Thursday, March 5, 2009

உங்களுக்கும் ஒரு விசிறி மட்டை

“உஸ்...அப்பாடா! காலெல்லாம் வீங்கிப்போயிற்று"

"தொண்டை வலிக்கிறது."

"குரல் கம்மிப்போயிற்று."

"கையெல்லாம் நோவு."

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? கர்மவீரர் ஆயிற்றே! கல்வி தந்த வள்ளல் ஆயிற்றே! சும்மா இருந்துவிட முடியுமா? சும்மா இருந்தாலும் தமிழக அரசு நம்மை சும்மா இருக்க விட்டுவிடுமா? கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவு.

ஊர்வலமாகப் போனதில் காலில் வீக்கம்.

'காமராஜர் வாழ்க' என்று கூவிக்கொண்டு நடந்ததால் தொண்டையில் வலி.


திருக்குறள், பாரதியாரின் கவிதைகள், மகாத்மா காந்தியின் சுயசரிதை என்று புத்தகங்களை தேடியெடுத்து, தூசுதட்டி பட்டிமன்றத்தில் பேசி, தீர்ப்பு சொன்னதில் உடல் சோர்ந்துபோயிற்று. பேச்சுப்போட்டியில் ஜெயித்தாகிவிட்டது. கட்டுரைகள் எழுதியதில் கைவிரல்களெல்லாம் கடுக்கிறது.

அடுத்த ஜூலை 15 வரை காமராஜருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியாகிவிட்டது.

சிறுவர்களின் எண்ணெய்ப் பசையில்லாத தலையை தடவிப்பார்த்து காமராஜர் வருத்தப்பட்டதெல்லாம் ஒரு காலம். அது வரலாறாகிப்போனது. பணப்பசையுள்ள சிறுவர்களின் தலையைத்தடவி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் காசு பார்ப்பது இந்தக்காலம். எதிர்காலத்தில் இதுவும் வரலாறாகிப்போகும்.
ஆமாம். இப்போதும் இலவசக்கல்விதான். அதுவும் அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே.
54 ரூபாய் ஃபீஸ் கட்ட வழியில்லாமல் போனதால் ஒரு ஹோட்டல் தொழிலாளியின் மகள் மனமுடைந்து போனாள். இங்கேதான்... நம்முடைய ஜெயங்கொண்டத்தில்.

அதுவும்...ஒரு 10 ஆம் வகுப்பு மாணவி.

அதே 54 ரூபாய் செலவழித்து வாங்கி வைத்த மண்ணெண்ணையை
ஊற்றி தீக்குளித்துக்கொண்டாள்.

வாழ்க இலவசக்கல்வி! வளரட்டும் பெண்கல்வி!

ஆண்டு ஒன்றுக்கு 54 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கும் அரசாங்கப்பள்ளிகள் இருக்கின்றன. ஆண்டு ஒன்றுக்கு 54 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. கல்வி வளர்ச்சி நாள் அவசியம் கொண்டாட வேண்டும்.
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடாமல் இருந்துவிடக்கூடாது. கல்வியால், நாமெல்லாம் எப்படி வளர்ந்தோம் என்பதை தெரிந்துகொள்ள மட்டுமல்ல... கல்வியால்...கல்வி வியாபாரிகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் இந்தக்கொண்டாட்டம் அவசியம்.
ஆமாம். இப்போதும் இலவசக்கல்விதான். அதுவும் அரசாங்கப் பள்ளிகளில் மட்டும் தான்.

300 பிள்ளைகள் படிக்கும் அரசாங்கப் பள்ளியில் நூலகவளர்ச்சிக்கு ஆண்டுக்கு 150 ரூபாய் வசூல்.
300 பிள்ளைகள் படிக்கும் அரசாங்கப்பள்ளியில் இலக்கிய வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 150 ரூபாய் வசூல்
300 பிள்ளைகள் படிக்கும் அரசாங்கப்பள்ளியில் சுற்றுலா அழைத்துப்போக ஆண்டுக்கு 150 ரூபாய் வசூல்.

இவையெல்லாம் எவ்வளவு பெரிய தொகைகள்!

இவற்றையெல்லாம் இலவசமாக்கியது எவ்வளவு பெரிய சாதனை!

இந்த 150 ரூபாய்களில் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்கள் நூலகங்களில் சேரும்?
இந்த 150 ரூபாய்களில் ஆண்டுக்கு எத்தனை முறை பேச்சுப் போட்டி நடத்தி பரிசு கொடுக்க முடியும்?
இந்த 150 ரூபாய்களில் எத்தனை மாணவர்களை எவ்வளவு தூரம் சுற்றுலாவாக அழைத்துப்போக முடியும்?
அன்னாடங்காச்சியின் பேரன் எட்டாம் வகுப்பில் படிக்கிறான்.விசிறி மட்டையால் ஆசிரியர் அடித்தாராம். மணிக்கட்டு வீங்கிப்போயிற்று. "நீ வந்து நியாயம் கேட்டால்தான் பள்ளிக்கூடம் போவேன்" என்று சொல்லிவிட்டான் அந்த பிடிவாதக்காரன்.
தலைமை ஆசிரியர் பழக்கமானவர்தான். நேர்மையானவர் என்று ஊருக்குள் நல்ல பெயர். தலைமை ஆசிரியரின் அறைக்குள் வணக்கம் சொல்லிவிட்டு அன்னாடங்காச்சி நுழைந்தார். தலைமை ஆசிரியரின் மேசை மேல் கம்ப்யூட்டர் கூட இருந்தது. அரசாங்கம் பள்ளிக்கூடங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுத்ததாக செய்தித்தாளில் படித்திருந்தார். தலைமை ஆசிரியர் விசிறி மட்டையால் விசிறிக் கொண்டிருந்தார்.
தலைக்குமேல் இருந்த மின்விசிறி சுழலாமல் இருந்தது.
"என்ன சார், மின்வெட்டா?"

"இல்லை. மின் கட்டு.

கரண்டுபில் கட்டவில்லையென்று ஃப்யூஸ் பிடுங்கியெடுத்துக்கொண்டான். ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபாங்கறான். கல்வி 'கமர்ஷியல்' என்று மின்வாரியத்தில் சொல்லுகிறார்கள். மூணு தடவை கைப்பணம் போட்டு கட்டிவிட்டேன். இனிமேல் சம்பளம் வந்தவுடன்தான் கரண்டு பில் கட்டவேண்டும்."

கம்ப்யூட்டர் இடுக்கில் கையைவிட்டு ஒரு விசிறி மட்டையை எடுத்தார் தலைமை ஆசிரியர்.

"இந்தாருங்கள்...உங்களுக்கும் ஒரு விசிறி. விசிறிக்கொள்ளுங்கள். சூட்டை ஆற்றிக்கொள்ளுங்கள்."

No comments:

Post a Comment