Sunday, March 8, 2009

பெண்ணுரிமையை புரட்டிப்போட்ட சுமங்கலித்திட்டம்

மகளிர்தின ஸ்பெஷல் கட்டுரை




நான் கல்யாணி பேசுகிறேன் அரசே.

பராசக்தி கல்யாணி அல்ல அரசே, பண்ருட்டி கல்யாணி.


தமிழர்களுக்கு பிறக்க ஓர் ஊர்; பிழைக்க ஓர் ஊர்; என்றொரு புகழ்பெற்ற வசனம் இருக்கிறது அரசே. அன்று அது ஆணுக்கு மட்டுமே பொருந்திப்போனது. இன்றோ, பெண்ணுக்கும் அதுவே பொருத்தமாகிப் போனது.


வளர் இளம் பருவத்தில் வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தேன் நான். பள்ளிக்கல்வி என்னை வெறுத்தது. குடும்பத்தை வறுமை வாட்டியது. வீட்டில் விளக்கேற்றி வைப்பேனென்றுகூறி, வந்தான் ஒரு கயவன். ஆசை வார்த்தைகள் பேசினான். என்னைப் பெற்றவர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தான் அந்தக்கயவன். குடும்பத்தை குப்பையிலா வீசமுடியும்? ஏற்றுக்கொண்டேன் அந்த சுமையை.


திருப்பூரில் எனக்கு வேலையாம். மூன்றாண்டுகளில் சுளையாக 50,000 ரூபாய் கையில் தருவானாம். என்னுடைய திருமணத்திற்குப் போதுமாம் அந்தத்தொகை....பெயரொன்றும் சொன்னான் அந்தக்களவாணி. ஆம்...'சுமங்கலித்திட்ட'மாம் அதற்குப் பெயர். 'சிலந்திவலைத்திட்டமெ'ன்று பெயரிடவேண்டிய திட்டம் அது அரசே! எட்டு மணி நேர வேலையென்றான். நல்ல உணவும், இருக்க இடமும் இலவசமென்று ஆசை காட்டினான் அந்தக்கயவன். கண்ணியமான தோழிகளும் பணிபுரிவதாகச் சொன்னபோது நம்பிப்போயினர் என் பெற்றோர். ஏன் நானும்தான்! வேண்டும்போது பெற்றோர் வந்து பார்க்கத்தடையில்லையாம். ஊருக்கு வந்துபோக விடுப்பும் உண்டு என்று அந்தக்கயவன் சொன்னபோது, 'ஆகா தமிழ்நாடு ஆனந்த பூமியாகிப்போனது' என்று எங்கள் மொத்தக் குடும்பமுமே ஆனந்தப்பள்ளு பாடினோம் அன்று.


தமிழர்களுக்கென்று தலைவிதி எழுத, பிரம்மா தனியாக எழுதுகோல் வைத்திருப்பான் போலிருக்கிறது அரசே!


சொந்தநாட்டை விட்டு வேலையில்லாத் திண்டாட்டத்தினால் துரத்தியடிக்கப்பட்ட குணசேகரன்களும், சந்திரசேகரன்களும், கொளுத்தும் வெய்யிலிலும், நடுங்கும் குளிரிலும் படுகிற பாட்டை என்னைப் போன்ற கல்யாணிகளும் பட்டுத்தொலைக்கட்டும் என்று அந்த பிரம்மன் எழுதிய எழுத்தை எந்தப்பகுத்தறிவாளனாலும் மாற்றமுடியாது அரசே!


நான் பட்ட துயரத்தை எழுதி, உங்களுடைய சுகமான வாழ்வில் சோகத்தைக்கொண்டுவர எனக்கு இஷ்டமில்லை அரசே!


என்னைப்போன்ற ஒரு லட்சம் வளரிளம் பருவப்பெண்கள்...இல்லையில்லை...இளம் சிட்டுகள் கொத்துக்கொத்தாக கோவையிலும், ஈரோட்டிலும், திருப்பூரிலும் பஞ்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இல்லையா?

அவர்களுக்காகவாவது நான் இதை எழுதித்தானே ஆகவேண்டும்?

நாலெழுத்து படித்தவள் அல்லவா நான்?

உண்மையை ஊருக்குச்சொல்லாமல் விட்டால் அது பாவம் இல்லையா?

படித்தவள் பாவம் செய்தால் அம்போ என்று போய்விடுவாள் என்றல்லவா என்னுடைய தமிழய்யா சொல்லிக்கொடுத்திருக்கிறார்!


பஞ்சாலையில் வேலை. பதவிப்பெயர் 'அப்ரண்டீஸ்'. மூன்றே வருடங்கள்தான் காண்ட்ராக்ட். அதற்கப்புறம் வேலை இல்லை. என்னை வேலைக்குச்சேர்த்துவிட்ட கயவனுக்கு கிடைத்த கமிஷன் 500 ரூபாய்.


எங்கள் கனவுகளும் பஞ்சோடு பஞ்சாகட்டும் என்றுதான் பிரம்மன் எங்களுடைய தலைவிதியை பஞ்சாலையில் எழுதிவைத்தானோ? அங்கே நடப்பது என்ன தெரியுமா? 24 மணிநேரமும் வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் 12 மணி முதல் 16 மணிநேரம் வரை கடுமையாக வேலை செய்யவேண்டும். பத்தடிக்கு பத்தடி தான் எங்களுடைய அறை. பத்துபேர் அடைந்து கிடக்கவேண்டிய அறை அது. கக்கூஸ் வசதியெல்லாம் வானத்திற்குக்கீழேதான். உணவைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. வெந்ததைத்தின்கிறோம். விதிவரும்போது சாகக் காத்திருக்கிறோம். மூன்று நாட்கள் காத்திருந்த பிறகே என்னுடைய அப்பா என்னை சந்தித்த நாளை நான் மறக்க முடியுமா? என்னைத்தேடி வந்தவன் கயவன் என்பதை அங்கே போனபிறகுதான் நான் தெரிந்துகொண்டேன். பாலியல் நாட்டம் உள்ள பாதகன் அவன் என்பதை!


முதல் மூன்று மாதங்கள் பயிற்சி மாதங்களாம். நாளொன்றுக்கு சம்பளம் 34 ரூபாய். சாப்பாட்டு செலவிற்கும், இருப்பிட வாடகைக்கும் 20 ரூபாய் எடுத்துக்கொண்டார்கள். முதலாளிகளின் கண்காணிகள் எங்களைச்சுற்றிலும் எப்போதும் உண்டு. இரவு நேரத்திலும் எங்களை வேலைக்கு அழைப்பார்கள் அந்தக்கொடுமைக்காரர்கள். பெண்களை உறக்கத்திலும் எழுப்பி வேலைக்கு அழைக்கும் கொடுமை தமிழ்நாட்டில் தான் அரசே! நம்புங்கள்!


ஆண்டுக்கு 'இங்க்ரிமெண்ட்' கூட உண்டு. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியடையாதீர்கள். வெறும் இரண்டு ரூபாய். நீங்கள் வெற்றிக்காக காட்டிச்சிரிக்கும் அந்த இரண்டு விரல்கள்! என்னுடைய மாதச்சம்பளம் எப்போதுமே 1500 ரூபாயைத்தாண்டியதில்லை.


இந்தக்கல்யாணி, சொந்த வீட்டில் பொங்கல் கொண்டாடி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அரசே! நம்புங்கள்.


இந்தக்கொடுமைக்கு யார் யாரெல்லாம் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத்தெரியவேண்டுமா அரசே!


மேடையில் எதுஎதற்கோ விரலை அசைக்கும் நீங்கள், எங்களுக்கு இழைக்கப்படும் இந்தக்கொடுமைக்கு எதிராக ஏன் உங்களுடைய சுட்டுவிரலைக்கூட அசைப்பதில்லை என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை அரசே!


நான் மூன்றாண்டுகள் பல்லைக்கடித்துக்கொண்டு வேலைசெய்துமுடித்தேன். எனக்கு 30,000 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். சொந்த ஊரிலிருந்து சிட்டாகப்பறந்து போன நான் இன்று சிறகொடிந்த பறவையாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறேன். பஞ்சாலை வேலை என்னுடைய உடலை பஞ்சாகவே மாற்றிவிட்டது. இந்த உலகத்திலிருந்து பறந்துபோகத்தான் இஷ்டம். பகுத்தறிவாளர்கள் முடங்கிப்போனதால் பிரம்மதேவன் இஷடத்திற்கு எழுதிவைக்கிறான்...எங்களைப்போன்ற ஏழைகளின் தலையில்.

சுமங்கலித்திட்டம் என்னை கைநீட்டி கூவிஅழைத்தது ஒருகாலத்தில். இன்றுநான் வெளுத்துப்போன உடலை சுமந்திருக்கும் ஒரு எலும்புக்கூடு. யார் வருவார் என்னைத்தேடி?

இடையிலேயே மதில்சுவர் ஏறி ஓடிவந்த பெண்களும் உண்டு. அவர்கள் அடிபட்டு உதைபட்டதையும் நான் பார்த்ததுண்டு.

அய்யா கனவானே! சுமங்கலி என்ற பெயர் உங்களுக்குப்பிடிக்காமல் போயிருக்கலாம். நான் சொல்லும் சுமங்கலி கம்பிவட சுமங்கலி இல்லை. உலகமயமாக்கல் கள்ளத்தனமாக பெற்றுப்போட்ட நச்சுக்குழந்தை. பெண்ணியச்சுரண்டலின் வேறு பெயர்.


கொஞ்சம் விழிப்பீரா அரசே! எங்கள் குறையைப் போக்குவீரா அரசே!

No comments:

Post a Comment