Friday, July 31, 2009

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம்





தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் ஒரே சீராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 2009-2010 ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டுள்ளது பாராட்டிற்குரியது.

சமச்சீர் கல்வி ஏறக்குறைய கானல் நீராகிப்போன நிலையில், சமச்சீர்கல்விமுறைக்கு பெரும் தடையாக உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம் போட்டிருக்கிறது தமிழக அரசு.

மனம் போன போக்கில் பள்ளிகளின் வேலைநாட்களை வடிவமைப்பதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் தொல்லையைக்கொடுத்துவந்தன மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.

ஒரே வீட்டைச்சேர்ந்த மூன்று நான்கு பிள்ளைகள் வெவ்வேறு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலையில், அவர்களுடைய தேர்வுநாட்களும், விடுமுறைநாட்களும் வெவ்வேறாக இருக்கும்போது பெற்றோர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது.

இந்த புதிய உத்திரவு செம்மையாக செயல்படுத்தப்படுமேயானால் மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்படிக்கவைக்கும் பெற்றோரின் மன அழுத்தம் சிறிதளவு குறையும் என்று நம்பலாம்.

கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும், தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் யாவும் காசோலைகள் மற்றும் வங்கிவரைவோலைகள் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என்று அரசு அறிவிப்பதன்மூலம் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.

Saturday, July 18, 2009

நலங்கெடலாமா இந்த நல்ல வீணை?














தஞ்சாவூரின் புகழ்மகுடத்தில் இன்னொரு மரகதக்கல் இந்த சரசுவதி மகால் நூலகம்.

இதன் சிறப்புகளை விரித்துரைத்தால் பெருகும்.

450 ஆண்டுகள் பழமையானது இந்த நூலகம்.

இந்தியாவில் உள்ள நூலகங்களில் மிகவும் பழமையானது.

இங்குள்ள சுவடிகளின் எண்ணிக்கை நம்மை மலைக்கவைக்கும்.

தமிழில் 3817,
சம்ஸ்க்ருதத்தில் 25560,
தெலுங்கில் 1075,
மராட்டியத்தில் 3080 என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்குள்ள காகிதச்சுவடிகளின் எண்ணிக்கை 21041.

எல்லாம் மன்னர் சரபோஜியின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவை.

4500 க்கும் அதிகமான அச்சு நூல்கள் இங்குள்ளன.

கிரீக், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைச்சேர்ந்தவை இவை.

இவையன்றி தற்காலத்திய அச்சு நூல்கள் 65000 வேறு உண்டு.

அரிய வண்ணப்படங்கள் இங்கு உள்ளன.

100 சதவீதம் அரசின் நிதியிலிருந்து நடத்தப்படுகிறது இந்த நூலகம்.

1918 முதல் பொதுநூலகமாக இயங்குகிறது.

1983ல் இந்த நூலகம் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதற்காக இந்த நீண்ட முன்னுரை என்று கேட்கிறீர்களா?

தஞ்சாவூர் சரஸ்வதிமகால் நூலகத்திற்கு 18 ஆண்டுகளாக முழுநேர இயக்குநர் இல்லாமல் இருப்பதுதான் முக்கியமான செய்தி.

இதுமட்டுமல்ல. இந்த நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலும் நூலகத்தின் பெருமையைப்போலவே பெரியது.

தமிழ், தெலுங்கு, மராட்டி, மோடி ஆகிய துறைவல்லுநர்கள், காப்பாட்சியர், சுவடிகள் பாதுகாப்பாளர், பதிப்பு மேலாளர் ஆகிய பணியிடங்கள் வெற்றிடங்களாகவே உள்ளன.

மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறாமையால் ஆயிரக்கணக்கான சுவடிகள் இன்னும் இருட்டிலேயே உள்ளன.

என்ன இருந்தாலும் “உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை” என்பது சரிதானே?

Friday, July 17, 2009

இடியாப்பச்சிக்கலில் சமச்சீர்கல்வி(?)





சமச்சீர்கல்விமுறையை நடைமுறைக்குக்கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுகவின் சுருதி இப்போது குறைந்து வருகிறது.

சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய மாணவர் சங்கத்தால் வலியுறுத்தப்படும் நிலையில் சட்டமன்றத்தில் இப்பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் யாருக்கும் பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

முதல்வர் தம்முடைய பதில் உரையின் மூலம் சமச்சீர்கல்விமுறையை மிகத்தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குத்தெளிவாகிறது.

“தமிழகத்தில் இப்போது நான்கு வாரியங்கள் உள்ளன. அவற்றில் 82 சதவீத மாணவர்கள் மாநில கல்வி வாரியத்திலும், 16 சதவீத மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் கல்வி வாரியத்திலும், மிகக்குறைந்த அளவு மாணவர்கள் ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி வாரியத்திலும் பயின்று வருகின்றனர்” என்றார் முதல்வர்.

இந்தப்பிரச்சினையின் சிக்கல் “இடியாப்பச்சிக்கல்” என்பது முதல்வருக்கு தெளிவாகத்தெரிந்துவிட்டது.

முதல்வரைப்பொறுத்தவரை பிரச்சினை 82 சதவீத மாணவர்களையும், 16 சதவீத மாணவர்களையும், 2 சதவீத மாணவர்களையும் ஒரே தராசுத்தட்டில் நிறுத்தி எப்படி சமநீதி வழங்குவது என்பதில் இல்லை.

அவருடைய சிந்தனையே வேறு.

82 சதவீத பெற்றோரின் அதிருப்தியையும், 18 சதவீத பெற்றோரின் முகச்சுழிப்பையும், 2 சதவீத பெற்றோர்களின் எரிச்சல் பார்வையையும் சந்திக்கவேண்டுமா?

அதன் மூலம் வாக்குவங்கியை இழக்கவேண்டுமா?

எத்தனையோ தேன்கூடுகளில் துணிந்து கைவைக்கிறார் நம்முடைய முதல்வர்.

சமச்சீர்கல்வி என்கிற தேன்கூட்டில் கைவைப்பதால் புறங்கை நக்கும் பாக்கியம் கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது.

Wednesday, July 15, 2009

மாங்குடியில் ஒரு சாதனைப்பள்ளி





மாங்குடி ஒரு உள்ளடங்கிய கிராமம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதை இந்த ஊரில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றிருப்பது பாராட்டிற்குரியது.







மாங்குடியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சிறப்புகள் பல.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக தொலைக்காட்சிப்பெட்டிகள் உள்ளன.

குடிநீர் இணைப்புடன் நீர்வைக்கும் பாத்திரமும் உண்டு.

பள்ளிக்குட்பட்ட அஞ்சல்பெட்டியும் உண்டு.

இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் 800 புத்தகங்கள் இருக்கின்றன.

திறந்தவெளி படிப்பகம் செயல்படுகிறது.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவியருக்கு தையல் வகுப்புகளும், மாணவர்களுக்கு புத்தக பைண்டிங்கும் சொல்லித்தரப்படுகிறது.

இங்கு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கும் சீருடை உண்டு. அத்துடன் அடையாள அட்டையும் உண்டு.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வி.ஜோதிமணி கூறுகையில் கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி.புரஜக்டர்கள், இண்டர்நெட் ஆகியவற்றை கற்பித்தலில் அதிகமாக பயன்படுத்துவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இணைய முகவரி உள்ளது.

இந்தப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி கே.மிருதுளா கூறுகையில் தனக்கு இணையம் பற்றிய போதுமான அறிவு இருப்பதாகவும் பஹ்ரைனில் இருக்கும் தன்னுடைய தந்தைக்கு இ-மெயில் மூலம் போட்டோக்களும், செய்திகளும் அனுப்பிவருவதாக தெரிவித்தார்.

ஒழுக்கம், சுத்தம், சுற்றுச்சூழல் இவையே பள்ளியின் தாரகமந்திரங்கள் என்றும், பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதாகவும் தலைமை ஆசிரியர் திரு.ஜோதிமணி கூறுகிறார்.

எல்.சி.டி. ப்ரொஜக்டர்களைப்பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வகுப்பும் ஐந்துமாணவர்களைக்கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பாடத்தில் உள்ள கடினமான சொற்களில் தொடங்கி, பின்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் வரை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ஒளித்தகடுகளை இந்தக்குழுவினர் தயாரிக்கின்றனர்.

பெற்றோர்களிடமிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுவரும் ஆதரவினால் மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைநிமிர்ந்து நிற்கிறது.

மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாதனையால் தமிழக கல்வித்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.

Tuesday, July 14, 2009

108க்கு ஒரு சபாஷ்!






உயிர்காக்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசின் சாதனைகளில் இன்னொரு அத்தியாயம்.

இன்னும் ஓராண்டுகூட நிறைவடையாத 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள சேவைத்துறை.

அவசர கால மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பல பெண்கள் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்பது பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கிறது.

இவர்கள் இளம் வயதினராக இருந்தபோதும் மிகவும் துணிச்சலாக விபத்துகால முதல் உதவி, அவசரகால மகப்பேறு இவற்றில் சாதனை படைத்துவருவது பாராட்டத்தக்கது.

அண்மையில் தினமணி நாளிதழின் கொண்டாட்டம் பகுதியில் இந்த சாதனை மகளிரைப்பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பிற பத்திரிக்கைகளும் ஆங்காங்கு செயல்படும் சாதனை மகளிரை உலகிற்கு அறிமுகம் செய்தல் வேண்டும்.

ஒரே நாளில் 12 பிரசவ கேஸ்களைப்பார்த்த திருக்காட்டுப்பள்ளி எம்.பிரதீபா,

சாலை விபத்தில் சிக்கியவருக்கு தன்னம்பிக்கையூட்டிய தஞ்சாவூர் ஆ.ரூபாவதி,

பச்சமலையின் உள்ளார்ந்த கிராமங்களில் 3 பிரசவங்கள் பார்த்த பெரம்பலூர் கே.காந்தி,

ஆம்புலன்ஸிலேயே ஆறு பிரசவங்களைப்பார்த்தவரும் பட்டவகுப்பில் தங்கப்பதக்கம் பெற்றவருமான முசிறி எம்.சுந்தரேஸ்வரி,

விபத்தில் சிக்கியவரின் விலைஉயர்ந்த உடைமைகளை உரியவரிடம் சேர்த்த திருச்சி திருமதி சசிகலா செந்தில்குமார்,

‘கிராமங்களின் செல்லப்பிள்ளைகளாக நாங்கள் மாறிவிட்டோம்’ என்று பெருமைப்படும் குளித்தலை டி.காயத்ரி,

இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரைப்பாராட்டமல் இருக்க முடியுமா?

நீங்களே சொல்லுங்கள்!

Monday, July 6, 2009

“தண்ணி” வித்த காசு தள்ளாடுது




தமிழில் பெயர்சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்களிக்கப்படும் என்று 2006ல் தமிழக அரசு முடிவெடுத்த்து.

அதுவரை கேளிக்கைவரி மூலம் 75 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது.

கடந்த ஆண்டில் கேளிக்கை வரி மூலம் வந்த வருமானம் 16 கோடி மட்டுமே.

இந்த வருவாய் இழப்பினால் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிராமப்புற வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பணவருவாய் குறைந்தாலும் பரவாயில்லை. தமிழ்ப்படங்களின் தரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தாலும் திரைக்கதை, வசனம், பாடல்வரிகள், கேமிரா கோணங்கள் இவையெல்லாம் நடிகைகளின் சதைமடிப்புகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கின்றன.

தமிழ் வளர்ச்சி என்கிற பெயரில் திரைப்படத்தை தொழிலாக செய்துகொண்டிருப்பவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்துக்கொண்டிருப்பது அநியாயம்.

சாராயம் விற்ற காசு கைநிறைய இருக்கும் துணிச்சலில் தமிழக அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

சாராயம் விற்ற காசு இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்கிற தராதரம் இல்லாமல் பொதுப்பணம் விரயமாகிக்கொண்டிருக்கிறது.

அரசு இதே பாதையில் தள்ளாடி நடந்துகொண்டிருந்தால் வெகுவிரைவில் “இலவச சாராயம்” வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Sunday, July 5, 2009

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக்



ஜூலை 15ம்நாள் காமராஜர் பிறந்தநாள். இலவசக்கல்வி தந்த மானுடதெய்வத்தின் பிறந்தநாள்.

இந்த நாள் கல்விவளர்ச்சி நாளாக தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இவ்வாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு கோடியே முப்பத்து மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்தில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஏழை எளிய பள்ளிக்குழந்தைகளை வேகாத வெய்யிலில் வெறும்காலுடன் ஊர்வலமாக அழைத்துச்செல்வது, அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்துவது என்பதுதானே நடந்துவருகிறது?

கூட்டம்போட்டு பேசுவதால் சில “பெரிசு”களுக்கு சோடாவும் சால்வையும் கிடைக்கும் என்பதைத்தவிர இந்த நாளில் வேறு சிறப்பு என்ன இருக்கிறது?

கல்வி வியாபாரமாகிப்போன இந்த நாளில், அதற்குக்காரணமாக இருந்த திராவிட ஆட்சியினர் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் வித்தை.

“இது கல்வி வளர்ச்சி நாள்” இல்லை என்பதும் “கல்வி வியாபாரிகளின் வளர்ச்சி நாள்” என்பதும் மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட அரசு ஒதுக்கியிருக்கும் பணத்தில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 24 லட்சமும் அடக்கம்.

பெற்றோர் ஆசிரியர்கழக நிதி என்பது ஏழை எளிய மக்கள் சுருக்குப்பையை அவிழ்த்துக்கொடுத்த பணம் என்பது அரசுக்குத்தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கிராமப்புறத்து ஆசிரியர்களுக்கு இந்த உண்மை நன்றாகத்தெரியும்.

தினமும் கிழக்கு வெளுக்கிறது. "கல்வி வளர்ச்சிநாள் சாயம்" வெளுக்கும் நாள் எந்த நாளோ?

Friday, July 3, 2009

நானும் ஒண்ணு சொல்லிக்கிறேன்




கல்விநிறுவனங்களில் நன்கொடைகளைத் தடுக்க திரு. கி.வீரமணி ஒரு அருமையான யோசனையை கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது, அரசுக்கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டால் தனியார்கல்லூரிகளின் கொட்டம் அடக்கப்படுமாம்.

அரசுக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல்தான் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடிப்போவதாக இவர் கூறுகிறார்.

திரு. கி.வீரமணியின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.

பழமையான பாடப்பிரிவுகள் அரசுக்கல்லூரிகளில் நிரந்தரமாக குடியிருக்கின்றன.

காலத்துக்கு ஏற்ப புதிய படிப்புகள் தனியார் கல்லூரிகளில் துவங்கப்படுகின்றன.

அறிவைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாம் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதில்லை.

இவன் நாலெழுத்துபடித்து ஒருவேலைக்குப்போய் இந்த குடும்பத்தை நல்லநிலைக்கு கொண்டுவருவான் என்று நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதனால் அறிவியல் மாற்றத்திற்கு ஏற்ப புதிய படிப்புகளை மாணவர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.

மாணவர்களின் கல்வித்தாகத்தை நன்றாகத்தெரிந்து கொண்ட தனியார் கல்விநிறுவனங்கள் ஏழை எளிய பெற்றோர்களை சுரண்டிக்கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

திரு. கி.வீரமணியின் தலைமையில் நடைபெறும் கல்விநிறுவனங்கள் மாணவர்களுக்கு இலவசக்கல்வி அளிக்கிறதா என்ன?

அதெல்லாம் இருக்கட்டும்.

கல்லூரிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட யோசனை கூறும் திரு கி.வீரமணி, தனியார் பள்ளிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட என்ன யோசனை கூறப்போகிறார்?

அரசாங்கமே முன்வந்து அதிக அளவில் மெட்ரிக் பள்ளிகளைத்திறந்தால், பெற்றோர்கள் தனியார் மெட்ரிக்பள்ளிகளை புறக்கணித்துவிடுவார்கள் என்று யோசனை கூறப்போகிறாரா?

கல்வி வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கள்ளக்கூட்டணியை மறக்க எதுவேண்டுமானாலும் அவர் சொல்லலாம்.

ஆனால் அதையெல்லாம் மக்கள் ஏற்கவேண்டுமே?