Thursday, March 5, 2009

குச்சி ப்பி போடாதடீ... குண்டு ப்பி போடுடீ...



தாலிகட்டி குங்குமம் வைத்த கையோடு கணவன் சொன்னான் : "அடியே சகீ! நீ படிதாண்டா பத்தினியாக இருப்பாயாக! நான் முற்றும் துறந்த முனிவனாகி திண்ணையில் இருந்துகொண்டு உன்னுடன்குடும்பம் நடத்துவேனாக!"

குடும்பம் நடத்தவேண்டுமென்றால் வீட்டுக்குள் இருந்துகொண்டு குடும்பம் நடத்தவேண்டும்.

"நீ உள்ளே இருந்து குடும்பத்தை நடத்துடி... நான் திண்ணையிலேயேஉட்கார்ந்து, நீ குடும்பம் நடத்துற லெட்சணத்தை கண்காணிக்கிறேன்"என்பதெல்லாம் கதைக்கு ஆகாத வேலை.

மத்தியில் கம்யூனிஸ்டுகளும், மாநிலத்தில் பாட்டாளிகளும் சொல்லிக்கொடுத்த பாடம் இது. அரியணையேற ஆசைப்படுகிறவர்களுக்கான பாடம்.

கம்யூனிஸ்டுகள் விலகிப்போகும்போது சரியான டைமிங்கில் முலாயம் சிங் தோள் கொடுத்திருக்கிறார். இவரும் திண்ணையில் தான் இருப்பாராம். பேரங்கள்இருக்குமா?... போகப்போகத் தெரியும்.

மூன்றாவது அணிக்கு இப்போதுதான் பெயர்ப்பொருத்தம் வாய்த்திருக்கிறது. நான்கு பேர்கள் தூக்கிப்போன மூன்றாவது அணி இப்பொது மூன்றுபேர்களின் தோள்களில். தூக்கிப்போவார்களா? இறக்கிவைத்துவிட்டுப் போய் விடுவார்களா?... கொஞ்சநாள் போகட்டும். 'கை' பலப்படுமா? 'தாமரை'க்கு மணம் கூடுமா? அதுவும் போகப்போகத்தான் தெரியும்.தாமரையின் மனசெல்லாம் மத்தாப்பூ.

வாசல்கதவை அகலத்திறந்து வையடி! ஜெயதேவி வரட்டும்" என்கிறார்அத்வானி. "மணந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!" என்கிறமாதிரி தெளிவாக இருக்கிறது தாமரை.

அத்வானிதான் என் மணாளன்" கையில் மாலையோடும் கண்ணில்நாணத்தோடும் சொல்லிவிட்டது. பிரதமரை வறுத்தெடுத்த நாற்காலி, அன்னையைப்பார்த்து சிரிப்பதுபோல்தெரிகிறது.

வேண்டுமா இந்த வேதனை?

"பிரதமர் நாற்காலி சூடான நாற்காலி. எனக்கு அது சுகப்படாது" என்று அன்னை முடிவெடுக்கலாம்.

"அடுத்த பிரதமர் யாரப்பா?" ஜனங்கள் கேட்கும்போது கடைசிபெஞ்சு மாணவன்மாதிரி காங்கிரஸ் முழிக்கவேண்டிவரும் போலிருக்கிறது. ரயிலையே ஓட்டிய எனக்கு நாட்டை ஓட்டுவதில் ஒன்றும் கஷ்டமில்லை என்று லாலுகூட நப்பாசைப்படலாம். "கம்யூனிஸ்டுகள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்.அப்படியே சாப்பிடுவேன்" என்ற லாலுவின் வார்த்தைகள் சிரிப்பதற்காக மட்டும்இல்லை. மாநிலத்தில் சிந்தனை வேறு விதமாக இருக்கும்.

ஊழல் புத்தகத்தின் கடைசி அத்தியாயம் வரை படித்து முடித்து முதல் வகுப்பில் பாஸாகிவிட்டோம். ஓட்டுக்கேட்கப் போகும்போது அழுக்குச்சட்டைக்கு மேல் ஒரு வெள்ளைச்சட்டை இருந்தால் நன்றாக இருக்குமில்லையா? அது கம்யூனிஸ்டுகளாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படும் திராவிடக்கட்சிகள் மத்தியில் அமையப்போகும் இரண்டு அணிகளுக்காக காத்திருக்கின்றன. வடக்கே புதுப்புது நேசக்கரங்கள் நீளுகின்றன. பாட்டாளிகளை அனுசரித்துப்போக அறிவுரைவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விடுவிடுவெனெ பிரதமர் அறையில் நுழைந்தவர்களெல்லாம் இனிமேல் காக்கவைக்கப்படலாம்.

சுக்கிர தசையில் சுகப்பட்டவன் சூரியதசையில் அல்லாடாமல் இருக்கமுடியுமா?

நம்ம ஊர்க்கதை வேறு மாதிரி இருக்கிறது. கிராமத்தில் எண்ணெய் செக்கும், டவுனில் புண்ணாக்குக் கடையுமாக இருந்த புண்ணியக்கோடி பாக்கெட் எண்ணெய் வந்தபோது கொஞ்சமாக நொடித்துப்போனார். கால்நடைகள், கால்நடையாகக் கேரளாவிற்குப் போனதற்கப்புறம் புண்ணாக்கு வியாபாரமும் அடிமாட்டைப் போல் படுத்துப்போயிற்று.

அவருடைய புத்திசாலி மகன் செக்கையும் மாட்டையும் விற்றுவிட்டு, நர்சரி பள்ளிக்கூடம் தொடங்கினான்.

அன்று செக்கு ஓடிய இடத்தில் இன்று நர்சரி பள்ளி. அப்பன் எண்ணை பிழிந்த இடத்தில் மகன் காசு பிழிகிறான். அரசுப் பள்ளிக்கூடங்களின் ஆதரவினால் இன்று புண்ணாக்குவிற்ற குடும்பம் கல்வியை விற்று காசு பார்த்துக்கொண்டிருக்கிறது.

மாலைநேரம். பிள்ளைகள் விளையாடும்நேரம். வாசல் திண்ணையில் அன்னாடங்காச்சி உட்கார்ந்திருந்தார்.

மருமகள் சொல்லச் சொல்ல பேத்தி வீட்டுப்பாடம் எழுதுகிறாள். இங்கிலீஷில் B எழுதும் முயற்சி
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

"ஏய்...ப்பி போடுடீ...

இது மருமகளின் அதட்டல் குரல்.
குச்சி ப்பி போடாதடீ... குண்டு ப்பி போடுடீ...

இப்போது ஒலியும் ஓசையும்.
திம்...திம்...

பொறுக்கமுடியாத வலியில் அழுகை. செல்லப்பேத்தி அடிபடுவது அவருக்குபொறுக்கவில்லை.

அன்னாடங்காச்சி எழுந்தார்.

துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டார். ஊர்க்கோடியில் இருந்தஅய்யனார்கோவிலுக்கு வந்தார்.

"அய்யனாரப்பா...நீதான் இந்தக்கொடுமையையெல்லாம் கேக்கணும்!"

1 comment:

கையேடு said...

உங்கள் பக்கத்திற்கு இன்றுதான் முதலில் வருகிறேன். பல இடுகைகள் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகின்றன.

பகடியான போக்கில் இருந்தாலும் உங்களது பல இடுகைகள் முகத்தில் அறைகின்றன.

Post a Comment