Monday, March 2, 2009

கார்பன் டை ஆக்சைடு நல்ல வாயுவா?


காற்று மண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வாயுக்களில் (green house gases) கார்பன்
டை ஆக்சைடும் ஒன்று என்று பார்த்தோம் இல்லையா? கார்பன் டை ஆக்சைடு பூமி
வெப்பமடைய காரணமாக இருக்கிறது என்பதால் அதை தீமை செய்யும் வாயு என்று
தீர்மானித்துவிட முடியுமா?
தாவரங்கள் தங்களுடைய உணவிற்காக யாரிடமும் போய் கையேந்துவதில்லை.
சூரியஒளி, பச்சையம், கார்பன் டை ஆக்சைடு, நீர் இவற்றின் உதவியால் தங்களுக்கு
தேவையான உணவை தாங்களாகவே தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் தாவரங்களுக்கு
இருக்கிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். ஒளிச்சேர்க்கையின்போது
காற்று மண்டல கார்பன், தாவரங்களில் தங்கிவிடுகிறது. தாவரங்களை எரிக்கும்போது
கரி என்னும் கார்பன் மீளவும் நமக்குக் கிடைப்பது இப்படித்தான்.
காற்றுமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது, ஒளிச்சேர்க்கை
யின் அளவு அதிகரித்து தாவரங்களின் வளர்ச்சி வேகமும் அதிகரிக்கிறது என்கிறார்கள்
விஞ்ஞானிகள். அதாவது தாவரங்கள் அழியும் வேகத்தை விட வளரும் வேகம் அதிகமாம்.
இதில் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடு
வாயுவின் அளவைக்காட்டிலும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு காற்றுக்குள்
திணிக்கப்படுகிறது.
வட அமெரிக்காவிலும், கனடாவிலும் செல்போன் கோபுரங்களையும், விமான நிலைய
கோபுரங்களையும் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் காற்றில் இருக்கும் கார்பன் டை
ஆக்சைடின் அளவைக் கண்டறிந்தனர். என்கெல்லாம் கார்பன் டை ஆக்சைடின் அளவு
அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் தாவரங்களின் வளர்ச்சியும் அதிகமாக இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் நாம் மகிழ்ச்சியடைந்து விடக்கூடாது. தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடின்
அளவைக்காட்டிலும் அதிகமான அளவிற்கு கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்திற்குள்
நாம் திணிக்கிறோம் என்பதும், இதன்காரணமாக புவிவெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதும்
நமக்கு நினைவில் இருக்கவேண்டும்.
இன்னும் படிக்க...

1 comment:

na.jothi said...

மிக்க நல்ல பதிவு
//மரங்கள் / தாவரங்கள் உட்கொள்ளும் அளவை விட கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்திற்குள் நாம் திணிக்கிறோம்//

கார்பன் டை ஆக்சைடை வெளியாக்கும் பயன்பாட்டை நம்மால் குறைக்கமுடியவில்லை
கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தும் மரங்களை
நாம் வளர்க்க முயலவேண்டும்
இப்பொழுது நாம் இருக்கும் மரங்களை நிர்மூலமாக்கி நகரங்களை உருவாக்கிகொண்டிருக்கிறோம் ஒரு கிலோமீட்டர்
தூரங்களில் அல்லது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் தூரங்களில் சின்னஞ்சிறு காடுகளை உருவாக்க வேண்டும் இதன் மூலம் ஓரளவு
பயன் கிடைக்கும் என்பது என்னுடைய எண்ணம்

Post a Comment