரவை அள்ளுகிறீர்கள்.

அவர்கள் அழுகையைக்கொட்டி ரூபாயை அள்ளுகிறார்கள்.

நாங்கள் வரியைக்கொட்டி அழுகையை அள்ளுகிறோம்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சின்னத்திரைக்கு விருது கொடுத்தமாதிரி, தமிழ்நாட்டில் அதிகமான விற்பனையைக்காட்டும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு விருது கொடுத்தால் என்ன?

வருமானமும் கூடும். அழுகையும் கூடும்.

சின்னத்திரை அழுகையைக்காட்டிலும் இந்த அழுகை ரொம்பவும் "ரியல்" ஆக இருக்கும்.

நாலுகால் பாய்ச்சலில் நமது நாடு

அரசே, நலம். நலமறிய ஆவல்.

கொடநாட்டில் இருந்து முன்னாள் முதல்வர் சென்னையை நோக்கி பயணப்பட்டுவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் சென்னையில் நடுக்கம்... பூமகளுக்குத்தான் அரசே... நான் சொல்ல வந்தது நிலநடுக்கத்தை.

"நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது."

அப்படித்தான் ஆட்சிக்கட்டில் சொல்லுகிறது. விஷயமறிந்த அமார்த்தியசென் வேறுவிதமாக சொல்லுகிறார்.

மூன்று கொடுமைகளாம்...அரசுகள் கவனிக்கத்தவறிவிட்டனவாம்...ஏழைக்குழந்தைகளுக்கு ஊட்டமான உணவில்லையாம்...அடிப்படை மருத்துவ வசதி இல்லையாம்...தரமான ஆரம்பக்கல்வி இல்லையாம்.

வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பிச்சையெடுக்கும் குழந்தைகளைப்பார்த்தால் அவர் சொல்லுவதில் உண்மை இருக்கும்போல் இருக்கிறது அரசே! ஓட்டல்களிலும், சிறு தொழில் கூடங்களிலும் வேலைசெய்யும் சிறுவர்களைப்பார்க்கும்போதுகூட அவர் சொன்னது சரியாக இருக்கும் போலத்தெரிகிறது அரசே!

கல்வித்துறையில் ஒரு லட்சம்கோடி கள்ளப்பணம் புழங்குகிறதாமே? அமார்த்தியசென் சொன்னது சரியாக இருக்குமோ?

நாட்டில் முக்கால்வாசிப்பேர்களின் ஒரு நாளைய வருமானம் வெறும் இருபது ரூபாய்க்கும் கீழே என்று அரசாங்க புள்ளிவிவரம் சொல்லுகிறது. ஊழல் மாநிலங்களில் தமிழ்நாடு 12 வது இடத்தில் இருக்கிறதாம். "ஏழைகளை ஏழைகளாகவே வைத்திரு" என்பதுதான் அரசியல் கட்சிகளின் அடிப்படை சித்தாந்தமாக இருக்குமோ அரசே!

அரசே! அங்கு இங்கு எனாதபடி இறைவன் இருந்தது ஒரு காலம். அந்த இடத்தை இப்போது ஊழலுக்கு கொடுத்துவிட்டு இறைவன் இறங்கிப்போய்விட்டான் போலிருக்கிறது அரசே!

"ஆண்டாண்டு காலம் அடிமைச்சிறையில் அடைபட்டுப்போயிருந்த ஏழை எளிய மக்களின் கைகளில் ஓர் ஓட்டுச்சீட்டினைக்கொடுத்து அவர்களைத்தேடி ஜமீந்தார்கள், மிட்டா மிராசுகள், படித்தவர்கள், பணக்காரர்கள் எல்லோரும் கெஞ்சிக்கூத்தாடி ஓட்டுக்கேட்கும் நிலைமையை உருவாக்குவேன்" இது பண்டித நேரு சொன்னது.

அவருடைய கட்சிக்காரரின் இன்றைய முழக்கம் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது அரசே!

"இன்றைய நிலை வேறு. தனித்தனியாகப்போய் ஓட்டுக்கேட்ட காலம் கடந்தகாலம். கூட்டணியாகப்போய் ஓட்டுக்கேட்பது நிகழ்காலம். வெற்றிபெற்றபிறகு அதிகாரத்தை கூறுபோட்டுக்கொள்வோம். பிணக்கு வந்தால் பிரிந்து போய்விடுவோம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படும் ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது கொள்கை ரீதியான முடிவு."

இந்த முழக்கத்தில் எனக்குப்புரிந்தது இதுதான்:" கூட்டணி என்பது ஓட்டுப்போட்டவனுக்கு நாமம் போடும் வேலை. கூட்டணிக்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை."

காகத்தின் வாயில் இருந்த வடையை தட்டிப்பறிக்க நரிசெய்த சாகசம் பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் தெரியும். பாமர மக்களின் ஓட்டுக்களை தட்டிப்பறிக்க அரசியல் நரிகள் செய்யும் தந்திரங்களைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் நரிகள் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டன. ஒரிஜினல் நரியின் பேச்சை தூக்கிச்சாப்பிட்டுவிடும் இந்தக்கால அரசியல் நரிகளின் மேடைப்பேச்சுக்கள்.

"இல்லாமையை இல்லாமல் செய்வோம்" "வரியைக்குறைப்போம் வசதியைப்பெருக்குவோம்" "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்றெல்லாம் சூளுரைத்து வந்தவர்களின் ஆரம்பகால அலங்கார மேடைப்பேச்சுக்களை இன்றைய இளைய தலைமுறையினர் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஒரே ஒரு சாம்பிள். மைக்முன்னால் நிற்பதாக கற்பனை செய்துகொண்டால் சுவை கூடுதலாகும்.

"கொடிகட்டி வாழ்ந்த தமிழகம், குடிகெட்டுப்போனதை, நான் இடிபட்ட மனதுடன் எடுத்துரைக்கின்றேன்!

நம்முடைய தோழர் காட்டிலே வெட்டப்பட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்.

நாட்டிலே...நடுரோட்டிலே...பட்டப்பகலிலே...பலர் மத்தியிலே வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது, நாம் கட்டிக்காத்த நெறிமுறைகளை கொட்டிக்கவிழ்த்து விட்டதன்றோ?"

இது கொஞ்சம் நாற்றம் பிடித்த விஷயம்...

அரசே நலம். நலமறிய ஆவல்.

ரொம்பநாளாக எழுத ஆசைப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. கொஞ்சம் நாற்றம்பிடிச்ச விஷயம். படிக்கும்போது மூக்கை வேண்டுமானால் மூடிக்கொள்ளுங்கள். மனதை மட்டும் திறந்துகொள்ளுங்கள்.

எவ்வளவோ நவீன கருவிகள் வந்துவிட்டன. இன்னமும் மனிதன் சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கவேண்டியிருக்கிறது அரசே!

தினமும் சாக்கடைக்குள் தலைமுழுகி மலத்தைவாயில் ஏந்தும் துப்புரவுத் தொழிலாளிகளை நினைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது அரசே!

நம்முடைய குடல் நாறிப்போகாமல் கக்கூசுக்குள் தள்ளுவது நம்பாடு! அதற்கப்புறம் அந்தக்கருமத்தை பாதாள சாக்கடைக்குள் தள்ளிவிடுவது துப்புரவுத்தொழிலாளியின் பாடு!

எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு பிரிவு இருக்கும். சாக்கடைக்குள் மலத்தைத் தள்ளும் துறையில் மட்டும் ஆய்வும் ஆராய்ச்சியும் ஏன் செய்வதில்லை? செய்வதற்கு விஷயம் இல்லையா? புதிய கருவிகள் ஏதும் இல்லையா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேடைக்குமேடை நீங்கள் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் மனிதர்கள்தான் மனிதமலத்தை சாக்கடைக்குள் தள்ளிவிடுகிறார்களா அரசே!

அய்யன் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுதினார் என்பதற்காக நாமும் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு அலைவதில்லை.

சாக்கடை அள்ளுவதில் மட்டும் இன்னும் நவீனத்துவம் வரவில்லை. அப்புறம் எப்போது பின் நவீனத்துவம் வரப்போகிறது?

அடைபட்ட சாக்கடைக்குள் மூழ்கி இறந்துபோன தொழிலாளர்களில் பெரும்பாலோரின் வயது 19ல் இருந்து 35 வயதுக்குள் என்கிற புள்ளிவிவரம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது அரசே!

"காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு , என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு" என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.

ஜோதியின் வாக்குமூலத்தில் நீங்கள் ஒரு திரைக்கதை எழுதவதற்கு தேவையான கரு இருப்பது எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் தெரியும். எங்களின் முன்னோடியான உங்களுக்கும் தெரியும்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தேர்தல் நேர வசனங்களும், சுவரொட்டிகளும் எவ்வளவோ உருவாக்கலாம். அந்த சாமர்த்தியமுள்ள எதிர்க்கட்சிதான் இப்போது நாட்டில் இல்லை.

நீங்கள் உருவாக்காத கோஷங்களா, அரசே?

"கூலி உயர்வு கேட்டான் அத்தான்...குண்டடிபட்டு செத்தான்."

"குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?"

"ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"

"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு."

இவையெல்லாம் அந்தக்கால தேர்தல் வசனங்கள். சுவர்களில் எழுதப்பட்டவை; சாலைகளில் கூவப்பட்டவை; எங்களால் விரும்பப்பட்டவை; மாற்றத்தை ஏற்படுத்தியவை.

தமிழ்நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை என்ற அவச்சொல் வேண்டாம் அரசே!

ஜோதியின் குடும்பத்திலும், பிரபுவின் குடும்பத்திலும் கூட புத்திரபாசமும் தந்தைப்பாசமும் இருக்கும் என்பது உண்மைதானே!

அடுத்தமுறை கக்கூசுக்குள் நாம் இருக்கும்போது இந்த ஏழைகளைபற்றிய நினைவு நமக்குள் இருக்கவேண்டும் அரசே!

Sunday, March 8, 2009

அரசியல்வாதியின் வாகனம் கொசு

மூதேவியின் வாகனம் கழுதை. முருகனின் வாகனமோ மயில். விநாயகர் ஏறும் வாகனம் மூஞ்சூறு. அய்யப்பனின் சவாரியோ புலிமேல். சிவபெருமானின் பயணம் காளைமேல். திருமால் ஆரோகணிப்பது கருடன்மேல்.

கடவுளுக்குக் கிடைக்கும் அனைத்து சோடன உபசாரங்களும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் கிடைக்குபோது ஏன் அவர்களுக்கும் ஒரு வாகனம் இருந்துவிட்டுப்போகட்டுமே!

அங்கு இங்கு என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுவே அரசியல்வாதிகளுக்கு பொருத்தமான வாகனம். கொசுவின் ஜாதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் குணம் ஒன்றே.

கொசுக்கள் கொழுக்கும் காலம் அல்லவா இது!

நம்மை இருளில் தள்ளி இரத்தைக் குடிக்கும் கொசுக்கள் கொழுக்கும் காலம் இது. அதிகாலையில் இருள். அந்திவேளையில் இருள். நள்ளிரவிலும் இருள்.

இரவில் உறக்கமிழந்ததால் நமக்கு பகலுறக்கம். இரவெல்லாம் உண்டு களைத்ததால் கொசுக்களுக்கு பகலுறக்கம். நாட்டின் வளத்தையெல்லாம் நாடுகடத்திய கொசுக்கள், உண்ட நிறைவால் உறங்கிக்களிக்கின்றன. அவை உறங்கிக்களிக்கட்டும்.

கொசுக்கள் கொழுக்கும் காலம் இது.

கொசுக்கள் எப்போதும் கூட்டமாக வரும். எல்லைகடந்து வரும் கொசுக்களும் உண்டு. சில கொசுக்கள் பிள்ளைக் குட்டிகளோடு வரும். வாரிசுகளோடு வரும் கொசுக்களும் உண்டு. தனியாக வருகிற கொசுக்களும் உண்டு.

நீங்களெல்லாம் கால்வலிக்க நடக்கும்போது கொசுக்கள் மட்டும் சொகுசுக்கார்களில் ஊர்வலமாக வரும்.

நீங்களெல்லாம் இருட்டில் தவிக்கும்போது கொசுக்கள் மட்டும் விளக்கு வெளிச்சத்தில் ஊர்வலமாகப் போகும்.

உங்கள் பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்பினால் கொசுக்கள் எல்லாம் சேர்ந்து உங்களை கடனாளியாக்கிவிடும்.

நீங்கள் நோய்ப்படுக்கையில் விழுந்தால் கொசுக்களுக்கு கொண்டாட்டம். உங்கள் நகை நட்டுகளை பிடுங்கிக்கொள்ளும்.

உங்கள் ஊரின் வளத்தையெல்லாம் நாடுகடத்தும். உங்கள் ஆடுமாடுகளைக்கூட கொண்டுபோய்விடும். உங்களுக்குள்ள அரிசியைக்கூட விலைபேசி விற்றுவிடும்.

தேர்தல் நேரத்தில் கொசுக்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள்.

விலையேறிப்போனதால் நீங்கள் நிலைமாறிப்போயிருக்கலாம். உங்கள் நிலையறியா கொசுக்கள் கொழுக்கும் காலம் இது.

கொசுக்களுக்கு ஈவு இரக்கமே கிடையாது.

நீங்கள் எப்படிப்புரண்டு படுத்தாலும் உங்கள் இரத்தத்தைக்குடிக்கும் சாமர்த்தியம் அவைகளுக்கு உண்டு.

தேர்தல் காலத்தில் கொசுக்கள் கூட்டமாக வரும். கைகூப்பித்தொழும். பல்காட்டி சிரிக்கும். அது சிரிப்பல்ல. இளிப்பு. நாமெல்லாம் இளிச்சவாயர்களென்று நினைவுபடுத்தும் சிரிப்பு.

கொசுக்களை நீங்கள் ஒழிக்க முடியாது. நீங்கள் ஒழிக்க முயன்றால் அவை கூட்டணியாக சேர்ந்துகொள்ளும். கூட்டமாக இரத்தம் குடிக்கும். கொண்டாட்டம் போடும். சண்டை வந்தால் பிரிந்துபோகும். அதை நிஜமென்று நம்பிவிடாதீர்கள். அது நடிப்பு.

நீங்கள் போர்த்திக்கொண்டாலும் அது காத்து நிற்கும். அதற்குத்தெரியும்...உங்களுக்கு வியர்க்கும் என்பதும்...போர்வை விலகப்போவது நிச்சயம் என்பதும்...

லாபமா? நஷ்டமா?

இது நமக்கெல்லாம் சிக்கலான கணக்கு...அரசியல்வாதிகளுக்கோ மனக்கணக்கு

முதல் பார்வையில் சுலபமான கணக்கு போலத் தெரிந்தது. போட்டுப்பார்க்கும்போது தலைசுற்றுகிறது. கொஞ்சம் உதவி செய்யுங்களேன்!

கணக்கு எண்.1 ரேஷன் கடையில் ஒரு லிட்டர் மண் எண்ணை விலை 9 ரூபாய். ஒரு ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் மண் எண்ணை கிடைக்கும். 5 லிட்டர் மண் எண்ணைக்கு தேர்முட்டியில் கடை வைத்திருக்கும் நல்லதம்பி 95 ரூபாய் கொடுப்பான். நல்லதம்பி அந்த 5 லிட்டர் மண் எண்ணையையும் பக்கத்து டவுனில் கடை வைத்திருக்கும் சத்தியமூர்த்தியிடம் விற்றால் நல்லதம்பியின் கைக்கு 145 ரூபாய் கிடைக்கும். சத்தியமூர்த்தி 5 லிட்டர் மண் எண்ணையையும் குடும்பஸ்தன் குசேலனுக்கு விற்றால் சத்தியமூர்த்தியின் பெட்டிக்கு லஞ்சத்திற்கு செலவழித்தது போக 180 ரூபாய் வந்துசேரும்.

இந்த வியாபாரத்தில் அதிகமாக லாபம் அடைந்தது நானா? நல்லதம்பியா? சத்தியமூர்த்தியா? மண் எண்ணை நான் வாங்காமல் இருந்தால் இந்த லாபம் முழுவதும் யாருக்குப் போகும்?

என்னுடைய வீட்டில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய பெரிய பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய நடுப்பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என்னுடைய கடைசிப்பயலுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது.

எங்கள் எல்லோருக்கும் அடுப்பு ஒன்றுதான். மண் எண்ணை விற்ற வகையில் எங்கள் வருமானம் எவ்வளவு?

கணக்கு எண். 2 ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி விலை 2 ரூபாய். என்னுடைய ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி கிடைக்கும். 15 கிலோ அரிசியை கிலோ ஒன்று 9 ரூபாய்வீதம் பெட்டிக்கடை வைத்திருக்கும் சத்தியபுத்திரன் எடுத்துக்கொள்வான். டவுனுக்குள் அரிசிக்கடை வைத்திருக்கும் உண்மைவிளம்பி அந்த ரேஷன் அரிசியை கிலோ ஒன்று 12 ரூபாய் வீதம் வாங்கி, கிலோவுக்கு 50 பைசா செலவழித்து பாலீஷ் ஏற்றி 19.50 பைசா வீதம் விற்றால் இந்தவியாபாரத்தில் அதிகமாக லாபம் அடைந்தது நானா? சத்தியபுத்திரனா? உண்மைவிளம்பியா?

இந்த ரேஷன் அரிசியை நான் வாங்காமல் போனால் லாபம் முழுவதும் யாருக்குப்போகும்?

ரேஷன் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 1 ரூபாயாக இருந்தால் இரண்டுபங்கு லாபம் கிடைக்கும் என்பது உண்மையா?

கணக்கு எண்.3 அன்னாடங்காச்சியின் குடிசைவீட்டுக்கு இலவச மின்சாரம். ஒரு லைட் மட்டும் போட்டுக் கொள்ளலாம். இப்போது அவருடைய வீட்டிற்குள் 60 வாட் மின்விளக்கு ஒன்றும், மாட்டுக் கொட்டகையில் 100 வாட் மின்விளக்கு ஒன்றும், கட்டிலுக்கு மேல் 80 வாட் ஃபேன் ஒன்றும், மேசைமேல் 65 வாட் டிவி பெட்டி ஒன்றும் இருக்கிறது. 750 வாட் கிரைண்டர் ஒன்றும் அடுப்புக்குப் பக்கத்தில் இருக்கிறது. விளக்குகள் எல்லாம் 8 மணி நேரம் எரியும். ஃபேனும், டிவி பெட்டியும் கரண்ட் இருக்கும்போதெல்லாம் இயங்கும். கிரைண்டர் ஒரு மணிநேரம் இயங்கும். அன்னாடங்காச்சியின் வீட்டுக்கு இலவசமின் இணைப்பு என்பதால் அவருக்கு மின்கட்டணம் இல்லை. மின்கட்டணம் உண்டு என்று அரசு அறிவித்தால் அவர் ஒவ்வொருமாதமும் எத்தனை ரூபாய் மின்கட்டணம் கட்டவேண்டும்?

அவருடைய கிராமத்தில் இலவசமின்சாரம் பெறும் 85 வீடுகள் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் மின்கட்டணம் உண்டு என்று அரசு அறிவித்தால் அதனால் அரசுக்கு லாபமா? நஷ்டமா?

பெண்ணுரிமையை புரட்டிப்போட்ட சுமங்கலித்திட்டம்

மகளிர்தின ஸ்பெஷல் கட்டுரை

நான் கல்யாணி பேசுகிறேன் அரசே.

பராசக்தி கல்யாணி அல்ல அரசே, பண்ருட்டி கல்யாணி.

தமிழர்களுக்கு பிறக்க ஓர் ஊர்; பிழைக்க ஓர் ஊர்; என்றொரு புகழ்பெற்ற வசனம் இருக்கிறது அரசே. அன்று அது ஆணுக்கு மட்டுமே பொருந்திப்போனது. இன்றோ, பெண்ணுக்கும் அதுவே பொருத்தமாகிப் போனது.

வளர் இளம் பருவத்தில் வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தேன் நான். பள்ளிக்கல்வி என்னை வெறுத்தது. குடும்பத்தை வறுமை வாட்டியது. வீட்டில் விளக்கேற்றி வைப்பேனென்றுகூறி, வந்தான் ஒரு கயவன். ஆசை வார்த்தைகள் பேசினான். என்னைப் பெற்றவர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தான் அந்தக்கயவன். குடும்பத்தை குப்பையிலா வீசமுடியும்? ஏற்றுக்கொண்டேன் அந்த சுமையை.

திருப்பூரில் எனக்கு வேலையாம். மூன்றாண்டுகளில் சுளையாக 50,000 ரூபாய் கையில் தருவானாம். என்னுடைய திருமணத்திற்குப் போதுமாம் அந்தத்தொகை....பெயரொன்றும் சொன்னான் அந்தக்களவாணி. ஆம்...'சுமங்கலித்திட்ட'மாம் அதற்குப் பெயர். 'சிலந்திவலைத்திட்டமெ'ன்று பெயரிடவேண்டிய திட்டம் அது அரசே! எட்டு மணி நேர வேலையென்றான். நல்ல உணவும், இருக்க இடமும் இலவசமென்று ஆசை காட்டினான் அந்தக்கயவன். கண்ணியமான தோழிகளும் பணிபுரிவதாகச் சொன்னபோது நம்பிப்போயினர் என் பெற்றோர். ஏன் நானும்தான்! வேண்டும்போது பெற்றோர் வந்து பார்க்கத்தடையில்லையாம். ஊருக்கு வந்துபோக விடுப்பும் உண்டு என்று அந்தக்கயவன் சொன்னபோது, 'ஆகா தமிழ்நாடு ஆனந்த பூமியாகிப்போனது' என்று எங்கள் மொத்தக் குடும்பமுமே ஆனந்தப்பள்ளு பாடினோம் அன்று.

தமிழர்களுக்கென்று தலைவிதி எழுத, பிரம்மா தனியாக எழுதுகோல் வைத்திருப்பான் போலிருக்கிறது அரசே!

சொந்தநாட்டை விட்டு வேலையில்லாத் திண்டாட்டத்தினால் துரத்தியடிக்கப்பட்ட குணசேகரன்களும், சந்திரசேகரன்களும், கொளுத்தும் வெய்யிலிலும், நடுங்கும் குளிரிலும் படுகிற பாட்டை என்னைப் போன்ற கல்யாணிகளும் பட்டுத்தொலைக்கட்டும் என்று அந்த பிரம்மன் எழுதிய எழுத்தை எந்தப்பகுத்தறிவாளனாலும் மாற்றமுடியாது அரசே!

நான் பட்ட துயரத்தை எழுதி, உங்களுடைய சுகமான வாழ்வில் சோகத்தைக்கொண்டுவர எனக்கு இஷ்டமில்லை அரசே!

என்னைப்போன்ற ஒரு லட்சம் வளரிளம் பருவப்பெண்கள்...இல்லையில்லை...இளம் சிட்டுகள் கொத்துக்கொத்தாக கோவையிலும், ஈரோட்டிலும், திருப்பூரிலும் பஞ்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இல்லையா?

அவர்களுக்காகவாவது நான் இதை எழுதித்தானே ஆகவேண்டும்?

நாலெழுத்து படித்தவள் அல்லவா நான்?

உண்மையை ஊருக்குச்சொல்லாமல் விட்டால் அது பாவம் இல்லையா?

படித்தவள் பாவம் செய்தால் அம்போ என்று போய்விடுவாள் என்றல்லவா என்னுடைய தமிழய்யா சொல்லிக்கொடுத்திருக்கிறார்!

பஞ்சாலையில் வேலை. பதவிப்பெயர் 'அப்ரண்டீஸ்'. மூன்றே வருடங்கள்தான் காண்ட்ராக்ட். அதற்கப்புறம் வேலை இல்லை. என்னை வேலைக்குச்சேர்த்துவிட்ட கயவனுக்கு கிடைத்த கமிஷன் 500 ரூபாய்.

எங்கள் கனவுகளும் பஞ்சோடு பஞ்சாகட்டும் என்றுதான் பிரம்மன் எங்களுடைய தலைவிதியை பஞ்சாலையில் எழுதிவைத்தானோ? அங்கே நடப்பது என்ன தெரியுமா? 24 மணிநேரமும் வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் 12 மணி முதல் 16 மணிநேரம் வரை கடுமையாக வேலை செய்யவேண்டும். பத்தடிக்கு பத்தடி தான் எங்களுடைய அறை. பத்துபேர் அடைந்து கிடக்கவேண்டிய அறை அது. கக்கூஸ் வசதியெல்லாம் வானத்திற்குக்கீழேதான். உணவைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. வெந்ததைத்தின்கிறோம். விதிவரும்போது சாகக் காத்திருக்கிறோம். மூன்று நாட்கள் காத்திருந்த பிறகே என்னுடைய அப்பா என்னை சந்தித்த நாளை நான் மறக்க முடியுமா? என்னைத்தேடி வந்தவன் கயவன் என்பதை அங்கே போனபிறகுதான் நான் தெரிந்துகொண்டேன். பாலியல் நாட்டம் உள்ள பாதகன் அவன் என்பதை!

முதல் மூன்று மாதங்கள் பயிற்சி மாதங்களாம். நாளொன்றுக்கு சம்பளம் 34 ரூபாய். சாப்பாட்டு செலவிற்கும், இருப்பிட வாடகைக்கும் 20 ரூபாய் எடுத்துக்கொண்டார்கள். முதலாளிகளின் கண்காணிகள் எங்களைச்சுற்றிலும் எப்போதும் உண்டு. இரவு நேரத்திலும் எங்களை வேலைக்கு அழைப்பார்கள் அந்தக்கொடுமைக்காரர்கள். பெண்களை உறக்கத்திலும் எழுப்பி வேலைக்கு அழைக்கும் கொடுமை தமிழ்நாட்டில் தான் அரசே! நம்புங்கள்!

ஆண்டுக்கு 'இங்க்ரிமெண்ட்' கூட உண்டு. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியடையாதீர்கள். வெறும் இரண்டு ரூபாய். நீங்கள் வெற்றிக்காக காட்டிச்சிரிக்கும் அந்த இரண்டு விரல்கள்! என்னுடைய மாதச்சம்பளம் எப்போதுமே 1500 ரூபாயைத்தாண்டியதில்லை.

இந்தக்கல்யாணி, சொந்த வீட்டில் பொங்கல் கொண்டாடி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அரசே! நம்புங்கள்.

இந்தக்கொடுமைக்கு யார் யாரெல்லாம் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத்தெரியவேண்டுமா அரசே!

மேடையில் எதுஎதற்கோ விரலை அசைக்கும் நீங்கள், எங்களுக்கு இழைக்கப்படும் இந்தக்கொடுமைக்கு எதிராக ஏன் உங்களுடைய சுட்டுவிரலைக்கூட அசைப்பதில்லை என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை அரசே!

நான் மூன்றாண்டுகள் பல்லைக்கடித்துக்கொண்டு வேலைசெய்துமுடித்தேன். எனக்கு 30,000 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். சொந்த ஊரிலிருந்து சிட்டாகப்பறந்து போன நான் இன்று சிறகொடிந்த பறவையாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறேன். பஞ்சாலை வேலை என்னுடைய உடலை பஞ்சாகவே மாற்றிவிட்டது. இந்த உலகத்திலிருந்து பறந்துபோகத்தான் இஷ்டம். பகுத்தறிவாளர்கள் முடங்கிப்போனதால் பிரம்மதேவன் இஷடத்திற்கு எழுதிவைக்கிறான்...எங்களைப்போன்ற ஏழைகளின் தலையில்.

சுமங்கலித்திட்டம் என்னை கைநீட்டி கூவிஅழைத்தது ஒருகாலத்தில். இன்றுநான் வெளுத்துப்போன உடலை சுமந்திருக்கும் ஒரு எலும்புக்கூடு. யார் வருவார் என்னைத்தேடி?

இடையிலேயே மதில்சுவர் ஏறி ஓடிவந்த பெண்களும் உண்டு. அவர்கள் அடிபட்டு உதைபட்டதையும் நான் பார்த்ததுண்டு.

அய்யா கனவானே! சுமங்கலி என்ற பெயர் உங்களுக்குப்பிடிக்காமல் போயிருக்கலாம். நான் சொல்லும் சுமங்கலி கம்பிவட சுமங்கலி இல்லை. உலகமயமாக்கல் கள்ளத்தனமாக பெற்றுப்போட்ட நச்சுக்குழந்தை. பெண்ணியச்சுரண்டலின் வேறு பெயர்.

கொஞ்சம் விழிப்பீரா அரசே! எங்கள் குறையைப் போக்குவீரா அரசே!