Saturday, February 12, 2011

குஸ்தி

மலையாள மூலம்: பி.கேசவதேவ்
தமிழில்: மு.குருமூர்த்தி

"எதிர்பாருங்கள்...விரைவில் எதிர்பாருங்கள்...காணக்கிடைக்காத குஸ்திப்போராட்டம்..."
பப்புபிள்ளையின் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு ஒரு வாலிபன் குஸ்தி நோட்டீஸ்
வாசித்துக்கொண்டிருந்தான்.
அடுப்பிற்கு பக்கத்தில் உட்கார்ந்து தோசை சுட்டுக்கொணடிருந்தான் பப்புபிள்ளை.
அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது.
"கொஞ்சம் சத்தமா படிங்க சார்...நானும் கேக்கறேன்."
வாலிபனின் குரல் உயர்ந்தது.
"விளையாட்டுக்கலை ரசிகர்களுக்கு..........கண்ணையும் கருத்தையும் தட்டிப்பறிக்கும்
ஒரு போட்டி..நழுவவிடாதீர்."
டீக்கடையை ஒட்டியிருந்த பெட்டிக்கடையில் குனிந்தவாறு பீடியிலை வெட்டிக்
கொண்டிருந்த அத்துருமான் தலைநிமிர்ந்து பார்த்தான்.
"குஸ்தியா சார்?... எங்கே?"
அதைக்காதில் வாங்காத பாவனையில் வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"காணக்கிடைக்காத ஒரு மல்யுத்தப்போட்டி... வெற்றிதோல்வியை தீர்மானிக்க
முடியாத ஒருஆக்ரோஷமான மல்யுத்தம்... இதுவரை கண்டதில்லை...
இனியும் காணப்போவதில்லை..."
அத்துருமான் கையில் கத்தரிக்கோலுடன் எழுந்து வந்தான்.
"அப்படின்னா ... நானும் பாக்கணும். எங்கே சார்...எங்கே சார் நடக்கப்போவுது?"
ஒருகரண்டி தோசைமாவை கல்லில் ஊற்றிப் பரப்பிவிட்டு பப்புபிள்ளை வாலிபனின்
பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
"ஆக்ரோஷமான குஸ்தியா...அப்படின்னா...நானும் பாக்கணும். பயில்வானுக யாராரு?"
"படிங்க சார்...படிங்க..."அத்துருமானும் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.
வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"மையநாட்டு ஹனுமான் விலாஸம் ஸ்டேடியத்தில் தனுமாதம் ஒண்ணாம் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு....ஆக்ரோஷமான மல்யுத்தம்...
கூட்டத்தை அடக்கிவைக்க போலீஸ்காரர்கள் வருவார்கள்."
அத்துருமானுக்கு பொறுமையில்லை.
"பயில்வான்களோட பேரு வாசியுங்க சார்..."
"இனிமேல் அதைத்தான் வாசிக்கப்போறேன்."
வாலிபன் சிரித்துக்கொண்டே வாசிப்பைத் தொடர்ந்தான்.
"பயில்வான்கள்...ம்ம்....ம்ம்....."
"கொஞ்சம் இருங்க..."
பப்புபிள்ளை ஓடிப்போய் கல்லில் கிடந்த தோசையை திருப்பிபோட்டுவிட்டு வந்தான்.
"ம்ம்...படியுங்க சார்..."
வாலிபன் சிரிப்பை அடக்கிக்கொண்டு வாசித்தான்.
"அகில கேரளத்திலும் புகழ்க்கொடிநாட்டி அகில இந்தியாவிலும் பெயர்பெற்ற
மலையாளிகளுடைய மனம் கவர்ந்த காமா பயில்வான் மேக்காட்டு நாணுப்பிள்ளை..."
பப்புப்பிள்ளை துள்ளிக்குதித்தான். அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது.
"பேஷ்..பேஷ்...நாணுப்பிள்ள சேட்டன்னு சொல்லிட்டா கேக்கவே வேண்டாம்...ஜெயிக்க்ப்
போவது யாருங்கிறது தெரிஞ்சுபோன விஷயம். மேக்காடன் யானைய தூக்கி அடிக்கிறவன்."
அத்துருமான் கிண்டலாக சிரித்தான்.
" பிள்ளே...கொஞ்சம் அடக்கி வாசிடா..எதிர்க்குற பயில்வான் யாருன்னு கேட்றலாம்."
பெட்டிக்கடைக்காரன் குஞ்சுமொய்தீன் காசு எண்ணிக்கொண்டிருந்தான்.
எண்ணிய காசை பெட்டியில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
"என்னடா அத்துருமான் அங்கே...?"
அத்துருமான் வாய்விட்டுச்சிரித்தான்.
"கேட்டியாண்ணே...ஒரு வேடிக்கை. மேக்காடன் யானையைத்தூக்கி பந்தாடுவானாம்."
"ஏன்...பந்து கெடைக்கலேண்ணு யானையைத்தூக்கி விளையாடுவானாக்கும்?
அது இருக்கட்டும்... சேதியெச்சொல்லுடா."
குஞ்சு மொய்தீனும் நோட்டீஸ் வாசித்துக்கொண்டிருந்தவனுடைய பக்கத்தில் வந்து
நின்றுகொண்டான்.
வாலிபன் தொடர்ந்து வாசித்தான்.
"பஞ்சாப் சிங்கம் என்ற புகழ்பெற்ற பயில்வான் முகம்மது ஹுசைன்..."
"அடடா...நம்ம முகம்மது ஹுசைனா! "குஞ்சு மொய்தீன் ஹா ஹா என்று சிரித்தான்.
"மேக்காடனை தூக்கி அடிக்கிறவனாச்சே"
ஆமோதிக்கிற பாவனையில் அத்துருமான் தலையாட்டினான்.
"பத்து மேடக்கானை சுருட்டி கக்கத்திலெ வச்சிகிட்டுப் போறவன் ஹுசைன்... தெரியுமா?"
பப்புபிள்ளையின் முகம் சுருங்கிப்போயிற்று.
மறுக்கிற பாவனை அந்த முகத்தில் தெரிந்தது.
"மேடக்கானெ சுருட்டி கக்கத்திலெ வைக்கிறதுக்கு பிரம்மா வந்தாலும் முடியாது
தெரிஞ்சுக்கடா."
குஞ்சுமொய்தீனுடைய புருவங்கள் நெளிந்தன.
"ஒங்க பிரம்மாவாலெ முடியாதது எங்களோட ஹுசைனாலெ முடியும்...தெரியுமாடா?"
"அப்படிச்சொல்லுண்ணே. அதுதான்சரி" அத்துருமானின் குரலில் வீரம் கொப்புளித்தது.
பப்புபிள்ளையின் உடம்பு குலுங்கியது.
"ஒங்களோட ஹுசைனும் அல்லாவும் சேந்து வந்தாக்கூட எங்களோட மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுடா..."
அத்துருமான் மொய்தீனை தள்ளிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.
"டேய் பொறுடா அத்துருமானே." மொய்தீன் அவனை அடக்கினான்.
அத்துருமான் துள்ளிக்குதித்தான்.
"இல்லேண்ணே, இந்த காபரு சொன்னதெக்கேட்டியா அல்லா வந்தாலும் மேடக்கானோட
பெருவிரலெ மடக்கமுடியாதுன்னு சொன்னதெ..."
பப்புபிள்ளை இன்னும் வேகமாக தாண்டிக்குதித்தான்.
"மடக்கமுடியாதுன்னு சொல்லலே... பெருவிரலுக்கு சமமில்லேன்னு சொன்னேன்..."
அத்துருமான் இன்னும் முன்னோக்கிப்பாய்ந்தான்.
"இன்னொரு தடவை சொல்லுடா பாப்போம்..."
குஞ்சுமொய்தீன் மறுபடியும் அத்துருமானை அடக்கினான்.
"டேய் நீ பேசாம இருடா...சொல்றேன்லே..."
"இல்லேண்ணே. அந்த நோட்டீசப்பாரு. மேடக்கானெ காமா ன்னு போட்டிருக்கு.
காமாங்கறது இஸ்லாமில்லயா. இஸ்லாம் பேரு காபருக்கு எப்படி வைக்கலாம்?"
"டேய் மனுசனோட பெயரெ நாய்க்கு வெக்கிறதில்லையா?"என்றான் குஞ்சு மொய்தீன்.
பப்புபிள்ளைக்கு இதற்குமேல் அடங்கியிருக்கமுடியவில்லை.
"ஏய்...பன்னி.." என்றபடி குஞ்சுமொய்தீன்மேல் பாய்ந்தான்.
நோட்டீஸை வாசித்துக்கொண்டிருந்த வாலிபன் துள்ளிஎழுந்து பப்புபிள்ளையை
சமாதானப்படுத்தினான்.
"ஏய்..என்னடா பைத்தியக்காரத்தனம்?... யாரோ எங்கேயோ குஸ்திபோட்டா உங்களுக்கு
என்னடா?'
"எங்களுக்கு என்னவா...அந்தப்பன்னி சொன்னதெக்கேட்டியா"
குஞ்சுமொய்தீன் முன்னோக்கிப்பாய்ந்தான். பப்புபிள்ளையின் கன்னத்தில் ஒரு குத்து
விழுந்தது.
இரண்டு மூன்று நிமிஷங்களில்...
பப்புபிள்ளையின் கையில் இருந்த தோசை திருப்பி உயரே ஏறியது. அதே வேகத்தோடு
குஞ்சுமொய்தீனின் தலையில் இறங்கி நின்றது.
"அல்லா..."
குஞ்சுமொய்தீனின் தலை பிளந்தது. ரத்தம் சிதறித்தெறித்தது.
அவன் மல்லாந்து விழுந்தான்.
"கொல்லுடா...அந்தப்பன்னியெ கொல்லுடா..." குஞ்சுமொய்தீன் கூவினான்.
அத்துருமானின் கை உயர்ந்து தாழ்ந்தது. பீடியிலை வெட்டுகிற கத்தரிக்கோல்
பப்புபிள்ளையுடைய வயிற்றில் பாய்ந்து இறங்கியது.
பப்புபிள்ளை மல்லாந்து விழுந்தான். உக்கிரமாக அலறியபடி அத்துருமான்
பப்புபிள்ளையுடைய நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கத்திரிக்கோலால் ஓங்கி
குத்தினான்.
டீக்கடை ரத்தக்களமாகிப்போனது
பொது இடங்கள் கொலைக்களமாகிப்போயின.
கோவில்கள் கசாப்புக்காரர்கள் சந்திக்கும் இடமாகிப்போனது
ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டனர்.
அடுத்தவீட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டனர்.
அன்று மாலையில் இந்தக்கலவரம் பட்டணத்தைக்கடந்து கிராமங்களுக்கும்
பரவியது.
கோவில்கள் பற்றியெரிந்தன.
அலறல்கள், ஆவேசக்கூச்சல்கள், அபயக்குரல்...ஓலங்கள்.
நாட்டில் மனிதர்கள் இல்லாமற்போனார்கள்.
ஒருவர் கழுத்தை மற்றவர் அறுக்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே
அங்கே இருந்தனர்.
தங்களுடைய எஜமானர்களுக்கு பைத்தியம்பிடித்ததைப்பார்த்த நாய்கள் கூட
ஓலமிட்டு அழுதன.
.
மனிதர்கள் பிசாசுகளாக மாறிப்போன அவலத்தை யாரும் பார்க்கக்கூடாதென்று
நித்திரை தேவியின் இருள் கரங்கள் மறைத்துக்கொண்டன.
அடுத்தநாள்...கலவரச்செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகின.
"பயங்கரமான ஹிந்து-முஸ்லிம் கலவரம்..."
"கிராமங்களுக்கும் கலவரம் பரவுகிறது..."
"மூன்று இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது..."
".பதினான்கு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு..."
"இறந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின்
எண்ணிக்கையும் தெரியவில்லை..."
"நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை..."
செய்திப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் இப்படிப்போயின.
கலவரத்திற்குக் காரணம் யாருக்கும் தெரியவில்லை.
யாரும் அதைப்பற்றி கேட்கவுமில்லை.
கேட்டவர்கள் கேட்டவர்களைக்கொன்றனர்... கொல்லப்பட்டனர். அவ்வளவுதான்.
காதரும் கோவிந்தனும் மரச்சீனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பி
வந்துகொண்டிருந்தார்கள்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் ஆரம்பித்துவிட்டது.
கோவிந்தன் இந்துக்களின் பக்கம் சேர்ந்துகொண்டான். காதர் முஸ்லிம்களின் பக்கத்தில்.
குத்துப்பட்டு இருவரும் இறந்து போனார்கள்.
சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மூன்று இந்துக்களும் ஒரு முஸ்லிமும்
கலவரச்செய்தி கேட்டனர்.
வாக்குவாதம் முற்றியது.
கடைசியில் சீட்டு விளையாடிய இடத்தில் இரத்தவெள்ளத்தில் குளித்த
இரண்டு சடலங்கள் மட்டும் கிடந்தன.
மதமாச்சரியம் அணு அணுவாக ஒவ்வொரு நிமிடமும் பரவிக்கொண்டிருந்தது.
குஸ்தி நோட்டீசு வாசித்த வாலிபன் ரொம்பவும் கவலையோடு சாலையோரமாக நின்று
கொண்டிருந்தான். கொஞ்சதூரத்தில் ஆரவாரம் கேட்டது.
ஆயுதம் தூக்கிய மனிதப்பிசாசுகள் கூடப்பிறந்தவர்களின் குரல்வளையை அறுப்பதற்காக
கூட்டமாக வருவதற்கான அறிகுறி அது.
அலறல்களும், வெறிக்கூச்சல்களும்...
அப்பப்பா...
எல்லோருக்கும் நோய்முற்றிப்போயிருந்தது.
அந்த வாலிபன் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டான்.
கூட்டம் அவனைக் கண்டுபிடித்துவிட்டது.
"பிடிங்கடா அவனை.." ஒரு வெறிக்கூச்சல்.
"விடாதே...அவனை" ஒரு கர்ஜனை.
கொஞ்சம்பேர் வாலிபனை வளைத்தனர்.
ஒரு கட்டாரி அவனுடைய நெஞ்சிற்கு மேலே உயர்ந்து தாழ்ந்தது.
சட்டென்று ஒருவன் அந்த கட்டாரியைத் தட்டிவிட்டான்.
"வேண்டாம்டா...வேண்டாம்...அவன் ஹிந்துடா..."
"அப்படீன்னா அவன் கையிலும் கொடு ஒரு கட்டாரியெ." வேறொரு ஆள் சொன்னான்.
வாலிபன் முகத்தில் சோகமான புன்னகை.
"எனக்கு கட்டாரி, பிச்சுவா எல்லாம் வேண்டாம்."
அவனுடைய குரலில் உறுதி தெரிந்தது.
"வாங்குடா கட்டாரியெ" ஒரு கர்ஜனை கேட்டது.
"எனக்கு கட்டாரியெல்லாம் வேண்டாம்." வாலிபனின் குரல் உயர்ந்தது.
"ஆயுதங்களைப்போட்டுவிட்டு எல்லோரும் வீட்டிற்குப்போங்கள்."
"ச்சீ...நீ யாரடா அதைச்சொல்ல..."
"நான் உங்களில் ஒருவன். உங்களின் சகோதரன்."
"அப்படியானால் கட்டாரியெ வாங்கிக்கொண்டு நட. பைத்தியங்களைக் கொல்லணும்.}
"அவர்களும் என்னுடைய சகோதரர்கள்தான்."
"அப்படின்னா நீயும் சாவணும்...குத்துங்கடா அவனை."
வாலிபனின் மார்பில் ஒரு பிச்சுவா ஓங்கி இறங்கியது.
"அய்யோ" வாலிபன் அலறினான்.
மல்லாந்து வீழ்ந்த வாலிபன் இரத்தவெள்ளத்தில் கிடந்து நெளிந்தான்.
"கூடப்பிறந்தவங்களெக் கொல்லாதீங்கடா."
பேயைப்போல் சிரித்துக்கொண்டு கலகக்காரர்கள் ஓடிப்போனார்கள்.
கொஞ்சதூரத்தில் இன்னொரு கூக்குரல் கேட்டது."அல்லாஹூ ...அக்பர்..."
"பைத்தியங்கள்...பைத்தியங்கள்..."
வாலிபனின் கண்கள் மூடின. குரல் அடங்கியது.
பைத்தியம் தெளிந்தது.
அமைதி திரும்பியது.
அது மயானத்தை நினைவு படுத்தியது
ஓடிய இரத்தம் மண்ணில் கலந்து மண்ணாகிப்போனது.
இனிமேலும் வடிப்பதற்கு கண்ணீர் இல்லாமல் போனது.
பிசாசுகள் ஓடித்திரிந்த இடங்களில் மனிதர்கள் நடந்துபோகத் தொடங்கியிருந்தனர்.
பப்புபிள்ளையும், குஞ்சுமொய்தீனும் வைத்திருந்த கடைகளில் கரிக்கட்டைகளும்,
சாம்பலும், அஸ்தியின் மிச்சமீதங்கள் மட்டுமே கிடந்தன.
கடைகளும், அவைகளோடு கடைக்கார்களின் சடலங்களும் எரிந்துகிடந்தன.
சற்றுத்தொலைவில் தீச்சுவாலையில் பற்றியெரிந்து இலைகருகிப்போன ஒரு
மாமரத்தினடியில் கொஞ்சம் மூங்கிலும், கீற்றுகளும் கிடந்தன.
முகம்மது ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தான். குஞ்சுமொய்தீனின் மகன் அவன்.
பதினேழாம் வயதில் விதவையாகிப்போன தாயையும் மூன்று தம்பிகளையும்
கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவன் தலையில் விழுந்திருந்தது.
கடை இருந்த இடத்திற்கு வந்த முகம்மது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுடைய
கண்களில் கண்ணீர் பெருகியது. தந்தையின் சிதைச்சாம்பலில் தனயனின் கண்ணீர்த்
துளிகள் விழுந்து அஞ்சலி செலுத்தியது.
கோபாலன் கீற்றையும் மூங்கிலையும் தூக்கிகொண்டு வந்ததை முகம்மது பார்க்கவில்லை.
"என்னடா முகம்மது...ஏண்டா அழுகிறெ...?" கோபாலன் ஆறுதலாகக்கேட்டான்.
"இதப்பாரு பிள்ளை. அழாம எப்படி இருக்கமுடியும் பிள்ளை" கண்ணீரைத்துடைத்துக்
கொண்டே கோபாலன் சொன்னான்.
"இனிமே அழுது என்னாகப்போகிறது?... சாகவேண்டியவரெல்லாம் செத்துப்போனார்கள்.
நாம நமக்குள்ள வேலையைப்பார்ப்போம்."
அவன் தலைமீதிருந்த கீற்றுக்கட்டையும், மூங்கிலையும் மாமரத்தடியில் போட்டு
விட்டு வந்தான்.
முகம்மதுவிற்கு ஆறுதலாக கோபாலன் சொன்னான்.
"அழாதேடா முகம்மது...அழாதே..."
"எப்படி அழாமல் இருக்கமுடியும் பிள்ளை... அம்மாவும், மூணு சின்னஞ்சிறுசுகளும்...
எப்படி எல்லாரேயும் காப்பாத்தப் போகிறேன்னு தெரியல்லே."
""முகம்மது...எனக்கும் அம்மா இருக்காங்க. ஒரு தங்கச்சி இருக்கா. அண்ணங்க
ரெண்டுபேரும் செத்துப்போய்ட்டாங்க."
"இனிமே என்ன செய்யப்போறோம் பிள்ளை?"
"அண்ணனோட தொழிலைத்தான் நான் செய்யப்போறேன்."
"கீத்தும் மூங்கிலும் அதுக்குத்தானா?"
"கடைக்காக ஒரு கொட்டகை போடணும்."
"பிள்ளை. எனக்கு அதுக்குக்கூட வழியில்லை. கீத்துமில்லை...மூங்கிலுமில்லை."
கோபாலன் முகம்மதுவின் கையை ஆதரவோடு பற்றிக்கொண்டான்.
"கவலைப்படாதே முகம்மது...நமக்கு ஒரு கடை போதும். பாதி எனக்கும்
மறுபாதி உனக்கும்... சரிதானே?"
நிறைந்த கண்களோடு முகம்மது கோபாலனின் முகத்தைப்பார்த்தான்.
"பிள்ளை...உனக்கு சம்மதமென்றால்....."
"எனக்குசம்மதம் முகம்மது. ஒன்னோட வாப்பாவும், என்னோட அண்ணனும் ஒருதாயோட
பிள்ளைகள் மாதிரியில்லையா பழகினாங்க."
"பழகி என்ன செய்யறது பிள்ளை. கிறுக்குபிடிச்சிபோயி ஒருத்தரை
ஒருத்தரில்லே குத்திக்கொண்டாங்க கடைசியிலே."
"அது சரிதான் முகம்மது. எங்கோ யாரோ குஸ்திபோட்டுக்கப்போய் முகம்மதுவின்
வாப்பவும் என்னோட அண்ணனும் குத்திக்கொண்டது கிறுக்குத்தனமில்லையா?"
"அதைவிட கிறுக்குத்தனம் அது ஊரு முழுக்கப்பரவிப்போனது."
"இது வரக்கூடாத கிறுக்கத்தனம் முகம்மது....மனிதர்கள் மனிதர்களையே கொல்லும்
கிறுக்குத்தனம்."
"வடக்கே இதுபோல ஒருதடவை கிறுக்குபிடித்தது என்று கேள்விப்பட்டிருக்கோமில்லையா?"
"ஆமாம்...வங்காளியும்...பீகாரியும்."
பப்புபிள்ளையின் தம்பியும், குஞ்சுமொய்தீனின் மகனும் ஒருத்தரை ஒருத்தர் கழுத்தறுக்கும்
பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி புலம்பித்தீர்த்தனர்.
பழைய கடை இருந்த இடத்தில் கிடந்த சாம்பலையும், கரிக்கட்டைகளையும், அஸ்தி துண்டுகளையும்
வாரி அள்ளி எறிந்தன்ர். இரண்டு பேரும் சேர்ந்து புதிய கடைக்கு தூண்களை நட்டனர்.
அன்று சாயுங்காலம் அங்கே ஒரு புதிய கடை உருவாகி இருந்தது.
அடுத்தநாள் காலையில் கோபாலனின் டீ வியாபாரமும், முகம்மதுவின் வெற்றிலை பாக்குக்கடையும்
வியாபாரத்தை ஆரம்பித்தன.
கடையின் முன்புறம் தொங்கிக்கொண்டிருந்த ஒரு காகிதத்தில் இப்படி எழுதியிருந்தது.

"பைத்தியங்களுக்கு அனுமதி இல்லை."

காதல் கீதம் இசைக்கும் திமிங்கலங்கள் (029)

கிரீன்லாந்தின் வடமேற்கே, டிஸ்க்கோ வளைகுடா பகுதியில் கோபன்கேகன் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆர்ட்டிக் களப்பணி நிலையத்தை நிறுவி இருக்கிறது.

டிஸ்க்கோ வளைகுடாவின் பனிக்கட்டிகள் நிறைந்த நீரில் ஒருகாலத்தில் பெருமளவில் காணப்பட்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் படிப்படியாக குறைந்துபோயின.

அழிந்துபோன உயிரினங்களின் பட்டியலிலும் அவை இடம்பெற்றன.

இவற்றின் தோலுக்கடியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு படிவங்களும், எலும்புகளும் திமிங்கல வேட்டைக்காரர்களுக்கு இலக்காகிப்போயின.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழ்.

18 மீட்டர் நீளமும் 100 டன் எடையும் கொண்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தற்போது டிஸ்க்கோ வளைகுடா பகுதிக்கு திரும்பிவரத்தொடங்கியுள்ளன.

உயர்ந்துவரும் புவிவெப்பம் காரணமாக இதுவரை பனிக்கட்டிகளால் அடைபட்டிருந்த வடமேற்கு பாதை 125,000 ஆண்டுகளில் இப்போதுதான் உருகத்தொடங்கியுள்ளது.

ஆண்டின் சில மாதங்களில் இந்த பனிப்பாறைகள் உருகி வழிவிடுவதால் வடபசிபிக் கடலில் வாழும் வில்வடிவ திமிங்கலங்கள் டிஸ்க்கோ வளைகுடாவிற்குள் இடம்பெயர்ந்து ஏற்கனவே அங்குவாழும் திமிங்கலங்களுடன் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவற்றின் வாய் வில்வடிவத்தில் வளைந்து இருக்கும். கீழ்த்தாடை வெள்ளை நிறமாக இருக்கும். வயிற்றில் வெள்ளைப்புள்ளிகள் காணப்படும்.

பெண் திமிங்கலங்கள் மூன்று முதல் ஆறு வருடங்களில் குட்டி போடும் இயல்புடையவை.

குட்டிகள் பிறந்தவுடன் நீலமும் சாம்பலும் கலந்தநிறத்தில் இருக்கும்.

பின்னர் படிப்படியாக நீலம் கலந்த கறுப்புநிறத்திற்கு மாறுவதும், பின்னர் தாயின் நிறத்திற்கு மாறுவதும் நடைபெறும். மற்ற சிறிய கடல்வாழ் உயிரினங்களை இவை உண்டு வாழ்கின்றன.

நீருக்கடியில் எழுப்பப்படும் ஒலிகளை ஆராயும்போது, இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தங்களுடைய இணையை ஈர்ப்பதற்காக காதல் கீதம் இசைப்பது தெரியவந்துள்ளது.

திமிங்கலங்களின் காதல் கீதம் என்பது ஒரு புதிய நிகழ்ச்சியல்ல.

ஆனால் இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் பலகுரலில் காதல் கீதம் இசைப்பதுதான் புதுமையான நிகழ்வு. அவை முதலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் கீதமிசைக்கின்றன. பின்னர் அவற்றை இணைத்தும் ஒலியெழுப்புகின்றன.

மற்ற திமிங்கலங்கள் இதுபோன்ற இசையை எழுப்புவதில்லை.

இதில் வியப்பைத்தரும் இன்னொரு செய்தியும் உண்டு. ஓர் ஆண்டில் திமிங்கலங்கள் எழுப்பும் இந்த இசையை அடுத்த ஆண்டில் எழுப்புவது இல்லையாம். ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் உருவாக்கி இசைப்பது ஏன்?

திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால் இனச்சேர்க்கைக்கான எதிர்பாலினரின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இவை இசைக்கின்றன என்பது வியப்பான செய்தி.

இவற்றின் காதல் கீதம் உயர் அதிர்வெண் கொண்டது. 100 முதல் 2000 அதிர்வெண்கள் கொண்ட ஒலியில் இந்த கீதங்களை இசைக்கின்றன என்கிறார் கோபன்கேகன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஓட்டி மரியா டெர்வோ என்னும் ஆய்வாளர்.

இவர் வில்வடிவ திமிங்கலங்களின் காதல்கீதங்களை ஆய்வுசெய்து வருகிறார். இந்த காதல் கீதங்களைக்கொண்டு அவற்றை இசைப்பது ஆணா பெண்ணா என்பதை இதுவரை தீர்மானிக்க இயலவில்லை.
வில்வடிவ தலையுடைய திமிங்கலங்களின் காதல்கீதத்தை நீங்களும் இங்கே கேளுங்கள்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/07/090729074523.htm

Wednesday, February 9, 2011

கனிகளின் சிகரம் பப்பாளி (028)




கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத்தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது.

கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது. கருவை காக்கும் பழமாக இருப்பதைப்போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது.

பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன. இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப்பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப்போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு. பப்பாளிக்காய்களை சமைத்துச்சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்தவேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும். கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.

பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம்.

ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை.

பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும்.

செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது. பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை.

பப்பாளிப்பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

நன்றி: கலைக்கதிர்

Monday, February 7, 2011

கல்லீரல் புத்துருவாக்கம் (027)





கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், கல்லீரலை கொடையாக வழங்கக்கூடியவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இந்த சிக்கலைத்தீர்ப்பதற்கான கண்டுபிடிப்பு ஒன்று அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. Wake Forest University Baptist Medical Center அறிவியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆய்வுக்கூட சூழலில் ஒரு கல்லீரல் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது வெற்றிகரமாக கருதப்பட்டாலும் இன்னும் பல படிநிலைகளை கடந்துவரவேண்டியுள்ளது.

விலங்குகளின் கல்லீரலில் உள்ள அனைத்து செல்களும் மென்மையான டிட்டர்ஜண்ட் உதவியால் அகற்றப்பட்டன. ஆனால் செல்களை தாங்கிப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்குமாறு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு decellularization என்றழைக்கப்படுகிறது.

Decellularization காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தில் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள மனிதசெல்கள் (progenitors) நிரப்பட்டன. இரத்தக்குழாய்களை உருவாக்கும் endothelial செல்களும் இந்த வெற்றிடங்களில் நிரப்பப்பட்டன. இந்த அமைப்பு முழுவதும் ஒரு உயிரி உலையினுள் (bioreactor) வைக்கப்பட்டது.

உயிரி உலைகள் உறுப்பு முழுமைக்கும் ஆக்சிஜனையும் உயிரூட்டப்பொருட்களையும் வழங்கவல்லவை. ஒரு வாரம் கழித்து உருவான மனித திசுக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் மனித கல்லீரலின் செயல்பாடு காணப்பட்டது.

ஆய்வுக்கூடத்தில் இதற்கு முன்பாக விலங்குகளின் கல்லீரல்கள் உருவாக்கப்பட்ட போதிலும் மனித கல்லீரலை உருவாக்கும் முயற்சியின் தொடக்கநிலை வெற்றி இது.

உயிரி தொழில்நுட்பத்தால் விளைந்த கல்லீரலைக்கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளைக்கூட ஆராய முடியும்.

ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளை புத்துருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதற்கு இந்த ஆய்வு உதவக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2010/10/101030111057.htm

Saturday, February 5, 2011

கருத்தடை மாத்திரை இப்போது ஆணுக்கும்....(026)




The Federation of American Societies for Experimental Biology (FASEB) தன்னுடைய டிசம்பர் 2009 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆண்களின் இனப்பெருக்கத்திறனை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் இப்போது சாத்தியமாகி உள்ளதாக தெரிவிக்கிறது.

1960 ல் இருந்து பெண்களுக்கு மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த கருத்தடை மாத்திரைகள் இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்குமாம்.

ஆண்களுக்கான விந்தகங்களில் ஆண்மை ஊக்க ஹார்மோன்கள் எங்கு, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக்கண்டறியும் ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் விளைவு இது.

இந்த ஆய்வுகளின் பயனாக ஆண்களின் இனப்பெருக்கத்திறனை வேண்டும்போது திறந்து மூட முடியும். அனைத்து ஆய்வுகளும் இப்போது எலிகளில் நடத்தப்பட்டிருந்தாலும், மனிதர்கள் உட்பட்ட பாலூட்டிகளுக்கு இந்த முடிவுகள் பொருந்தக்கூடியதே.

ஆண்களுக்கான கருத்தடை மருந்துகள் மாத்திரைகள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சம். விந்தணு எண்ணிக்கை குறைபாடு காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இந்த ஆய்வுகள் பயன்படுவதாக டாக்டர் மைக்கேல் வெல்ஷ் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இவர் இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் இயங்கும் தி குவீன் மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் இனப்பெருக்க உயிரியல் துறை விஞ்ஞானியாவார்.

இந்த ஆய்விற்கு பயன்படுத்திய எலிகளை டாக்டர் வெல்ஷ் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரித்துக்கொண்டனர். முதல் குழுவைச்சேர்ந்த எலிகள் இயல்பானவை. இரண்டாவது குழுவைச்சேர்ந்த எலிகளின் விந்தகங்களில் peritubular myoid எனப்படும் தசையொத்த பொருளில் இருந்து ஜீன்கள் அகற்றப்பட்டிருந்தன. இந்த ஜீன்கள் ஆண்மை ஊக்க ஏற்பிகளை இயங்கச்செய்யக்கூடியவை. இதன்காரணமாக இரண்டாவது குழுவைச்சேர்ந்த எலிகளுக்கு விந்து உற்பத்தி குறைந்து இனப்பெருக்கம் தடைப்பட்டது.

1960ல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரகள் புழக்கத்திற்கு வந்தன. அப்போதே, ஆண்களுக்கும் இதுபோன்ற மாத்திரைகள் வேண்டும் என்று பெண்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

கடினமான முயற்சிக்குப்பிறகு பெண்களின் ஆவல் இப்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை உருவாக்குவது மட்டுமே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தாலும்கூட, ஆண்மைக்குறைவின் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த ஆய்வுகள் பயன்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/11/091130112419.htm

Friday, February 4, 2011

கண்ணாடிக்கு மாறுவோம் (025)





கொஞ்சகாலம் முன்புவரை கண்ணாடி பாட்டில்களின் உபயோகம் அதிகமாக இருந்துவந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்பட்டுவந்தன. இன்றோ! நிலைமை தலைகீழ். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வழிவிட்ட நாம் நோய் நொடிகளுக்கும் வழி திறந்துவிட்டிருக்கிறோம்.

கைதவறி விழுந்தால் கண்ணாடி உடைந்துவிடும் என்று அச்சப்பட்டது ஒரு காலம். தற்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும், கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. நுண்பெருக்காடிகள், காமிரா வில்லைகள், சோதனைக்குடுவைகள் இவையெல்லாம் கண்ணாடியைக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

முகம் பார்க்கவும், கைவளையாகவும் மட்டுமே கண்ணாடி பயன்பட்டுவந்த காலம் மலையேறிவிட்டது.

தூய்மையாக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, சலவை சோடா ஆகியவை கண்ணாடி செய்ய தேவையான மூலப்பொருட்கள். இவற்றை கொதிக்கவைத்தால் அவை உருகி 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாகு போலாகும். பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுக்களில் ஊற்றி பலவகை வடிவக்கண்ணாடிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. சில வடிவங்கள் வாயால் ஊதி வார்க்கப்படுவதும் உண்டு.

கண்ணாடியில் எந்த வடிவமும் கொண்டுவரமுடியும் என்பதை இன்றைய அலங்கார விளக்குகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

சில உலோகச்சேர்மங்களை கண்ணாடிக்குழம்புடன் சேர்ப்பதால் வெவ்வேறு நிறமுள்ள கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.

நன்றி: கலைக்கதிர்

Thursday, February 3, 2011

கடலின் மீது ஒரு சுமை (024)




வற்றாத வளம்கொண்ட கடலின் பெருமை அதை நம்பி வாழும் மீனவர்களுக்கு நன்றாகத்தெரியும்.

‘கடல் அம்மா’ என்றுதான் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழைக்கிறார்கள். கடல் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. மனிதகுலத்தின் வாழ்வாதாரமே கடல்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது.

புவிக்கோளத்தின் முக்கால் பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடல்தான் நம்முடைய வானிலையை தீர்மானிக்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் கால்பகுதியை கடல்நீர்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.

ஆனால் மனித வாழ்க்கையில் இப்போது தொழிலகங்கள் பெருகிவிட்டன. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்றில் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடல்நீரின் CO2 உறிஞ்சு திறன் குறைந்துபோயிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘Nature’ தன்னுடைய நவம்பர் 19 ஆம் தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் 2000 ம் ஆண்டில் இருந்த கடல் நீரின் CO2 உறிஞ்சு திறன் 10 சதவீதம் குறைந்துபோயிருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இந்தக்கணிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும், இதுபற்றிய அளவீடுகளும் புள்ளிவிவரங்களும் இப்போதுதான் சேகரிக்கப்பட்டுள்ளன.

“காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிகும்போது கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீரின் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சு திறன் குறைகிறது” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி சாமர் காட்டிவாலா என்பவர்.

வளிமண்டலத்தில் தொழிலக கார்பனின் அளவை 1765 ஆம் ஆண்டு முதல் 2008 வரை காட்டிவாலா குழுவினர் ஆய்வு செய்தனர். 1950 ஆம் ஆண்டுவரை எல்லாம் சீராக இருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டில் கடல் நீரின் CO2 உறிஞ்சுதிறன் கணிசமாக குறையத்தொடங்கியிருந்தது.

1990 ம் ஆண்டைக்காட்டிலும் இன்று நாம் கடல்நீரின் மீது 150 பில்லியன் டன்கள் கூடுதலான CO2 வை திணிக்கிறோம்.

கடலின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/11/091118143211.htm

மிருகாதிபத்தியம்

எம்.பி.நாராயணபிள்ளை (மலையாளம்)
மு.குருமூர்த்தி (தமிழ்)


குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

ரேஞ்சர் மரிய பூதம் விசாரணைக் கமிஷன் முன்பாக உறுதியாகச் சொன்னார்.

டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயரைப் புலி தின்றது உண்மைதான். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை.

சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் இல்லையா? ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கேட்டது.

ஆமாம்.

உங்களுடைய கையில் துப்பாக்கி இருந்தது இல்லையா?

இருந்தது.

துப்பாக்கியில் குண்டுகள் இருந்தன..... இல்லையா?

நிறைய இருந்தது.

அப்புறம் ஏன் சுடவில்லை?

டி.எஃப்.ஓ. ஒரு மனிதர். அவரைச் சுட்டால் என்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர் என்னுடைய மேலதிகாரி.

கமிஷன் ஒரு நிமிடம் மெளனமானது. மெளனத்தைக் கலைக்கும் வகையில் கமிஷன் பேசியது.

எனக்குத் தெரியவேண்டியது அது அல்ல. டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயரை புலி தாக்கியபோது நீங்கள் ஏன் புலியைச் சுட்டுக் கொல்லவில்லை? உங்களுடைய மேலதிகாரியின் உயிரை நீங்கள் ஏன் காப்பாற்றவில்லை? என்பதுதான் கேள்வி.

சார்... சம்பவத்தை நான் நேரில் பார்த்தவன். நீங்கள் சொல்வதுபோல் புலி டி.எஃப்.ஓ.வை தாக்கவில்லை. காட்டில் தன்வழியே போய்க்கொண்டிருந்த புலியைத் தாக்கியது டி.எஃப்.ஓ.தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஒரு உயிரும் செய்யக்கூடியதைத் தான் புலி செய்தது. நியாயம் புலியின் பக்கத்தில் இருந்தது. அதனால்தான் புலியை சுடுவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை.

உங்களுக்கும் டி.எஃப்.ஓ.விற்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்ததா?

இல்லை.

மரிய பூதம் மறுத்தார்.

ஒரு மேலதிகாரி என்ற முறையில் அவர் கெட்டிக்காரராக இருந்தார். தனக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடுத்தார். அவரைப் பற்றி எல்லா ரேஞ்சர்களுக்கும் நல்ல மரியாதை உண்டு. மனிதர்கள் மீது இரக்கம் காட்டக் கூடியவர்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாக நினைவு உண்டா?

நிச்சயமாக இல்லை.

அப்படியிருக்கும்போது அவரை புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டியது உங்களுடைய கடமையில்லையா?

அவருடைய பக்கமிருந்து யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான்.... புலியின் பக்கமிருந்தும் யோசித்துப் பாருங்கள்..... புலிக்கு நாடு என்பது காடுதான். மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த புலியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயர் சுட்டார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிக் குண்டு புலியின் காலில் தான் பட்டது. தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புலி டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயர்மீது பாய்ந்தது. ஒண்டிக்கு ஒண்டி நடந்த சண்டையில் டி.எஃப்.ஓ.தோற்றார். சண்டையில் தோற்கும் உயிரைத் தின்பது என்பது புலிக்கு வாடிக்கை. அதன்படியே புலி டி.எஃப்.ஓ.வை தின்றது. அதுமட்டுமல்ல. ரேஞ்சர் என்ற நிலையில் என்னுடைய கடமை காட்டில் உள்ள மிருகங்களையும் மரங்களையும் பாதுகாப்பதாகும். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு புலி ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அதைக் கொல்ல முடியும்?

அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சும்மா பார்த்துக்கொண்டு நின்றேன். புலி டி.எஃப்.ஓ.வின் உடலை இழுத்துக்கொண்டு போனதற்கப்புறம் அவருடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுபங்களாவிற்கு திரும்பி வந்தேன்.

டி.எஃப்.ஓ.புலியைத் தாக்காமல் புலி டி.எஃப்.ஓ.வைத் தாக்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?

புலியை சுட்டு இருப்பேன்.

நீங்கள் இதற்கு முன்பு என்றைக்காவது ஏதாவது விலங்கை சுட்டிருக்கிறீர்களா?

ஒரே ஒரு தடவை மட்டும்.... மதம் பிடித்து அலைந்த யானையை கலெக்டருடைய உத்தரவுப்படி சுட்டிருக்கிறேன்.

யானை மக்களைத் தொந்தரவு செய்கிறதா என்று யோசித்துத்தான் யானையைச் சுட்டீர்களா?

இல்லை. அப்படியெல்லாம் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கலெக்டர் உத்தரவு போட்டால் எந்த மிருகத்தையும் கொல்லலாம். ஹைகோர்ட் உத்தரவு போட்டால் எந்த மனிதனையும் கொல்லலாம். அதுவும் தூக்கில் போட்டுத்தான் கொல்ல முடியும். கலெக்டருடைய எழுத்துபூர்வமான உத்தரவு கிடைத்தபொழுதுதான் யானையை சுட்டுக்கொன்றேன்.

உயிருக்காக போராடிக்கொண்டிருந்த டி.எஃப்.ஓ. புலியை சுட்டுக்கொல்லுமாறு உங்களிடம் சொன்னாரா?

ஆமாம், சொன்னார்....சட்டப்படி கலெக்டருடைய உத்தரவு இல்லாமல் புலியை சுட்டுக்கொல்ல முடியாது நான் சொல்லிவிட்டேன்.

நீங்கள் சட்டவிதிகளை எழுத்துக்கு எழுத்து பின்பற்றியதாக கமிஷன் பதிவுசெய்துகொள்கிறது. டி.எஃப்.ஓ. தாமோதரன் நாயருடைய உயிருக்கும் ஒரு புலியினுடைய உயிருக்கும் ஒரே விலைதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

காட்டில் புலியின் உயிருக்கும் நாட்டில் மனிதனின் உயிருக்கும் மதிப்புண்டு.

டி.எஃப்.ஓ. காட்டை ஆளுகின்ற ஒரு மனிதன் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் கூட காட்டை ஆளுகின்ற ஒரு மனிதர்தான்.

இல்லை சார்..... நாங்களெல்லாம் நாட்டை ஆளுகிறவர்களுடைய பிரதிநிதிகளாக காட்டிலே வேலை செய்கிறவர்கள் என்பதுதான் சரி...... பழைய காலத்தில் நாட்டை ஆளுகிறவன் ராஜாவாகவும் காட்டை ஆளுகிறவன் சிங்கமாகவும் இருந்தார்கள். காட்டில் வசிக்கும் காட்டுவாசிகள்கூட நாட்டை ஆளும் ராஜாவை ஏற்றுக்கொள்ளாதபோது ஒரு புலி அதை ஏற்றுக்கொண்டு சாவதற்கு தயாராகவேண்டும் என்று சொல்வது சரியில்லை.ஒரு புலி ஊருக்குள் வரும்போது அதைக் கொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் டி.எஃப்.ஓ. தாமோதரன் நாயர் புலியைச் சுட்டது காட்டிற்குள்ளேதான்.

அதாவது புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயரைத் தின்றது என்றும் அதனால் புலி ஒரு தவறும் செய்யவில்லை என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அப்படித்தானே?

அது மட்டுமில்லை சார்...... டி.எஃப்.ஓ.தாமோதரன் நாயரைக் காப்பாற்றுவதற்காக நான் புலியை சுட்டிருந்தால் அது மிருகங்களுக்கு நான் செய்யக்கூடிய ஒரு அநீதியாக இருந்திருக்கும். ஓர் உயிர் என்ற உயர்வான சிந்தனையில் இருந்து ஒரு மனிதன் என்ற கீழான இடத்திற்கு என்னுடைய புத்தி போயிருக்கும். இதுபோல கீழான சிந்தனைகளுக்கு நான் அடிமைப்பட்டால் என்னோடு சேர்ந்து வாழும் உயிர்களுக்கு ஆதரவாக, வேறு உயிர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். இந்தியாக்காரனாக இருக்கும்போது வேறுநாட்டுக்காரனுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். கேரளக்காரனாக இருக்கும்போது வேறு மாநிலக்காரனுக்கெதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். அதற்கப்புறம் திருவாங்கூர்காரனாக இருக்கும்போது கொச்சிக்காரனையும் மலபார்காரனையும் கொல்ல துப்பாக்கியைத் தூக்குவேன்.

ஊர்க்காரனாக இருக்கும்போது அடுத்த ஊர்க்காரனுக்கு அநியாயம் செய்யத் தயங்கமாட்டேன். இப்படி கிராமம், குடும்பம், சொந்தக்காரன் அப்புறன் நான் என்று ஒவ்வொரு நிலையிலும் நீதியை மறந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவேன். மிருகங்களை பிரித்துப் பார்க்காமல் இருந்தால்தான் வேறுயாரையும் பிரித்துப் பார்க்க மனம் வராது.டி.எஃப்.ஓ.வும் புலியும் ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டபோது இதையெல்லாம் செய்து பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வளவும் சிந்திக்கின்ற நீங்கள் டி.எஃப்.ஓ.வை புலியிடம் போகவேண்டாம் என்று ஏன் தடுக்கவில்லை?

நான் சொன்னேன் சார்........ டி.எஃப்.ஓ.தான் கேட்கவில்லை.

அவர் என்ன சொன்னார்?

புலி மற்ற மிருகங்களை கொன்று தின்பதாகவும், புலியைக் கொல்வது மற்ற மிருகங்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும், அத்துடன் காட்டுக்கு ராஜா சிங்கமில்லையென்றும், வனத்துறை அமைச்சர்தான் காட்டுக்கு ராஜா என்றும் சொன்னார்.

அவர் சொன்னதும் ஒருவகையில் சரிதானே? கமிஷன் திருப்பிக்கேட்டது.

இல்லை..... காடு மிருகங்களுக்கானது. காட்டில் வாழும் மனிதர்கள் ரொம்பவும் கொஞ்சம். அதாவது வேடர்கள். காட்டிற்கு உள்ளேபோய் யார் மிருகங்களைக் கொன்றாலும் அவர்களைக் கொல்லக்கூடிய அதிகாரம் மிருகங்களுக்கு உள்ளது. அதேபோல நாட்டிற்குள் வந்து மனிதர்களைக் கொன்று தின்னும் விலங்குகளைக் கொல்ல மனிதர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு சரியான உவமை சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்தில் கோலோனியன் செகரட்டரி எப்படியோ அப்படித்தான் நம்முடைய வனத்துறை அமைச்சர். அவருடைய அதிகாரம் மனிதரால் கொடுக்கப்பட்டதுதான்.

மிருகங்களுக்கு சுய ஆட்சி வேண்டுமென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?

சார்....... எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் வரலாறும் அரசியலும் படிக்கிறவன், எனக்குத் தெரிந்தவரையில் சுய ஆட்சி என்பது தனக்கு விருப்பமான இயல்பான ஆட்சிமுறையாகும். அதாவது சிங்கத்தை ராஜாவாக ஏற்றுக்கொண்ட வழக்கமான ஆட்சிமுறை. ஜனநாயகமில்லை. உதாரணமாக ஆப்பிரிக்காவில் சுய ஆட்சி கிடைத்தபோது மக்கள் அவர்களுக்கு மிகவும் இயல்பான இடி அமீனை ஆதரித்தார்கள். மிருகங்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் வனத்துறை அமைச்சரை அவை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதர்களுடைய சட்டதிட்டங்களும் கூட இப்படியேதான்.

வனத்துறையின் சட்டதிட்டங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு கமிஷன் வரலாமா?

அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அப்படி நீங்கள் எடுக்கிற முடிவு என்னை வேலையைவிட்டு நீக்குவதற்கு காரணமாகும்.இல்லையா?

ஆகலாம்..... ஆகாமலும் இருக்கலாம்...... அதுபோகட்டும்....... இந்த விசாரணை முடிவதற்கு முன்பாக உங்களுக்கு ஆதரவாக சாட்சிசொல்லுவதற்கு யாராவது இருக்கிறார்களா?..... அவர்களை விசாரிக்கவேண்டுமா?....

ஒரே ஒரு சாட்சி இருக்கிறது.

இப்போதே வரச்சொன்னால் விசாரணையை இன்றைக்கே முடித்துவிடலாம். பக்கத்தில்தானே இருக்கிறார்?

வெளியில் மரத்தடியில் இருக்கிறார். கூப்பிட்டால் வந்துவிடுவார்.

சரி...... யார் அவர்?

இதுவரை நடந்த சம்பவத்தில் அவர்தான் சார் பிரதான குற்றவாளி. அவர்தான் டி.எஃப்.ஒ. தாமோதரன் நாயரைத் தின்ற புலி. கூப்பிடலாம்.

Wednesday, February 2, 2011

ஏழிலைப்பாலை

மலையாளமூலம்:எஸ்.கெ.பொற்றேக்காட்

தமிழில்: மு. குருமூர்த்தி

காலை நேரம்.

என்னுடைய அறைக்குள் உட்கார்ந்து ஒரு ரஷ்யன் துப்பறியும் நாவலில் கவனமாக இருந்தேன்.
கடைசி அத்தியாயம் ரொம்பவும் சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது. வாசலில் காலடிச்சத்தம் கேட்டது. கூடவே பழக்கமான கனைப்புக் குரலும் கேட்டது. தலையை நிமிர்த்தி சன்னல் வழியாகப் பார்த்தேன். பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார்.

“யாரது? ஆபீசரா? வாருங்கள்.. வாருங்கள்.”

நாவலில் வில்லனின் பின்கழுத்தில் ஒரு ரோமக்கை நீண்டு வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் விரலை அழுத்திக்கொண்டு அதிகாரியை வரவேற்றேன்.

குட்டையான பருத்த சரீரம்; வெளுத்த உடல்; உச்சியில் காய்ந்துபோன இலையைப் போன்ற வழுக்கை; மூக்கில் கண்ணாடி. இவர்தான் பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார்.

பேச்சிலும், பழக்கத்திலும் கொஞ்சம் சிடுசிடுப்பான மனிதர். பேதிமருந்து சாப்பிட்டது போன்றதொரு முகபாவம் அவருக்கு.

“நம்முடைய புதிய சாலை போடும் வேலை இன்றைக்கு தொடங்கிவிட்டது. “அதிகாரி தன்னுடைய சரீரத்தை நாற்காலியில் திணித்துக் கொண்டார்.

“காண்ட்ராக்டர் போக்கர் ஹாஜி கிழக்கேயிருந்து பதினாறு கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.”

‘நல்ல செய்தி’. அதிகாரியை பாராட்டுகிற விதத்தில் தலையாட்டிச் சிரித்தேன்.

என்னுடைய பாராட்டு மனப்பூர்வமாக இருந்தது. ஆள் கொஞ்சம் சிடுசிடுத்தவராக இருந்தாலும் பஞ்சாயத்து வேலைகளில் இந்த அளவிற்கு அனுபவமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களை கேரளத்தில் வேறெங்கும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே. எங்களுடைய புதிய தூம்போலை பஞ்சாயத்து அற்புதமாக முன்னேறி வருவதற்கு முழுமுதற் காரணம் பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியாரின் இடைவிடாத ஆர்வமும், திறமையுமே என்று நிச்சயமாக கூறலாம்.

“அப்புறம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திவிட்டுப் போகலாம் என்று வந்தேன். அந்த குளியன் மூலை விஷயம்.. “அதிகாரி வழுக்கைத் தலையை சொறிந்து கொண்டு சொன்னார்.

“அந்த இடத்தை பஞ்சாயத்து சாலை போட்டுக்கொள்வதற்கு இலவசமாகக் கொடுக்கிறேன் என்று பத்திரம் செய்து கொடுக்க வேண்டும்”.

என்னுடைய சிந்தனை நாவலில் இருந்தது. வில்லனின் கழுத்தை நோக்கி நீண்டுகொண்டிருந்த அந்த ரோமக்கை..

"ஓ.. அதுவா..?"

"முடியுமானால் அதை இன்றைக்கே கொடுத்துவிட்டால் நல்லது."

அதிகாரியின் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரி இருந்தது.

"ஓ அதைப்பற்றி பெரியமாமாவிடம் பேச மறந்துபோய் விட்டேன். பரவாயில்லை அதிலொன்றும் கஷ்டமில்லையே எங்களுடைய குடும்பச் சொத்துதானே அது வெறும் பொட்டல்."

"அதெல்லாம் சரி சார். எழுத்தும், பத்திரமும் எல்லாம் அதது உள்ளபடி முறையாகச் செடீநுய வேண்டுமில்லையா? நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது அல்லவா?"

நாவலில் நீண்டுவந்த முரட்டுக்கை யாருடையது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் நான் இருந்தேன்.

எழுத்தும், பத்திரமும் எல்லாம் என்கிற வார்த்தைகள் என்னை அவமதித்தது போன்றதொரு உணர்வு எனக்குள் இருந்தது.

‘அதெல்லாம் எனக்குத் தெரியும் நீங்கள் போய் வாருங்கள்’.

என்னுடைய அதிகாரக்குரல் கொஞ்சம் வரம்புமீறிப் போனதாக எனக்குத் தோன்றியது.

இன்னும் வேறுபல பஞ்சாயத்து விஷயங்களைப் பற்றியும் அதிகாரிக்கு பேசவேண்டியிருந்திருக்காலம். அதற்குள் பேச்சை முறித்துக் கொண்டேனே!..

அதற்கப்புறம் அந்த நாவலைப் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன். அந்த முரட்டுக்கை வேறு யாருடையதும் அல்ல. கதாநயாகனின் கைதான் அது.

புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தபோது பஞ்சாயத்து அதிகாரியின் வாடிய முகம் என்னுடைய மனக்கண்ணில் மின்னி மறைந்தது. அதிகாரியின் கவலையைத் தீர்க்கவேண்டும்; குளியன்மூலை பிரச்சினையை பெரிய மாமாவிடம் பேசவேண்டும். அன்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு பெரிய மாமாவை சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன்.

என்னுடைய பெரிய மாமாவைப்பற்றி இந்த நேரத்தில் கொஞ்சம் சொல்லிவைக்க வேண்டும். தனிக்கட்டை பழைய ஆள். வீட்டில் அவர் சொல்படிதான் எல்லாம் நடக்கும். உச்சியில் மூன்றங்குலக் குடுமியும், காதில் கொடிக்கடுக்கனும் அதது இருக்கவேண்டிய இடத்தில் இப்போதும் இருக்கிறது.

பெரிய மாமாவிற்கு வாயில் பற்கள் ஏதும் இல்லை. பொய்ப்பல் கட்டிக்கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்திப் பார்த்துவிட்டேன். ஆள் மசிந்து கொடுக்கவில்லை. ஈறுகள் முழுவதையும் வெளிக்குக் காட்டிக்கொண்டு ஒரு கார்ட்டூன் சிரிப்பு சிரிப்பார். அந்தச் சிரிப்பில் ஜீவக்களை சொட்டும்.

“வேண்டாமப்பா!... நான் இப்போது கல்யாணம் செய்து கொள்ளுகிறதாயில்லை!"

பெரியமாமா இதுவரையில் கல்யாணம் செய்து கொள்ளவில்லை முழு பிரம்மச்சாரி. வெற்றிலை போடுவது, பொடி போடுவது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. புகை பிடிப்பதைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் இப்படி இருந்தாலும் முற்போக்கான எண்ணம் உடையவர். எங்களுடைய ஊருக்கு ஐந்தாண்டு திட்டங்களும், போஸ்ட் ஆபீசும், ஒரு நடுநிலைப்பள்ளியும் வந்ததே கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான்.

பேட்டரியில் வேலைசெய்யும் ஒரு ரேடியோ பெட்டியை எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபோது அதில் கந்தர்வ கானத்தைக்கேட்டு முதன்முதலாக கைத்தாளம் போட்டதும் எங்க பெரிய மாமாதான். என்னை தூம்போலை பஞ்சாயத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்த அன்றைய தினம் ஆனந்தக் கண்ணீர் பெருக பெரியமாமா என்னைக் கட்டித்தழுவியதை மறக்க முடியாது. எங்களுடைய வம்சத்தில் முதன்முதலாக ஓர் உள்ளூர் தலைவர் தோன்றியிருக்கிறார் இல்லையா?

பெரிய மாமா அவ்வப்போது என்னை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்வார். பஞ்சாயத்தில் நடைபெறும் வேலைகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அவரும் ஆலோசனைகள் சொல்லுவார். புதுப்புது சாலைகள் தான் நமக்கு இப்போது தேவை. உடலில் நாடிநரம்புகள் எப்படியோ அப்படித்தான் ஒரு நாட்டில் சாலை வழிகள்.

நானும் அவர் சொல்லுவதுதான் சரி என்பதாக தலையை ஆட்டுவேன். எங்களுடைய கிராமத்திற்கு இரண்டு மைல் கிழக்கிலும், ஒண்ணரை மைல் மேற்கிலுமாக இரண்டு சாலைகள் போய்க்கொண்டிருந்தன. ஆனால் இரண்டு சாலைகளுக்கும் ஒரு இணைப்புச்சாலை இல்லாமல் இருந்தது. இடையில் குன்றுகள், பாறைகள், சிறுசிறு வயல்கள். மழைக்காலத்தில் மனிதர்களுக்கு சங்கடம் கொடுப்பதற்காகவே பிறந்த ஓர் ஆறும் இருந்தது. இதுபோதாதென்று வற்றி வறண்டுபோன ஒரு வாய்க்காலும் இருந்தது.

வாய்க்காலுக்கு பின்னால் ஒரு கதையும்கூட இருந்தது.

சுமார் இருபது வருஷங்களுக்கும் முன்னால் உள்ளூரில் ஒரு அதிகாரி இருந்தார். அவருடைய வீட்டுப்பெண்கள், குளிப்பதற்காக ஒண்ணரை மைல்தூரம் நடந்து சென்று குளித்து வந்தனர். அதைப் பார்த்து அவருடைய மனது ரொம்பவும் வேதனைப்பட்டது. ஆற்றுத்தண்ணீரை வீட்டு வாசலுக்கு கொண்டுவருவதென தீர்மானித்தவர் அந்த வாய்க்காலை வெட்டத் தொடங்கினார். வாய்க்கால் வெட்டத் தொடங்கிய இடம் அவருடைய வீட்டு வாசல்.

முக்கால் மைல் தூரத்திற்கு வாய்க்காலை வெட்டி முடித்தபிறகு கையிலிருந்த பணம் தீர்ந்துபோய்விட்டது.

வாய்க்காலும் அத்துடன் நின்றுபோய் விட்டது. அந்த அதிகாரி ஆற்றுக்கரையில் இருந்து வாய்க்கால் வெட்டத் தொடங்கியிருந்தால் அதிகாரி வீட்டுப் பெண்களுக்கு முக்காமல்மைல் தூரம் நடந்து ஆற்றில் முங்கிக் குளிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்.

அந்த அதிகாரியின் அறிவுத்திறமைக்கு நினைவுச்சின்னமாக வெறும் மண்ணாங்கட்டிகள் நிறைந்த அந்த வாய்க்காலை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.

தூம்போலை பஞ்சாயத்தை ஒரு மாதிரிப் பஞ்சாயத்தாக மாற்றுவதற்கு பெரிய மாமா ஆசைப்பட்டார்.

“புதிய சாலைகள் போடுதல்” என்ற அவரது திட்டத்தையே நான் கையிலெடுத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டேன். என்னுடைய திட்டத்தை பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியாரும் முழுமனதாக ஏற்றுக்கொண்டார். கிழக்குச் சாலையையும், மேற்குச் சாலையையும் இணைத்து ஒரு புதிய பஞ்சாயத்து சாலை அமைப்பது என்கிற திட்டம்கூட இந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான். புதிய சாலை போடுகிற வழியில் இருக்கும் நிலங்களின் சொந்தக்காரர்கள் தடையேதும் சொல்லாமல் விட்டுக்கொடுக்க சம்மதித்தார்கள். ஒரு சில உரிமையாளர்களுக்கு பெயரளவிற்கு சிறுதொகை மட்டும் ஈடாக கொடுக்கப்பட்டது.

மேற்கேயிருந்து வருகிற புதிய சாலை கொஞ்சதூரம் போனதற்கப்புறம் ஒரு குன்றின் அடிவாரத்தில் வயலின் நடுவில் புகுந்து செல்லவேண்டியிருந்தது. வயலிற்கும், குன்றிற்கும் இடையில் ஒரு மேட்டு நிலம். மேட்டுநிலத்தின் மூலையை செதுக்கிக்கொண்டு புதிய சாலை போட வேண்டியிருந்தது. அந்தக் குறுகலான இடத்திற்கு குளியன் மூலை என்று பெயர்.

எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்து அந்த இடம். சாலை போடுவதற்காக அந்த இடத்தை எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பஞ்சாயத்து அதிகாரி காலையில் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அன்று இரவு சாப்பிட்டபின், பெரிய மாமாவை சந்திப்பதற்காக பத்தாயப்புரை வீட்டிற்குப் போனேன். பெரிய மாமாவின் நிரந்தர வாசம் அங்குதான். பெரிய மாமா ஒரு குவளையில் லேகியமோ வேறு ஏதோ நிரப்பிக் கொண்டிருந்தார். புதுப்புது மருந்துகளை சொந்தமாகத் தயாரித்து சாப்பிடுவது என்பது பெரிய மாமாவின் பொழுதுபோக்கு.

"என்ன தம்பி, பஞ்சாயத்து வேலையெல்லாம் எப்படியிருக்கிறது?"

ஒரு இலைத்துண்டை எடுத்து குவளையின் வாயை மூடிக்கட்டினார் பெரிய மாமா. ஒரு பழைய துணியில் கையைத் துடைத்துக் கொண்டார். ஈறுகளை வெளிக்குக்காட்டி ஒரு குழந்தைச் சிரிப்பு. பெரிய மாமாவின் முகபாவம் சிரிக்கும்போது அழுகிறமாதிரியும், அழும்போது சிரிக்கிற மாதிரியும் இருக்கும்.

பெரிய மாமா என்னைப் பார்த்தவாறு திரும்பி உட்கார்ந்து கொண்டார்.நாங்கள் அதுவரையில் செய்திருந்த பஞ்சாயத்து வேலைகளையெல்லாம் பெரிய மாமாவிடம் சொன்னேன். புதிய சாலை போடுவது பற்றிய விவரங்களை விரிவாகச் சொன்னேன். புதிய சாலையின் வரைபடத்தையும், அது போகும் பாதையையும், நீளத்தையும், உத்தேச செலவினத்தையும் கேட்டு பெரிய மாமா ரொம்பவும் சந்தோஷப்பட்டார். கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் இருந்தார்.

“புதிய சாலையில் ஆடுமாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு கருங்கல் தொட்டி வைக்கவேண்டும். அப்புறம் ஒரு தண்ணீர் பந்தல். அதெல்லாம் என்னுடைய செலவு."

கருங்கல் தொட்டி, தண்ணீர் பந்தல் இதெல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்கிற விவரத்தை பெரிய மாமாவிடம் எடுத்துச் சொன்னேன்.

“அதெல்லாம் தேவையில்லாத செலவுகள். காலப்போக்கில் சாலையோரங்களில் டீக்கடைகள் வந்துசேரும். இன்னும் கொஞ்சகாலம் போனதற்கப்புறம் புதிய சாலையில் பஸ்கள்கூட ஓடத் தொடங்கிவிடும்”.

பெரிய மாமாவிற்கு நான் சொன்னதில் திருப்தி ஏற்படவில்லையென்பது அவருடைய முணுமுணுப்பில் இருந்து தெரிந்து கொண்டேன். அதற்கப்புறம் அந்த குளியன் மூலை விஷயத்தை எடுத்தேன்.

"கோரன் குன்றின் அடிவாரத்தோடு போய் குளியன் மூலையில் ஏறினால், சந்தோமனின் வயல் பக்கமாக புதிய பாதை இறங்கிப்போகிறது. குளியன்மூலை இருக்கிற இடத்தை பஞ்சாயத்துக்கு தானமாக நாம் எழுதிக்கொடுக்க வேண்டும்."

“ஏய்...” பெரிய மாமாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

பெரிய மாமா என்னை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சொன்ன விஷயம் முழுவதும் அவருக்கு சரியாகக் கேட்டிருக்காதோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

"நம்முடைய குளியன்மூலை வழியாகத்தான் புதியசாலை போகிறது. அந்த இடத்தை நாம் பஞ்சாயத்துக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்."

நான் சற்று உரக்கச் சொன்னேன்.

"நம்முடைய குளியன்மூலை வழியாகவா?.. அப்போ அந்த ஏழிலைப்பாலை?.."

பெரிய மாமாவின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"அந்த பாலைமரம் நிற்கிற இடத்தின் வழியாகத்தான் சாலை போடவேண்டும். அங்கே இந்த ஒரு மரம்தானே இருக்கிறது. மரத்தை வெட்டவேண்டும்."

பெரிய மாமா கண் இமைக்காமல் உட்கார்ந்திருந்தார். முதிர்ந்த கிழவர்களின் சிந்தனைகளை அவர்களுடைய முகம் நன்றாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

சுருங்கிப்போன முகத்தசைகளும், புடைத்துப்போன நரம்புகளும், தொங்கிப்போன தோலும் பெரிய மாமாவின் முகத்தை ஒரு கதகளி நாட்டியக்காரனைப்போல மாற்றிவிட்டிருந்தன. மனதின் எண்ண ஓட்டங்கள் பாவ ஓட்டங்களாக மாறி முகத்தில் நாட்டியமாடிக்கொண்டிருந்தன. நரைத்த புருவங்கள் உயர்ந்து தாழ்ந்தன. கண்களை உருட்டி என்னைப் பார்த்தார். தாவாய் எலும்புகள் புடைத்துக்கொண்டன. கீழுதட்டில் கோபம் கொப்பளித்தது.

கண்களைச் சுற்றியிருந்த கருவளையங்கள் சுருங்கி விரிந்தன. பெரிய மாமாவின் கைகள் ஏதோ முத்திரைகளைக் காட்டின.

“அந்த இடத்தை உடனே தானமாக எழுதிக்கொடுக்க வேண்டும்” நான் பொறுமையிழந்து மறுபடியும் சொன்னேன்.

பெரியமாமா உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு என்னை முறைத்துப் பார்த்தார். அந்த முகத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அப்படியொரு முகத்தை நான் அதுவரை பார்த்ததில்லை.

"போய்வா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம்."

பெரிய மாமா கர்ஜித்தார். "நான் செத்துப்போனதுக்கப்புறம் அந்த மரத்தை வெட்டிக்கொள்ளலாம்."

கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் அழுத்தம் கூடுதலாகத் தெரிந்தது. பெரிய மாமாவிற்கு என்ன ஆயிற்று? என்ற வியப்புடன் நான் அந்த இடத்தைவிட்டு வெளியில் வந்தேன். பெரிய மாமா சாப்பிட்ட லேகியத்தில் அபினோ கஞ்சாவோ கூடுதலாகிப்போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னுடைய அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுந்தேன். புதியதொரு துப்பறியும் நாவலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். மனம் நாவலில் பதியவில்லை. பெரிய மாமாவின் வழக்கத்துக்கு மாறான பேச்சும் நடத்தையும் மீண்டும் மீண்டும் நினைவுக்குள் சுழன்றன. குளியன்மூலையை எழுதிக்கொடுக்க மாட்டேன் என்று பெரிய மாமா பிடிவாதம் பிடித்தால் நான் என்ன செய்வது? பஞ்சாயத்து தலைவரே சாலைபோட நிலத்தைக்கொடுக்கவில்லை என்பது ஊர்க்காரர்கள் காதில் விழுந்தால் எனன சொல்லுவார்கள்? அதற்கப்புறம் பஞ்சாயத்து தலைவராக மட்டுமல்ல.. ஒரு மனிதனாகக்கூட ஊருக்குள் நடமாட முடியுமா! இன்னுமொரு விஷயம்கூட அப்போது என்னுடைய நினைவுக்கு வந்தது.

பெரிய மாமவிற்கு குளியன் மூலையை எழுதிக்கொடுப்பதில் தயக்கமில்லை என்பதுபோலவும் பாலைமரத்தை வெட்டுவதில்தான் அவருக்கு சம்மதமில்லை என்பது போலவும் எனக்குத் தோன்றியது. அந்த பாலைமரத்திற்கு ஏன் அப்படியொரு முக்கியத்துவம்?

அடுத்தநாள் காலையில் கண்விழித்ததே பஞ்சாயத்து அதிகாரியின் வழுக்கைத் தலையில்தான். குளியன்மூலை விவகாரம் அதிகாரியின் மனதில் பெரியதாக உருவெடுத்திருந்தது. சாலைபோடும் இடத்தை பஞ்சாயத்து தலைவர் வந்தபார்க்காததும் கூட ஒரு குறையாக இருந்தது.

“நான் கொஞ்சநேரம் கழித்து அங்கே வருகிறேன்”

அதிகாரியிடம் சாந்தமாகக் கூறினேன்.

“அந்தக் குளியன் மூலை விவகாரம்.. அந்த இடத்திற்கான பத்திரத்தை நாளைக் காலையில் தருகிறேன்”.

இப்படி நான் சொன்னாலும்கூட என்னுடைய வார்த்தையில் எனக்கே நம்பிக்கையில்லை. அதிகாரிக்கும் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம்.

பதினோரு மணியளவில் பஞ்சாயத்து சாலைபோடும் வேலை நடக்கும் இடத்திற்கு நான் போய்ச்சேர்ந்தேன். அதிகாரி சொன்னதெல்லாம் சரியாக இருந்தது. காண்ட்ராக்டர் ஹாஜியாரின் கிழக்கத்திய ஆட்கள் மண்வெட்டி, கடப்பாரை சகிதம் சுறுசுறுப்பாக வேலைசெடீநுது கொண்டிருந்தார்கள். பாறைகளையும், கற்களையும் வெட்டி கூடைகளில் அள்ளி பாதையை நிரவிக்கொண்டிருந் தார்கள். அவர்களுடைய பாடலிலும், வேலையிலும் ஒரு போராட்ட வேகம் இருந்தது. இதே வேகத்தில் வேலை நடக்குமானால் நிச்சயமாக இன்னும் இரண்டு நாட்களில் குளியன் மூலையைப் பிடித்துவிடுவார்கள்.

அதை நினைக்கும்போதே எனக்கு மனதிற்குள் பயம் குடிகொண்டது. பெரிய மாமாவின் மனதை எப்படியும் மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் அன்று இரவு நான் பத்தாயப்புரை மாளிகைக்குச் சென்றேன்.

ஒருவேளை அவர் சம்மதிக்காமல் போனால் அவரோடு போராடவும் நான் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெரிய மாமாவை எதிர்ப்பது என்பதை நினைத்தபோதே என்னுடைய இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றுபோனது போலிருந்தது. வாசல்படியேறி வீட்டுவராந்தாவில் கால் வைத்ததும் கண்களை ஒருமுறை சுற்றிலும் ஓட்டினேன். நல்ல ஓணக்கால நிலா வெளிச்சத்தினால் அந்த சுற்றுவட்டாரத்தில் ஒரு புது அழகு கூடியிருந்தபோலத் தெரிந்தது. என்னுடைய கண்கள் அங்குமிங்கும் அலைந்ததில் அந்த குளியன் மூலை என்னுடைய பார்வையில் பதிந்தது.

பத்தாயப்புரை வீட்டின் வராந்தாவில் நின்றுபார்த்தால், தொலைவில் குளியன்மூலையின் ஒரு பகுதியை தெளிவாகப் பார்க்கலாம். அந்த மேட்டின் ஒரு மூலையில் நீலவானத்தின் பின்னணியில் தன்னந்தனியாக நிற்கும் அந்தப் பெரிய ஏழிலைப்பாலைமரம், பரந்த நிலாவொளியில் ஒரு பேய்வீட்டைப் போலக் காட்சியளித்தது.

குளியன் மூலையைப் பற்றியும், அந்த ஏழிலைப்பாலையைப் பற்றியும் சிறுவயது முதற்கொண்டே நான் பல கதைகளையும் கேட்டிருக்கிறேன். சிறுவயதில், ஓணக்காலத்தில் அந்த இடங்களுக்கு பூப்பறிக்கச் செல்லும்போது நாங்கள் பாடும் பாடல் என்னுடைய நினைவுக்கு வந்தது.

ஒன்றாம் குன்றம்மா..ஒன்றடிக் குன்றம்மா..
ஒன்றல்லவோ மங்கையர் நட்ட பாலை..
பாலைக்கு இலை வந்தது..பூ வந்தது..காய் வந்தது..
பாலைக்கு பால்கொடு பார்வதியே...

இப்படிப்போகும் அந்த ஓணப்பாட்டு. அந்த ஓணப்பாட்டில் ஒன்றாம் குன்று என்பது அந்த குளியன்மூலை மேடு என்பதும், பாலைமரம் அந்த ஏழிலைப்பாலை என்பதும் எங்களுக்குத் தெரியும்.

இளம்பருவத்தின் நினைவுகளின் உருவமாக நின்றுகொண்டிருந்தது அந்த பாலை மரம். நான் குமரப்பருவத்தை அடைந்தபோது அச்சமூட்டும் பல கதைகளின் பிறப்பிடமாக அந்த பாலை மரம் மாறிப்போனது. பாலைமரத்தின் கிளைகளில் நிலவின் நிறத்தில் இருக்கும் மோகினிப் பிசாசுகள் நிர்வாணமாக தொங்கிக் கொண்டிருக்குமாம். வெள்ளிக்கிழமைகளில் ராத்திரி நேரங்களில் பாலைமரத்தினடியில் அந்தப் பிசாசுகள் நடனமாடிக் கொண்டிருக்குமாம். அந்தப் பிசாசுகளின் வாயிலிருந்த தீப்பொறிகள்கூட பறந்து கொண்டிருக்குமாம். மந்திரவாதிகள் அந்த பேய் பிசாசுகளை பாலைமரத்தில் கட்டிப்போட்டிருப்பார்களாம். நள்ளிரவில் அந்த பேய் பிசாசுகள் கூட்டமாகக் கூக்குரலிடுமாம். அந்த கூக்குரரைலக் கேட்டதாகக் கூட பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நடுநிசி நேரத்தில் அந்த வழியாகப் போகிறவர்களை பேய்கள் மயக்கிவிடுமாம். வழிதவறிப்போன ஆட்களை இரண்டு மைல் தூரத்தில் இருக்கிற பகவதி கோயிலின் பாழுங்கிணற்றில் தள்ளிக்கொன்றுவிடுவது அந்தப் பேய்களின் வழக்மென்று கூட சொல்லுவார்கள். பகல் நேரத்தில் கூட அந்த வழியாக ஆட்கள் நடமாடுவதை தவிர்த்து விடுவார்கள். கெட்ட மந்திரவாதிகள் மந்திரித்துப்போட்ட மிச்ச மீதங்களும், தீட்டுக்கழித்த குருத்தோலைகளும், ரத்தம் நிரப்பிய சுண்ணாம்புக் குறிபோட்ட புதுப்பானைகளும், எரிந்துபோன ஊதுபத்திகளும், அணைந்துபோன தீவெட்டிகளும், கோழித்தலையும் அந்த இடங்களில் சிதறிக் கிடப்பதை நானே அந்த வழியாகப் போகும்போது பார்த்திருக்கிறேன்.

மூடநம்பிக்கைகளுக்கும், பேய்க்கதைகளுக்கும் உறைவிடமாகிப்போன அந்த பாலைமரத்தை வெட்டியெறிவது கூட நல்லது என்று நான் கருதினேன். பெரிய மாமாவின் கடுமையான எதிர்ப்பிற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்? எந்தவொரு காரியத்திலும் பெரிய மாமா இப்படியொரு முரட்டுத்தனம் காட்டியதில்லையே? பஞ்சாயத்து காரியங்களில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிற பெரிய மாமா இப்படி தடைக்கல்லாக நிற்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை பாலை மரத்தடியில் பெரிய மாமா புதையல் ஏதும் வைத்திருப்பாரோ. அதற்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, அந்த பாலைமரத்தை வெட்டிவிட வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. ஆனால், பெரிய மாமாவின் அனுமதி இல்லாமல் ஏதும் செய்ய முடியாதல்லவா? பெரிய மாமாவின் படுக்கையறைக்குள் மெதுவாக காலடியெடுத்துவைத்தேன். நிசப்தமாக இருந்தது. பெரிய மாமா தூங்கிப்போயிருப்போரோ?

மேசைமேல் லாந்தர் விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. முகத்தை மூடிக்கொண்டு பெரிய மாமா படுத்திருந்தார். மெல்லக்கனைத்து ஓசையுண்டாக்கிப் பார்த்தேன். கட்டிலில் எந்த அசைவும் இல்லை. ஒரு இலை விழுந்தாலும் கூட தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிற பெரிய மாமா நான் குரல்கொடுத்த பின்னாலும்கூட பட்டமரத்தைப்போல கிடந்தார். பக்கத்தில் சென்று உடலைத்தொட்டு அழைத்தேன். அந்த உடல் குளிர்ந்துபோய் மரம் போல் கிடந்தது. பெரிய மாமா உயிரற்றுக் கிடந்தார். படுக்கையில் ஒரு காகிதம் கிடந்தது. அது ஒரு கடிதம். அதை எடுத்துப்பார்த்தேன். பெரிய மாமாவின் பெரிய கையெழுத்தில் அந்தக்கடிதம் இருந்தது.

“சொந்த விஷயம். அப்புக்குட்டனுக்கு பெரிய மாமா எழுதுவது. நான் விரும்பிய ஒரு பெண் என்னுடைய மானத்தையும், நம்முடைய வீட்டு மானத்தையும் காப்பாற்றுவதற்காக, குளியன்மூலையில் இருக்கும் அந்த ஏழிலைப்பாலையின் கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இன்றோடு ஐம்பது வருஷங்கள் ஆகிவிட்டன. அது நடந்தது ஒரு ஓணக்காலத்தில். தினமும் அந்த பாலைமரத்தை பார்த்தவாறேதான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் போகிறேன். பஞ்சாயத்து சாலை போடுவதில் சுணக்கம் வேண்டாம். குளியன் மூலையை தானமாக எழுதிக்கொடுத்துவிடு. அந்த ஏழிலைப்பாலை மரத்தை வெட்டிவிடு”.

மேசைமேல் எஞ்சியிருந்த லேகியத்தைப் பார்த்தவுடன் ஒரு உண்மை வெளிப்பட்டது. அந்த லேகியத்தில் அளவுக்கதிகமான அபின் சேர்க்கப் பட்டிருந்தது. அளவுக்கதிகமான அபின் சாப்பிட்டு பெரிய மாமா தற்கொலை செய்துகொண்டார் என்று நான் உறுதி செய்துகொண்டேன். பெரிய மாமாவின் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த சன்னல் வழியாக நான் கண்களை ஓட்டினேன்.

வெகுதூரத்தில் குளியன்மூலையும், அந்த ஏழிலைப் பாலையும் சன்னல் வழியாக முழுமையாகத் தெரியும் என்கிற விஷயத்தையும் அன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். ஒரு அரைநூற்றாண்டு காதல் கதைக்கு பட்டுக்குடை பிடித்தாற்போல் அந்த ஏழிலைப்பாலை மரம் நீலவானத்தை நோக்கி பொங்கி எழுந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது. ஆக்ரா கோட்டையின் சிறைக்கூடத்தில் அடைபட்டிருந்த ஷாஜஹான் சன்னல் வழியாக காதலியின் சமாதியான தாஜ்மகாலைப் பார்த்தவாறு வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருந்தாராம்.

என்னுடைய பெரிய மாமாவும் அதைப்போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதை நான் நினைத்தபோது, அபின் சாப்பிட்டதைப்போல ஒரு மயக்கம் எனக்குள் தோன்றியது. பெரிய மாமாவின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை சாலைபோடும் வேலைகளை நிறுத்திவைத்தோம். அதற்கப்புறம் ஒரு விடியலில் ஆட்கள் வந்துசேர்ந்தார்கள்.

பாலைமரத்தை வெட்டத் தொடங்கினார்கள். கோடாரியின் ஒவ்வொரு வெட்டிலும், அரைநூற்றாண்டுகால காதல் கதையின் வரிகள் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது நான் மயங்கி வீழ்ந்துபோனதாகவும், பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார்தான் என்னை தாங்கிப்பிடித்து நிழலில் கிடத்தினார் என்பதையும் நான் அப்புறமாகத் தெரிந்துகொண்டேன்.

இன்று அந்த குளியன்மூலை வழியாகப்போகும் ஒரு புதிய சாலையை நீங்கள் பார்க்கலாம். அந்த புதிய பாதை மண்பாதையல்ல. எங்கள் தூம்போலை பஞ்சாயத்தின் வெற்றிப்பாதை அது.

அந்த ஏழிலைப்பாலை மரம் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிராக ஒரு பஞ்சாயத்து விளக்குத்தூண் ஒன்றையும் பார்க்கலாம்.

Tuesday, February 1, 2011

ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு (023)




21 ஆம் நூற்றாண்டில் ஓசோன் படலமே இல்லாமல் செய்துவிடுவது என்று மனிதகுலம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகத் தோன்றுகிறது.

National Oceanic and Atmospheri Administration (NOAA) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள முடிவுகள் இப்படித்தான் நம்மை சிந்திக்கத்தூண்டுகின்றன. பூமியில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒசோன் படலம் உதவியாக இருக்கிறது. ஒசோன் படலம் மெலிந்துபோனால் சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மிக எளிதாக பூமிப்பரப்பை வந்து சேரும். இதனால் பூமியில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், மனிதர்களின் உடல்நலம் இவற்றில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

சர்வதேச சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட chlorofluorocarbon களின் அளவு வளிமண்டலத்தில் இப்போது குறையத்தொடங்கியிருந்த போதிலும், ஓசோன் படலத்தை மெலிதாக்கும் நைட்ரஸ் ஆக்சைடின் அதிகரிப்பு மனித குலத்தை அச்சுறுத்திவருகிறது.

நைட்ரஸ் ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் இப்போது இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அதுவும் மனிதர்களின் செயல்பாடுகளால் அதிகரித்திருக்கிறது என்பதுதான் ஆய்வாளர்கள் தரும் எச்சரிக்கை மணி.

பூமிப்பந்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட காற்று மாதிரிகளை ஆராய்ந்தபிறகு NOAA ன் விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஓசோன் படலத்தை மெல்லியதாக்கும் வாயுக்கள் ஹலோஜன் குடும்பத்தைச்சேர்ந்த குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள்தான்.

1987ல் ஏற்பட்ட மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் chlorofluorocarbon மற்றும் ஹலோஜன் குடும்பத்தைச்சேர்ந்த குளோரின், புளோரின் வாயுக்களுக்கு கடிவாளம் போடப்பட்டது. ஆனால் நைட்ரஸ் ஆக்சைடின்மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

நைட்ரஸ் ஆக்சைடு பசுமை வாயுக்களுள் ஒன்று. எனவே புவிவெப்ப அதிகரிப்பிற்கும் இந்தவாயு காரணமாக இருக்கிறது. இத்துடன் ஓசோன் படலத்தைக் குறைப்பதற்கும் இந்த வாயுவே காரணமாக இருக்கிறது.

ஏறத்தாழ வளிமண்டலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நைட்ரஸ் ஆக்சைடு மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியிடப்பட்டவை.

மண்ணிற்கு உரமிடுதல், கால்நடைகளின் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பெட்ரோல் டீசல் எஞ்சின்களின் செயல்பாடு இவற்றால் நைட்ரஸ் ஆக்சைடு வெளியிடுதல் அதிகரிக்கிறது.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/08/090827141344.htm

எளிமையான ரேடியோ தொலைநோக்கி (022)




டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலை நோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).

இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல் பால் ஈர்க்கப்பட்டார்.

1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன்.

வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர்.

இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.

வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனை பயன்படுத்த முடியாது.

நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.


ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

ரேடியோ தொலைநோக்கிகள் உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.

பல ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.

டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும்.

டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.


மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.

அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது.

இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.

2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.

இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927

எலக்ட்ரானிக் மூக்கு (021)




வெடிகுண்டுகளை முகர்ந்துபார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு...

இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத்தொழிலாக போய்விட்டிருக்கிறது.

மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது.

ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள்.

உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தை கடத்தும்.

ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச்சேருங்கள்...செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது.

இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள்.

எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!

ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்ட டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.

"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது.

இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம்.

வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/videos/2008/0704-sniffing_out_bombs.htm