Friday, November 20, 2009

இது என்ன கூத்து?




தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு விசித்திரமான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழாசிரியர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகமில்லாமல் போய்விடுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அரசாங்கப்பள்ளிகளுக்கும், அரசாங்கத்தின் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.

தமிழுணர்வையும், தமிழையும் தழைக்கச்செய்யவேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே ‘டமில்’ நிகழ்ச்சிகளில் காசு பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாவம் இந்த தமிழாசிரியர்கள் என்ன செய்யமுடியும்?

Saturday, November 7, 2009

மணக்கிறது மக்களாட்சி





இப்போதெல்லாம் ஒரு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற ஒரு கோடி ரூபாய் தேவைப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் தேர்தல் செலவை சந்திக்க வேட்பாளரும் அரசியல் கட்சிகளும் துண்டேந்தி வாக்காளரை படியேறி சந்தித்தனர்.

அப்போதெல்லாம் நிதிபெறுவதற்காக வாசற்படியேறிச்சென்ற வேட்பாளர்கள் இப்போது ‘நிதி’ கொடுப்பதற்காக படியேறிச்சென்று வாக்காளர்களை சந்திக்கிறார்கள்.

இப்போது யாரும் துண்டேந்தி நிதி திரட்டுவது இல்லை.

ஆனால் தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் நடத்துவதும் ‘சூட்கேஸ்’ கட்சித்தலைவரிடம் கொடுக்கப்படுவதும் நடைபெறுகிறது.

இந்த சூட்கேஸ்களில் பணம் எப்படி திரட்டப்படுகிறது?

அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக்காட்டிலும் தொழிலதிபர்களையே தேர்தல் நிதிக்காக நம்பியிருக்கின்றனர்.

தொழிலதிபர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்குமே தேர்தல்நிதி கொடுக்கிறார்கள்.

ஆனால் தங்களுக்குள் ரகசியமாக பேசிவைத்துக்கொண்டு எந்தக்கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஐம்பது சதவீதம் தொகையை கூடுதலாக கொடுக்கி
றார்கள்.

பணம் வாங்கிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால், தொழிலதிபர்கள் என்னென்ன சலுகைகள் வேண்டுமென்று கேட்கிறார்களோ அதையெல்லாம் அரசு செய்யவேண்டும்.

எதிர்க்கட்சியில் அமர்ந்தால் தொழிலுக்கு இடையூறு செய்யும் பிரச்சினையான கேள்விகளை சட்டமன்றத்தில் கேட்கக்கூடாது.


'விலைவாசியைக்குறைக்கிறேன்' என்று வியாபாரிகளுக்கு கடிவாளம் போடக்கூடாது.

'அன்னாடங்காச்சிகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று ஆன்லைன் வியாபாரத்திற்கு குறுக்கே நிற்கக்கூடாது.

இவையெல்லாம் ஜனநாயக ஒப்பந்தங்கள்.

மீறினால் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெடிக்கும்.

அரசின் நடவடிக்கைகளை கூடவே இருந்து கண்காணிக்க சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கவேண்டும்.

எந்த அமைச்சரவையிலாவது, எல்லா அமைச்சர்களும் ‘கக்கன்’களாக இருந்து பார்த்திருக்கிறோமா?

Thursday, November 5, 2009

சிவப்புக்கம்பளமும் ரத்தினக்கம்பளமும்



அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை இவற்றுக்கெல்லாம் அமைச்சர் ஒதுக்கீடு, அல்லது சிறப்பு ஒதுக்கீடு என்று பெயரிட்டு ‘ஒதுக்கிக்கொண்டு’ இருப்பது 05.11.2009 நாளிட்ட தினமணி தலையங்கம் வாயிலாக அன்னாடங்காச்சிகளுக்கு தெரியவந்துள்ளது.

பாமரனுக்கு இந்த ஊழல் தெரிந்துபோகாமல் இருப்பதற்காக இந்த அதிகார சுரண்டலுக்கு Discretionary Quota என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஊழலின் ஒரு முனை இப்போது சிக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு இந்த அமைச்சர் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாணவர்களும் காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

விவகாரம் இப்போது முற்றி சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது.

இந்த ஊழலின் சங்கிலிக்கண்ணிகளை நாம் எளிதாக ஊகித்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் பணக்காரவீட்டுப்பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகமே சிவக்கம்பளம் விரிக்கும் என்றால், தனியார் பல்கலைக்கழகங்கள் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக்கம்பளம் விரிப்பார்கள்தானே!

Tuesday, November 3, 2009

மாறிப்போன வகுப்பறையில் மாறாத உளவியல்






வகுப்பறைச்சூழல் மாறிப்போன காலம் இது.

ஆசிரியர்கள் இதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் கல்வியில் இதற்கென மாற்றங்களைக்கொண்டுவர வேண்டியது அவசியம்.

இந்தக்கருத்தை வலியுறுத்தும் தலையங்கம் தினமணி 02.11.2009 ல் வெளியாகியுள்ளது.

தலையங்கத்தின் தலைப்பு “மனம் நோகாமல் சொல்” என்பதாகும்.

மாணவரின் மனம் நோகாமல் ஆசிரியர் கற்பித்தல் பணியில் ஈடுபடவேண்டியது இக்கால அவசியம்.

இக்கால மாணவர்கள் தங்களுக்கு பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.

இந்த எண்ணப்போக்கு ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றையெல்லாம் அலட்சியக்கண்ணோட்டத்தோடு காணத்தூண்டுபவை.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழாசிரியர் சோலையின் அழகு, வண்டுகளின் ஓசை, நீர்த்தடாகம், நீந்திவிளையாடும் மீன், மீன் முட்டியதால் பால்சுரந்த பசுக்கள், தலைவன், தலைவி, தலைவனின் பிரிவு, தலைவியின் துயரம், பசலை படர்ந்த மேனி, கழன்றுவிழும் வளையல்கள் என்றெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

மாணவர்களும் கவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

பாடத்தினூடே தமிழுணர்வும், தமிழன் என்ற உணர்வும் ஊட்டப்படும்.

ஆனால் இன்றைய நிலையில் இந்த வர்ணனைகள் மாணவர்களுக்கு ஒரு “சப்பை மேட்டரா”க தெரியக்கூடும்.

இந்தச்சூழலில், மாணவர்களை முட்டிபோடச்சொல்வது, பிரம்பால் அடிப்பது, வேறுவகைகளில் அவமானப்படுத்துவது என்பதெல்லாம் கல்வி உளவியலுக்கு முரண்பட்டச்செயல்கள் என்பதை இந்த தலையங்கம் எடுத்துக்கூறுகிறது.

இன்றைய கல்வியாளர்கள் அரசியல்வாதிகளுக்குள் அடங்கிப்போயிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

ஆனால் ஆசிரியர் பயிற்சியின்போது அளிக்கப்படும் உளவியல் பாடத்திட்டத்தில் மட்டும் தேவையான மாற்றங்களை உடனடியாக கொண்டுவரட்டும்.

இல்லையெனில் எதிர்காலம் பொறுப்பானவர்களை மன்னிக்காது.

Thursday, August 27, 2009

புதுவாழ்வு பெறுமா சமச்சீர் கல்வி?

சமச்சீர்கல்வி மீண்டும் செய்தித்தாட்களில் இடம்பிடித்துள்ளது. இந்த முறை முதல்வர் சமச்சீர்கல்வியை உச்சரித்திருக்கிறார்.

2010-2011 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமச்சீர்கல்வி முறை கல்வியாளர்களின் தணியாத தாகம்.

அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பொது பாடநூல்கள் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுமாம்.

பயிற்றுமொழியாக தமிழுடன் இப்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடருமாம்.

சமச்சீர் கல்வி முறை எதிர்கொள்ளவெண்டிய பாதை கரடுமுரடானது.

எனினும் முதல்வரின் கவனதைப்பெற்றிருப்பதால் இந்தப்பாதை சீரமைக்கப்படும் என்று நம்புவோம்.

Tuesday, August 18, 2009

பூதலூரில் கட்டடப்பொறியாளர்களின் சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது.

ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் ஒரு சாதனை செய்ய விரும்பினர்.

அதாவது, சுற்றுச்சுவரில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் செய்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினர்.

எனவே மழைநீர் வெளியேறும் ஓட்டை இல்லாமல் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டிமுடித்தனர்.

கடந்த திங்கட்கிழமை பெருமழை பெய்தது.

மழைநீர் வெளியேற வழியில்லாததால் பள்ளிவளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கிநின்றதைப்பார்த்து பொறியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழைநீரில் நீந்திவிளையாடிக்கொண்டிருந்த பாம்பு ஒன்று வீரமணி என்னும் மாணவனக் கடித்தது.

தற்போது வீரமணி தஞ்சாவூர் மருத்துவமனையில்.

சுற்றுச்சுவர் கட்டிய பொறியாளர்கள் மகிழ்ச்சியில்.

வாழ்க பாரதம்.

Thursday, August 6, 2009

காதிருந்தும் செவிடராய்....




செவித்திறன் குறைந்தவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது.

1979 வரை தமிழக அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப்பள்ளிகள் இயங்கி வந்தன.

இப்போது சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகின்றன.

இந்தப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
.
சேலத்தில் இயங்கும் செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்புப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த பத்து ஆண்டுகளாக பூஜ்யம்தான்.

மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று காரணம்கூறி அரசு தப்பிக்க முடியாது.

இந்தப்பள்ளியில் ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் போதிக்கும் ஆசிரியர் 1998 முதல் நியமிக்கப்படவில்லை.

இப்போது இருப்பவர் வெறும் பொறுப்புத்தலைமை ஆசிரியர்தான்.

இவரது பொறுப்பான நினைவூட்டல்கள் செவித்திறன் குறைந்த சமூகநலத்துறையை எட்டாதது ஒன்றும் வியப்பான செய்தி இல்லை.

தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 11 பள்ளிகளிலும் இதே நிலைதான்.

அனைத்துப்பள்ளிகளிலும் 35 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு, ஊட்டி, தருமபுரி, விருதுநகர் இங்கெல்லாம் இயங்கும் பள்ளிகளில் கணித ஆசிரியர்களே இல்லை என்பதில் இருந்து அரசின் செவித்திறன் குறைந்துவருகிறது என்பது தெரிகிறது.

செவித்திறன் குறைந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 30 தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

இந்தப்பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்வதற்கான அனுமதி 1992 க்குப்பிறகு வழங்கப்படவில்லை.

சட்டமன்றத்தில் அடிக்கடி மேசையைத்தட்டும் ஒலி கேட்கிறது.

உறக்கத்தில் இருக்கும் தமிழக சமூக நலத்துறையை தட்டி எழுப்புவதற்காக அந்த மேசைகள் ஒருமுறையாவது தட்டப்படுமா என்பதே பாவப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Friday, July 31, 2009

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம்





தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள் ஒரே சீராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 2009-2010 ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டுள்ளது பாராட்டிற்குரியது.

சமச்சீர் கல்வி ஏறக்குறைய கானல் நீராகிப்போன நிலையில், சமச்சீர்கல்விமுறைக்கு பெரும் தடையாக உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒரு கடிவாளம் போட்டிருக்கிறது தமிழக அரசு.

மனம் போன போக்கில் பள்ளிகளின் வேலைநாட்களை வடிவமைப்பதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் தொல்லையைக்கொடுத்துவந்தன மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.

ஒரே வீட்டைச்சேர்ந்த மூன்று நான்கு பிள்ளைகள் வெவ்வேறு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலையில், அவர்களுடைய தேர்வுநாட்களும், விடுமுறைநாட்களும் வெவ்வேறாக இருக்கும்போது பெற்றோர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது.

இந்த புதிய உத்திரவு செம்மையாக செயல்படுத்தப்படுமேயானால் மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்படிக்கவைக்கும் பெற்றோரின் மன அழுத்தம் சிறிதளவு குறையும் என்று நம்பலாம்.

கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும், தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் யாவும் காசோலைகள் மற்றும் வங்கிவரைவோலைகள் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என்று அரசு அறிவிப்பதன்மூலம் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.

Saturday, July 18, 2009

நலங்கெடலாமா இந்த நல்ல வீணை?














தஞ்சாவூரின் புகழ்மகுடத்தில் இன்னொரு மரகதக்கல் இந்த சரசுவதி மகால் நூலகம்.

இதன் சிறப்புகளை விரித்துரைத்தால் பெருகும்.

450 ஆண்டுகள் பழமையானது இந்த நூலகம்.

இந்தியாவில் உள்ள நூலகங்களில் மிகவும் பழமையானது.

இங்குள்ள சுவடிகளின் எண்ணிக்கை நம்மை மலைக்கவைக்கும்.

தமிழில் 3817,
சம்ஸ்க்ருதத்தில் 25560,
தெலுங்கில் 1075,
மராட்டியத்தில் 3080 என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்குள்ள காகிதச்சுவடிகளின் எண்ணிக்கை 21041.

எல்லாம் மன்னர் சரபோஜியின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவை.

4500 க்கும் அதிகமான அச்சு நூல்கள் இங்குள்ளன.

கிரீக், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைச்சேர்ந்தவை இவை.

இவையன்றி தற்காலத்திய அச்சு நூல்கள் 65000 வேறு உண்டு.

அரிய வண்ணப்படங்கள் இங்கு உள்ளன.

100 சதவீதம் அரசின் நிதியிலிருந்து நடத்தப்படுகிறது இந்த நூலகம்.

1918 முதல் பொதுநூலகமாக இயங்குகிறது.

1983ல் இந்த நூலகம் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதற்காக இந்த நீண்ட முன்னுரை என்று கேட்கிறீர்களா?

தஞ்சாவூர் சரஸ்வதிமகால் நூலகத்திற்கு 18 ஆண்டுகளாக முழுநேர இயக்குநர் இல்லாமல் இருப்பதுதான் முக்கியமான செய்தி.

இதுமட்டுமல்ல. இந்த நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலும் நூலகத்தின் பெருமையைப்போலவே பெரியது.

தமிழ், தெலுங்கு, மராட்டி, மோடி ஆகிய துறைவல்லுநர்கள், காப்பாட்சியர், சுவடிகள் பாதுகாப்பாளர், பதிப்பு மேலாளர் ஆகிய பணியிடங்கள் வெற்றிடங்களாகவே உள்ளன.

மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறாமையால் ஆயிரக்கணக்கான சுவடிகள் இன்னும் இருட்டிலேயே உள்ளன.

என்ன இருந்தாலும் “உடையவன் பாரா வேலை ஒருமுழம் கட்டை” என்பது சரிதானே?

Friday, July 17, 2009

இடியாப்பச்சிக்கலில் சமச்சீர்கல்வி(?)





சமச்சீர்கல்விமுறையை நடைமுறைக்குக்கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுகவின் சுருதி இப்போது குறைந்து வருகிறது.

சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய மாணவர் சங்கத்தால் வலியுறுத்தப்படும் நிலையில் சட்டமன்றத்தில் இப்பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் யாருக்கும் பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சமச்சீர்கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

முதல்வர் தம்முடைய பதில் உரையின் மூலம் சமச்சீர்கல்விமுறையை மிகத்தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குத்தெளிவாகிறது.

“தமிழகத்தில் இப்போது நான்கு வாரியங்கள் உள்ளன. அவற்றில் 82 சதவீத மாணவர்கள் மாநில கல்வி வாரியத்திலும், 16 சதவீத மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் கல்வி வாரியத்திலும், மிகக்குறைந்த அளவு மாணவர்கள் ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி வாரியத்திலும் பயின்று வருகின்றனர்” என்றார் முதல்வர்.

இந்தப்பிரச்சினையின் சிக்கல் “இடியாப்பச்சிக்கல்” என்பது முதல்வருக்கு தெளிவாகத்தெரிந்துவிட்டது.

முதல்வரைப்பொறுத்தவரை பிரச்சினை 82 சதவீத மாணவர்களையும், 16 சதவீத மாணவர்களையும், 2 சதவீத மாணவர்களையும் ஒரே தராசுத்தட்டில் நிறுத்தி எப்படி சமநீதி வழங்குவது என்பதில் இல்லை.

அவருடைய சிந்தனையே வேறு.

82 சதவீத பெற்றோரின் அதிருப்தியையும், 18 சதவீத பெற்றோரின் முகச்சுழிப்பையும், 2 சதவீத பெற்றோர்களின் எரிச்சல் பார்வையையும் சந்திக்கவேண்டுமா?

அதன் மூலம் வாக்குவங்கியை இழக்கவேண்டுமா?

எத்தனையோ தேன்கூடுகளில் துணிந்து கைவைக்கிறார் நம்முடைய முதல்வர்.

சமச்சீர்கல்வி என்கிற தேன்கூட்டில் கைவைப்பதால் புறங்கை நக்கும் பாக்கியம் கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது.

Wednesday, July 15, 2009

மாங்குடியில் ஒரு சாதனைப்பள்ளி





மாங்குடி ஒரு உள்ளடங்கிய கிராமம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதை இந்த ஊரில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றிருப்பது பாராட்டிற்குரியது.







மாங்குடியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சிறப்புகள் பல.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக தொலைக்காட்சிப்பெட்டிகள் உள்ளன.

குடிநீர் இணைப்புடன் நீர்வைக்கும் பாத்திரமும் உண்டு.

பள்ளிக்குட்பட்ட அஞ்சல்பெட்டியும் உண்டு.

இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் 800 புத்தகங்கள் இருக்கின்றன.

திறந்தவெளி படிப்பகம் செயல்படுகிறது.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவியருக்கு தையல் வகுப்புகளும், மாணவர்களுக்கு புத்தக பைண்டிங்கும் சொல்லித்தரப்படுகிறது.

இங்கு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கும் சீருடை உண்டு. அத்துடன் அடையாள அட்டையும் உண்டு.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வி.ஜோதிமணி கூறுகையில் கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி.புரஜக்டர்கள், இண்டர்நெட் ஆகியவற்றை கற்பித்தலில் அதிகமாக பயன்படுத்துவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இணைய முகவரி உள்ளது.

இந்தப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி கே.மிருதுளா கூறுகையில் தனக்கு இணையம் பற்றிய போதுமான அறிவு இருப்பதாகவும் பஹ்ரைனில் இருக்கும் தன்னுடைய தந்தைக்கு இ-மெயில் மூலம் போட்டோக்களும், செய்திகளும் அனுப்பிவருவதாக தெரிவித்தார்.

ஒழுக்கம், சுத்தம், சுற்றுச்சூழல் இவையே பள்ளியின் தாரகமந்திரங்கள் என்றும், பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதாகவும் தலைமை ஆசிரியர் திரு.ஜோதிமணி கூறுகிறார்.

எல்.சி.டி. ப்ரொஜக்டர்களைப்பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வகுப்பும் ஐந்துமாணவர்களைக்கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பாடத்தில் உள்ள கடினமான சொற்களில் தொடங்கி, பின்பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் வரை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற ஒளித்தகடுகளை இந்தக்குழுவினர் தயாரிக்கின்றனர்.

பெற்றோர்களிடமிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுவரும் ஆதரவினால் மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைநிமிர்ந்து நிற்கிறது.

மாங்குடி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சாதனையால் தமிழக கல்வித்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.

Tuesday, July 14, 2009

108க்கு ஒரு சபாஷ்!






உயிர்காக்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசின் சாதனைகளில் இன்னொரு அத்தியாயம்.

இன்னும் ஓராண்டுகூட நிறைவடையாத 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள சேவைத்துறை.

அவசர கால மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றுள்ள பல பெண்கள் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்பது பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கிறது.

இவர்கள் இளம் வயதினராக இருந்தபோதும் மிகவும் துணிச்சலாக விபத்துகால முதல் உதவி, அவசரகால மகப்பேறு இவற்றில் சாதனை படைத்துவருவது பாராட்டத்தக்கது.

அண்மையில் தினமணி நாளிதழின் கொண்டாட்டம் பகுதியில் இந்த சாதனை மகளிரைப்பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பிற பத்திரிக்கைகளும் ஆங்காங்கு செயல்படும் சாதனை மகளிரை உலகிற்கு அறிமுகம் செய்தல் வேண்டும்.

ஒரே நாளில் 12 பிரசவ கேஸ்களைப்பார்த்த திருக்காட்டுப்பள்ளி எம்.பிரதீபா,

சாலை விபத்தில் சிக்கியவருக்கு தன்னம்பிக்கையூட்டிய தஞ்சாவூர் ஆ.ரூபாவதி,

பச்சமலையின் உள்ளார்ந்த கிராமங்களில் 3 பிரசவங்கள் பார்த்த பெரம்பலூர் கே.காந்தி,

ஆம்புலன்ஸிலேயே ஆறு பிரசவங்களைப்பார்த்தவரும் பட்டவகுப்பில் தங்கப்பதக்கம் பெற்றவருமான முசிறி எம்.சுந்தரேஸ்வரி,

விபத்தில் சிக்கியவரின் விலைஉயர்ந்த உடைமைகளை உரியவரிடம் சேர்த்த திருச்சி திருமதி சசிகலா செந்தில்குமார்,

‘கிராமங்களின் செல்லப்பிள்ளைகளாக நாங்கள் மாறிவிட்டோம்’ என்று பெருமைப்படும் குளித்தலை டி.காயத்ரி,

இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரைப்பாராட்டமல் இருக்க முடியுமா?

நீங்களே சொல்லுங்கள்!

Monday, July 6, 2009

“தண்ணி” வித்த காசு தள்ளாடுது




தமிழில் பெயர்சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்களிக்கப்படும் என்று 2006ல் தமிழக அரசு முடிவெடுத்த்து.

அதுவரை கேளிக்கைவரி மூலம் 75 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது.

கடந்த ஆண்டில் கேளிக்கை வரி மூலம் வந்த வருமானம் 16 கோடி மட்டுமே.

இந்த வருவாய் இழப்பினால் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிராமப்புற வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பணவருவாய் குறைந்தாலும் பரவாயில்லை. தமிழ்ப்படங்களின் தரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தாலும் திரைக்கதை, வசனம், பாடல்வரிகள், கேமிரா கோணங்கள் இவையெல்லாம் நடிகைகளின் சதைமடிப்புகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கின்றன.

தமிழ் வளர்ச்சி என்கிற பெயரில் திரைப்படத்தை தொழிலாக செய்துகொண்டிருப்பவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்துக்கொண்டிருப்பது அநியாயம்.

சாராயம் விற்ற காசு கைநிறைய இருக்கும் துணிச்சலில் தமிழக அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

சாராயம் விற்ற காசு இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்கிற தராதரம் இல்லாமல் பொதுப்பணம் விரயமாகிக்கொண்டிருக்கிறது.

அரசு இதே பாதையில் தள்ளாடி நடந்துகொண்டிருந்தால் வெகுவிரைவில் “இலவச சாராயம்” வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Sunday, July 5, 2009

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக்



ஜூலை 15ம்நாள் காமராஜர் பிறந்தநாள். இலவசக்கல்வி தந்த மானுடதெய்வத்தின் பிறந்தநாள்.

இந்த நாள் கல்விவளர்ச்சி நாளாக தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இவ்வாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரு கோடியே முப்பத்து மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்தில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஏழை எளிய பள்ளிக்குழந்தைகளை வேகாத வெய்யிலில் வெறும்காலுடன் ஊர்வலமாக அழைத்துச்செல்வது, அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்துவது என்பதுதானே நடந்துவருகிறது?

கூட்டம்போட்டு பேசுவதால் சில “பெரிசு”களுக்கு சோடாவும் சால்வையும் கிடைக்கும் என்பதைத்தவிர இந்த நாளில் வேறு சிறப்பு என்ன இருக்கிறது?

கல்வி வியாபாரமாகிப்போன இந்த நாளில், அதற்குக்காரணமாக இருந்த திராவிட ஆட்சியினர் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் வித்தை.

“இது கல்வி வளர்ச்சி நாள்” இல்லை என்பதும் “கல்வி வியாபாரிகளின் வளர்ச்சி நாள்” என்பதும் மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட அரசு ஒதுக்கியிருக்கும் பணத்தில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 24 லட்சமும் அடக்கம்.

பெற்றோர் ஆசிரியர்கழக நிதி என்பது ஏழை எளிய மக்கள் சுருக்குப்பையை அவிழ்த்துக்கொடுத்த பணம் என்பது அரசுக்குத்தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கிராமப்புறத்து ஆசிரியர்களுக்கு இந்த உண்மை நன்றாகத்தெரியும்.

தினமும் கிழக்கு வெளுக்கிறது. "கல்வி வளர்ச்சிநாள் சாயம்" வெளுக்கும் நாள் எந்த நாளோ?

Friday, July 3, 2009

நானும் ஒண்ணு சொல்லிக்கிறேன்




கல்விநிறுவனங்களில் நன்கொடைகளைத் தடுக்க திரு. கி.வீரமணி ஒரு அருமையான யோசனையை கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது, அரசுக்கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டால் தனியார்கல்லூரிகளின் கொட்டம் அடக்கப்படுமாம்.

அரசுக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல்தான் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடிப்போவதாக இவர் கூறுகிறார்.

திரு. கி.வீரமணியின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.

பழமையான பாடப்பிரிவுகள் அரசுக்கல்லூரிகளில் நிரந்தரமாக குடியிருக்கின்றன.

காலத்துக்கு ஏற்ப புதிய படிப்புகள் தனியார் கல்லூரிகளில் துவங்கப்படுகின்றன.

அறிவைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாம் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவதில்லை.

இவன் நாலெழுத்துபடித்து ஒருவேலைக்குப்போய் இந்த குடும்பத்தை நல்லநிலைக்கு கொண்டுவருவான் என்று நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதனால் அறிவியல் மாற்றத்திற்கு ஏற்ப புதிய படிப்புகளை மாணவர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.

மாணவர்களின் கல்வித்தாகத்தை நன்றாகத்தெரிந்து கொண்ட தனியார் கல்விநிறுவனங்கள் ஏழை எளிய பெற்றோர்களை சுரண்டிக்கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

திரு. கி.வீரமணியின் தலைமையில் நடைபெறும் கல்விநிறுவனங்கள் மாணவர்களுக்கு இலவசக்கல்வி அளிக்கிறதா என்ன?

அதெல்லாம் இருக்கட்டும்.

கல்லூரிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட யோசனை கூறும் திரு கி.வீரமணி, தனியார் பள்ளிகளில் நன்கொடையை ஒழித்துக்கட்ட என்ன யோசனை கூறப்போகிறார்?

அரசாங்கமே முன்வந்து அதிக அளவில் மெட்ரிக் பள்ளிகளைத்திறந்தால், பெற்றோர்கள் தனியார் மெட்ரிக்பள்ளிகளை புறக்கணித்துவிடுவார்கள் என்று யோசனை கூறப்போகிறாரா?

கல்வி வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் கள்ளக்கூட்டணியை மறக்க எதுவேண்டுமானாலும் அவர் சொல்லலாம்.

ஆனால் அதையெல்லாம் மக்கள் ஏற்கவேண்டுமே?

Thursday, June 25, 2009

குறைவான தங்கம்....நிறைவான தரம்




சாதனை படைத்த செவித்திறன் குறைந்தோர் பட்டியலில் மேலும் இருவர் சேர்ந்துள்ளனர்.

இந்த இருவரும் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி.

காரைக்குடியைச்சேர்ந்த பாண்டி முருகன், கோயம்புத்தூரைச்சேர்ந்த நாகா தேவராஜ் இருவரும் செவித்திறன் குறைந்தவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி மாணவர்கள்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இருவரும் முறையே 300/400, 296/400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் 6 வருட ஒருங்கிணைந்த பி.டெக். பட்டப்படிப்பில் இருவரும் சேர்ந்துள்ளனர்.

இதே பள்ளியில் படித்த நான்கு மாணவர்கள் ஏற்கனவே கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் SPEECH AND HEARING IMPAIRED PERSONS PROGRAMME ல் சேர்ந்து பி.டெக். படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளியின் தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய தமிழ்ச்செல்வி கூறும்போது இந்த ஆறுமாணவர்களுக்கும் கலசலிங்கம் பொறியியல் கல்வி நிர்வாகம் இலவச கல்வி அளித்து வருவதாக நன்றியுடன் குறிப்பிட்டார்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு கல்வி கற்பது எவ்வளவு கடினமானது என்பதை கற்பிக்கும் பணியில் உள்ளவர்கள் அறிவார்கள்.

கடினமான பணியை அடக்கமாக செய்திருக்கும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான கோவை மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இலவசக்கல்வி அளிக்க முன்வந்த கலசலிங்கம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் நாம் நன்றி கூறவேண்டும்.

Monday, June 22, 2009

கல்விக்கோயிலில் கள்ளப்பணமழை





வரலாறு பாடப்புத்தகத்தில் ஒரு பிரபலமான கேள்வி இருந்தது.

“குப்தர்களின் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுவது ஏன்?” என்பதுதான் அந்தக்கேள்வி.

குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் பொய், களவு, சூது இவையெல்லாம் இல்லாமல் இருந்ததாம்.

“ஊழலின் பொற்காலம் எது?” என்று எதிர்கால வரலாற்றுப்புத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.

“திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம்தான் லஞ்சமும் ஊழலும் உச்சத்தில் இருந்தகாலம்” என்று எதிர்காலம் விடையளிக்கும்.

எதையெல்லாம் இலவசமாகக்கொடுக்கலாம் என்று "ரூம்" போட்டு சிந்தித்துக்கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் கல்வியை மட்டும் ஏனோ இலவசமாகக்கொடுக்க மறுத்துவருகின்றனர்.

“அரசாங்கம் நடத்தும் பள்ளிக்கூடங்களில் அநியாய வசூல்”

“பள்ளித்தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை”

என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

ஆனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எந்தவித ரசீதும் இல்லாமல், அரசின் உத்தரவையும் மீறி கட்டணமாக வாங்கும் தனியார் பள்ளிகள் மீது இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை.

தேர்தலுக்குப்பிறகு தவறு செய்யும் பள்ளிகள்மீது நடவடிக்கை என்று கல்வி அமைச்சர் திருவாய் மலர்ந்தருளினாரே!

தேர்தலும் முடிந்தது. தேன் நிலவும் முடிவுக்கு வந்தது.

அமைச்சரின் வாக்குறுதி என்னவாயிற்று?

தனியார் பள்ளிகளின் முதலாளிகளுக்கும் அமைச்சரின் நடவடிக்கைக்கும் குறுக்கே நிற்பவர் யார்?

அரசின் போதிய கவனிப்பு இன்மையால் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

“மாணவர் சேர்க்கைப் பேரணி” என்னும் தலைப்பில் புகைப்படத்துடன் வெளியாகும் படங்களில் பேரணியில் போகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் ஆசிரியர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக தென்படுகிறது.

மாறாக, மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்விற்கு ஈடுகொடுக்க இயலாதவர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்க முன்வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் தனியார் பள்ளிகளின் முறையற்ற கட்டணவசூலை கண்காணிக்கவோ, கண்டிக்கவோ எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை இல்லை.

கல்வி இப்போது மத்திய அரசின் பட்டியலிலும் இல்லை.

மாநில அரசின் பட்டியலிலும் இல்லை.

கறுப்புப்பண முதலாளிகளின் பட்டியலில் என்றோ சேர்ந்துவிட்டது.

Tuesday, June 16, 2009

கல்வியுடன் கைகுலுக்கும் கறுப்புப்பணம்





தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து பாவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசு தாக்கல்செய்த பதில் மனுவில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது வழக்கமான பதில்தான். அரசின் இந்த பதிலைப்பற்றி பொதுமக்கள்தான் கருத்து தெரிவிக்கவேண்டும்.

‘பொதுமக்கள் புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது அரசின் வாதம். ‘அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத கல்வி நிலையங்களின் அநியாய கட்டண வசூலை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை’ என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பும் பொதுமக்களிடம் ஏராளமான கேள்விகளை விதைத்துள்ளது. தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்க ஆசைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதுதான் சோகம்.

ஆனால் இம்முறை பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது ஒரு அதிசயமான நிகழ்வு. 14 ஆம் தேதி வெளியான செய்தியின்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் அதிகக்கட்டணம் வசூலிப்பதாக 87 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 55 பள்ளிகள் அரசுப்பள்ளிகள் என்பது தமிழக அரசுக்கு பெருமை தருவதாக இல்லை.

பெற்றோர்கள் அளிக்கும் புகார்களும் அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கல்விக்கென உள்ள இணையதளத்தில் புகார்களையும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

கல்வி நிலையங்களை நடத்துவோருக்கும், அரசியலில் பணம் பண்ணுவோருக்கும் கள்ளக்கூட்டணி இருப்பதாக மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.

சந்தேகத்தைப்போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

Monday, June 8, 2009

கருணைக்கண் திறக்குமா?...கல்வித்தாகம் தீருமா?...





அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெற்று நடைபெறும் பள்ளிகளிலும் தமிழ்மீடியம் வகுப்புகளைப்போன்றே ஆங்கில மீடியம் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்பது நகர்ப்புறவாசிகள் பலரும் அறியாத ஒன்று.

அரசின் உதவிபெற்று நடைபெற்றுவரும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை மட்டும் அரசே கொடுத்துவிடும். பள்ளியின் நிர்வாகம் முழுவதும் தனிநபர்களிடம் இருக்கும். இவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லை.

அரசுப்பள்ளிகளிலும் அரசின் உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ்வழியாக பயிலும் மாணவர்களிடம் எந்தஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. முற்றிலும் இலவசம்.

மாறாக, ஆங்கில வழியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு 6 முதல் 8 வகுப்புகளுக்கு கட்டணமாக 200 ரூபாயும் 9,10 வகுப்புகளுக்கு 250 ரூபாயும் 11,12 வகுப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அரசுப்பள்ளிகளையும் அரசின் உதவிபெறும் பள்ளிகளையும் நாடிவருபவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள்தான்.

ஆங்கில வழியில் தங்களுடைய பிள்ளைகள் படித்து மேல்தட்டு மக்களுக்கு இணையாக வளர வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவதில் என்ன தவறு?

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியை முற்றிலும் இலவசமாக அளிப்பதைப்போன்றே ஆங்கில வழியில் பயில விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வி அளிப்பதால் வரிவருவாயில் மூழ்கித்திளைக்கும் தமிழக அரசு மூழ்கிப்போய்விடுமா என்ன?

Sunday, June 7, 2009

நம்மவழி...தனீஈஈஈ வழி

இவர்களின் முன்னேற்றத்திற்கு என்னவழி?




இப்படி ஓட்டுவாங்கி........




இப்படிப்போவதுதான்....

Saturday, June 6, 2009

சிக்கலில் சிக்கிய குண்டுக்குழந்தைகள்





தென்னிந்தியக்குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒர் ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

13 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்குழந்தைகளில் 22 சதவீதத்தினரும் பெண்குழந்தைகளில் 18 சதவீதத்தினரும் உடல் பருமனாகவோ, சர்க்கரைநோய் பாதிப்புடனோ இருப்பதாக இந்த தகவல் கூறுகிறது.

தமிழக அரசின் குடும்பநலத்துறை செயலர் திரு வி.கே.சுப்புராஜ் கூறுகையில் “வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவ்வாறு குழந்தைகள் குண்டாகிப்போனதற்கான காரணம்” என்கிறார்.

நமக்கெல்லாம் தெரியாத செய்தி இல்லை இது.

கையில் ஒரு எண்ணெய்ப்பண்டத்தை ஏந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “இந்தப்பந்தை இப்படிப் பிடித்திருந்தால் அது ‘கேட்ச்’ ஆகி இருக்கும்” என்று ஆண்டி மடம் கட்டியதுபோல் விமர்சனம் செய்துகொண்டு குடும்பமே நாற்காலியில் உட்கார்ந்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் அவலம் பல வீடுகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

“தாய் தகப்பன் எக்கேடாவது கெட்டுப்போகட்டும்” என்று நாம் சும்மா இருந்துவிடலாம். “பாவம் இந்த மழலைகள் தொந்திபெருத்து வாழ்க்கைச்சுமையுடன், தொந்தியையும் சுமக்கவேண்டுமா” என்று எண்ணுகையில் நம்முடைய மனம் வேதனைப்படுகிறது.

இப்போதெல்லாம் 20 சதவீத தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த குறைபாட்டிற்கு ஒரு முக்கியமான காரணம் உடற்பருமன் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கு பள்ளிப்பருவத்திலேயே உடலை சீராக வைத்திருப்பதன் அவசியத்தை வகுப்பறைகளிலேயே சொல்லித்தரவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே நீதிபோதனை வகுப்புகளை நாம் வேண்டாமென்று ஒதுக்கித்தள்ளிவிட்டோம்.

இந்த சூழ்நிலையில் “தொப்பை இல்லாமல் வாழ்வது எப்படி” என்று பிள்ளைகளுக்கு வகுப்பெடுப்பது சாத்தியமா? சொன்னாலும் மாணவர்கள் சிரிக்காமல் கேட்டுக்கொள்வார்களா என்பதெல்லாம் ஐயத்திற்குரியவைதான்.

Indian Journal of Community Medicine அளிக்கும் தகவலின்படி குழதைப்பருவத்தில் தொந்தி தொப்பைகளுடன் இருப்பவர்களில் 50 முதல் 80 சதவீதம் பேர்கள் வாழ்க்கைமுழுவதும் உடற்பருமனோடு வாழ்கிறார்களாம்.

மேலும் உடற்பருமனுக்கு கொசுறாக உற்பத்தியாகும் நோய்களும் இவர்களின் உடலில் குடியேறிக்கொள்கிறதாம்.

ஆங்கிலக்கல்வி மீது நமக்கு ஏற்பட்டிருக்கும் மோகத்தால் நாம் இழந்தவை ஏராளம்.

நம்முடைய குழந்தைகள் இழக்கப்போவதும் ஏராளம்.

குழந்தைகள் “குழந்தைத்தனம்” இல்லாது வளருகிறார்கள்.

எப்போதும் “படி,படி” என்று நச்சரிப்பதால் தூக்கம் கலையாமல் பள்ளிக்குப்போவதும் தூக்கக்கலக்கத்துடனேயே வீட்டுக்கு வருவதும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

நமது குழந்தைகள் அமைதியாக உறங்கட்டும். விழிப்படையவேண்டியது பெற்றோர்களே!

Monday, June 1, 2009

தனிவழியே போகும் தமிழ்வழிக்கல்வி




கோடை விடுமுறைக்குப்பிறகு இன்று (01-06-2009) அரசுப்பள்ளிகளும் அரசின் உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எதிர்வரும் 3ஆம் தேதி திறக்கப்படும் என்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 5ஆம் தேதி திறக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கூடம் எந்தத்தேதியில் திறந்தால் என்ன? இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

ஒரு மக்கள் நல அரசுக்கு தன்னுடைய மாநிலத்தில் கல்விநிலையங்களின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை இந்த வேறுபட்ட தேதிகள் நமக்கு உணர்த்துவதாக ஏன் கருதக்கூடாது?

சமச்சீர் கல்வியைக்கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் இதுபோன்ற சிறு சிறு நிர்வாக முடிவுகளை அனைத்துவகையான கல்விநிலையங்களும் ஏற்குமாறு செய்தல்வேண்டும்.

என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாகத்தான் இன்றைய தினமணியின் தலையங்கம் இருக்கிறது.

+2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருப்பதால் தேர்வுமுடிவுகளை ஒன்றாகச்சேர்த்து வெளியிடுகின்றனர்.

ஆனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தரவரிசைப்படுத்தும்போது தமிழை முதல் மொழியாக படித்து தேர்வு பெற்றவர்களைமட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது இந்த அரசு.

அதாவது தமிழ்வழியாகவே அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும், ஆங்கிலவழியில் அனைத்து பாடங்களையும் படித்தவர்களையும் ஒரே தராசில் நிறுத்து தரவரிசையை கணக்கிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

தமிழைப்படிப்பது வேறு; தமிழிலேயே படிப்பதுவேறு என்பது ஏன் இந்த அரசுக்கு தெரியவில்லை.

இதற்கு மாறாக பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகளை வெளியிடும்போது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இவற்றிற்கான முடிவுகள் தனியாகவும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் தனியாகவும் வெளியிடப்படுகின்றன. உண்மையில் இந்த பள்ளிகள் அனைத்தும் ஒரே வினாத்தாளைக்கொண்டவை இல்லை.

அரசிற்கு உண்மையிலேயே தமிழக மாணவர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமச்சீரான இலவசக்கல்வி வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் இந்த வேறுபாடுகளைக்களைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Friday, May 29, 2009

அரசுப்பள்ளிகளில் தொடரும் அவலம்




அரசுப்பள்ளிகளை அரசே புறக்கணிக்கும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழியாக தவறுகளை சுட்டிக்காட்டியும் அடிப்படை வசதிகளற்ற சூழலில் அரசுப்பள்ளிகள் இயங்குவதைக்கண்டு நாம் துக்கப்படாமல் இருக்கமுடியாது.

இன்றைய செய்தித்தாளில் தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதநிலை பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் கொன்றைக்காடு கிராமத்தில் இயங்கிவரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறவைக்கும் நூற்றுக்கு நூறு பள்ளியாகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப்பள்ளியில் இருந்து பொதுத்தேர்விற்கு அனுப்பப்பட்ட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கூடம் மட்டும் அடிப்படை வசதிகள் என்கிற தேர்வில் ஒவ்வோர் ஆண்டும் தோற்றுப்போய்க்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். பள்ளியில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. ஆறு வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இருப்பதோ மூன்று வகுப்பறைகள்தான். இப்போதைக்கு மாணவர்கள் அமர்ந்துபடிக்க உதவிசெய்வது மரநிழல்தான். மழைக்காலத்தில் மரங்கள் கைவிரித்துவிடும். அப்போது மாணவர்பாடு திண்டாட்டம்தான். கலைமகளுக்கு தமிழக அரசைநினைத்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரசு கணினியை வழங்கியுள்ளது. ஆனால் அந்த கணினியை வைப்பதற்கு போதிய வசதி கொண்ட அறை இல்லாததால் கணினி தற்போது முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறது. குதிரை கொடுக்கும்போது சாட்டையும் கூடவே கொடுக்கவேண்டாமா?

“முதலில் சாட்டையைத்தருகிறேன்; கொஞ்சகாலம் கழித்து குதிரையை வந்து வாங்கிப்போ” என்பதெல்லாம் கவைக்குதவாத வேலை.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மனுக்கள் அனுப்பியாயிற்று என்பது எல்லா ஆசாமிகளுக்குத்தெரியும்.

மனுக்களுக்கு என்னகதியாயிற்று என்பது அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் சாமிக்குமட்டும்தான் தெரியும்.

Tuesday, May 26, 2009

மாநகராட்சிப்பள்ளிகள் மாற்றாந்தாய் பிள்ளைகளா?




பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தனியார் பள்ளிகள் சரிப்பட்டுவராது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதன்காரணமாகத்தான் ஏழைகள் மாநகராட்சிப்பள்ளிகளை நாடிப்போகிறார்கள். நடந்துமுடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பணம் சம்பாதிக்கும் தனியார்பள்ளிகளை பின்னுக்குத்தள்ளி நுங்கம்பாக்கம் மாநகராட்சிப்பள்ளி மாணவி அகல்யாராணி 490 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வேளச்சேரி அரசு பள்ளி மாணவர் கார்த்திக் 489 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 79 சதவீதமாக இருந்த மாநகராட்சிப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் 27 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 14 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியும் அளிக்கப்படுகிறது. மாநகராட்சிப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் படித்தவர்கள் தனியார் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பது சாத்தியமில்லை.
ஆனால் தனியார் பள்ளிகள் வடிகட்டி வீசிஎறிந்த பிள்ளைகளுக்கு மாநகராட்சிப்பள்ளிகளை விட்டால் வேறு வழியில்லை. மாநகராட்சிப்பள்ளிகளில் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேரமுன்வருவார்கள் என்பது நிச்சயம்.

மாணவர்சேர்க்கை அதிகமாக இருந்தபோதும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை உயரவில்லை என்பது இன்றைய செய்தி. பெற்றோர்-ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியரை நியமித்துக்கொள்வது என்பதெல்லாம் மாநகராட்சிப்பள்ளிகளுக்கு சரிப்பட்டு வராது. பெற்றோர்கள் முதலில் ‘மொட்டை பெட்டிஷன்’ போட்டுவிட்டு அப்புறமாகத்தான் பணம் தருவார்கள். தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே கூடுதல் பணிச்சுமை. இந்த கூடுதல் தலைவலி அவருடைய பணித்திறனை நிச்சயம் பாதிக்கும்.

அரசு மனம் இரங்க வேண்டும்.

மாநகராட்சிப்பள்ளிகளின்பால் அருட்பார்வையை செலுத்தவேண்டும்.

கல்வியாண்டு தொடங்கும்போது பாடநூல்கள் கொடுத்துவிடுவதால் அரசின் கடமை முடிந்துவிடாது.

ஆசிரியர்களையும் நியமிக்கவேண்டும்.

செய்வார்களா?

Monday, May 25, 2009

கல்வியா? செல்வமா?




அண்மையில் தினமணியில் வெளியான ஒரு கட்டுரையில் படித்தது இது.

நர்சரி பள்ளியில் படிக்கும் ஒரு தமிழ்க்குழந்தை சொன்னதாம்: “நான் பெரியவன் ஆனதும் என்னுடைய அப்பாவிற்கு ஒரு வீடு வாங்கித்தருவேன். ஏனென்றால் எங்களுடைய வீட்டை விற்றுத்தான் என்னை நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.”

நகைச்சுவைக்காக இது சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழ்நாட்டின் கல்விச்சூழ்நிலை இதுதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கல்வியை ‘கல்விச்செல்வம்’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தக்கல்வியைப்பெறுவதற்கு பொருட்செல்வம் தேவை என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆரம்பத்தில் கடன்வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிடுவதும், காலப்போக்கில் கட்டணம் செலுத்தமுடியாமல் அரசுப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றம் செய்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியதுதான்.

நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப்பயன்படுத்தி இந்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ள யாருமே இல்லை.
கட்டாய நன்கொடைக்கு எதிராக புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்வது வாடிக்கையான சமாதானம்தான். தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிநிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?

இந்த அரசாங்கம் எதைஎதையோ இலவசமாகக்கொடுக்கிறது. இன்னும் கொடுக்கப்போவதாக சொல்லி வருகிறது.

தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே, அது ஏன்?

Wednesday, April 15, 2009

இடியன் பணிக்கர்



மலையாளத்தில்:வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: மு.குருமூர்த்தி


இடியன் பணிக்கர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகப்போகிறான் என்ற செய்தி கேட்டவுடனேயே லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு சந்தோஷம்.

அது மட்டுமல்ல.

கைதி தானியேலின் நொந்துபோன இதயம் இடியன் பணிக்கரிடம் இப்படிச் சொன்னது:

"போ...போ...நீ அப்படியே போயிடுவே."

ஓர் அரசு ஊழியனை அப்படி சபிக்கலாமா?

ஆனால் தானியேல் இடியன் பணிக்கரின் உருவத்தில் ஒரு முழு அரசாங்கத்தையும்
அல்லவா பார்த்தான்!

அப்படிப்பார்ப்பது சரியல்ல என்பது தானியேலுக்கு தெரியவில்லை. அவனுக்கு கல்வியறிவு இல்லை. கொஞ்சமாக எழுதப்படிக்கத்தெரியும். மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். வயிற்றுப்பிழைப்பிற்கென எந்த தொழிலும் தெரியாது.

வெறும் கம்போஸிட்டர். ஒருநாள் அந்த வேலையும் போய்விட்டது.

வேலை போனபிறகு பத்து இருபது மைல் தொலைவில் இருந்த பட்டணத்திற்கு

வந்து பல அச்சகங்களிலும் வேலை தேடினான். பயனில்லை.அப்படி அலைந்து திரிந்தபோதுதான் இடியன் பணிக்கரிடம் சிக்கிக் கொண்டான்.

எந்த வேலையுமில்லாமல் அலைந்து திரிந்ததால் சந்தேகக்கேஸ். தானியேலை லாக்கப்பில் வைத்து இடியன் பணிக்கர் செம்மையாக அடித்து உதைத்தான்.

அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம்மாறிப்போகிறான்.

லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன்பணியாற்றிய போலீஸ் காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.

இடியன் பணிக்கரை யாருக்கும் பிடிக்காது. இன்ஸ்பெக்டரை சந்தோஷப்படுத்த அவன்
எதுவும் செய்வான். எதுவும் சொல்வான்.

மூச்சுக்கு முன்னூறு தடவை "ஆர்டர்...ஆர்டர்..." என்ற கர்ஜனை வேறு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அசிங்கமான வார்த்தைகள்.

எல்லோருடைய சாபத்திற்கும் இடியன் பணிக்கர் ஆளாகிப்போனது இப்படித்தான்.

தானியேலும் கைதிகளும் கம்பிகள் வழியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இனிமேல் கொஞ்சநாளைக்கு தாளம் தட்டுதலும், சலங்கைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இடியன் பணிக்கர் அடிப்பதும் உதைப்பதும் அதற்காகத்தான்.

"போயிட்டு வரேன் ரைட்டர் ஸார்..." என்று சொல்லியபடி இடியன் பணிக்கர் ரைட்டரின் மேசைக்கு எதிரில் போய் நின்றான்.

நீண்டு மெலிந்த தேகம் அவனுக்கு. சுருட்டை முடி. சாந்தமான கண்கள்.

புன்சிரிப்புடன் கைதிகளையும் ஒரு பார்வை பார்த்தான்.

ஸ்டேஷன் ரைட்டர் சிரித்துக்கொண்டே அனுமதி கொடுத்தார்.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, இடது கையில் யூனிபார்ம்

மூட்டை...சகிதமாக இடியன் பணிக்கர் ஸ்டேஷனை விட்டு இறங்கிப்போனான்.

"அப்படியே போயிடுவே போ..." தானியேல் மறுபடியும் மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

கொஞ்ச நாட்கள் கழிந்தபிறகு ஒரு துக்கச்செய்தி: இடியன் பணிக்கர் அவுட்போஸ்ட் போலீஸ்
ஸ்டேஷனில் தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போனான்.

அதற்கப்புறம் தானியேல் கேள்விப்பட்டசெய்தி இதுதான்:

இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போனபோதுதான்
சடலத்தைப்பார்த்திருக்கிறார்கள். ஸ்டேஷனின் உள்ளே உத்திரத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுவரோடு சேர்த்து ஒரு மேசை இருந்திருக்கிறது. மேசைமேல்
ஏறி உத்திரத்திற்குப்போயிருக்கிறான். அங்கிருந்து சுருக்குப்போட்டுக்கொண்டு தொங்கியிருக்கி
றான்.

எனவே அது தற்கொலை என்று பதிவு செய்யப்பட்டது.

ஆனால் தானியேலுக்கு நிம்மதியில்லை. இடியன் பணிக்கருக்கு மனைவியும் ஐந்து பிள்ளை
களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருந்த ஆதாரம் அழிந்து போயிற்றே!
தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டும் இடியன் பணிக்கர் செத்துப்போகவில்லை.
இன்னும் எத்தனைபேர் சாபம் கொடுத்தார்களோ? இப்படி சொல்லி தானியேல்
சமாதானமடைந்து கொண்டான்.

அவன் செய்த கொடுமையான செயல்களே அவனுடைய மனசாட்சியை உறுத்தியிருக்க
வேண்டும்.

போலீஸ்காரர்களும், கைதிகளும் பல சம்பவங்களைச் சொன்னார்கள்.

மிளகாயை அரைத்து தேய்த்து கொடுமைப்படுத்தியது.

நிரபராதிப்பெண்ணிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியது...

ஆண்குறியில் எண்ணெய்த்துணியைச்சுற்றி கொளுத்திக்கொன்றது...

ஒரு அரசியல்வாதியைப்பிடித்து அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது...

இப்படிப்பல கதைகள்.

"எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப்போலத்தான் இருப்பார்களா?"
இல்லை. இல்லை.
எல்லா போலீஸ்காரர்களும் இடியன் பணிக்கரைப்போல அத்தனை கொடூரமானவர்கள் இல்லை.

இடியன்பணிக்கர் கொடூரக்காரனாக இருந்தாலும் அவனுடைய மனைவி அவனிடம்
நேசமாகத்தானே இருந்தாள்.

அவனுடைய குழந்தைகளும் அவனை நேசித்திருப்பார்கள் இல்லையா?

மனைவி அவனை 'அத்தான்' என்று தானே அழைத்திருக்கவேண்டும்.

குழந்தைகள் 'அப்பா' என்றுதானே அழைத்திருக்கவேண்டும்.

இப்போது அந்தக்குடும்பம் தலைவனில்லாத குடும்பமாகிப்போய்விட்டது.

தானியேல் கொடுத்த சாபத்தினால் மட்டுமா இப்படி நடந்துபோனது?

தானியேல் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை.

இடியன் பணிக்கர் போனதற்கப்புறமும் தானியேலுக்கு அடியும் உதையும் விழுந்தன.

உடம்பெல்லாம் சொறியும் சிரங்கும் பீடித்தது. ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டு தானியேல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்.

ஒருநாள் இரவு இடியன் பணிக்கரைப்பற்றி பேச்சு வந்தது.

ஒரு நாடகக்காரியை கொலைசெய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த

வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றகைதி ஒருவன் அங்கு இருந்தான். அம்மைத்தழும்பும்,
ஒற்றைக்கண்ணும் கறுத்த உடம்பும் கொண்ட ஒரு தடியன் அவன். ஒருநாள் ராத்திரி அவனுடைய சொந்தக்கதையில் அடங்கியிருந்த வீரப்பிரதாபங்களை கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

"எனக்கு யாரெல்லாம் தொந்தரவு கொடுத்தார்களோ அவர்களை நான் சும்மா விடமாட்டேன்.
நானும் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன். ஒருத்தனை ஒருதடவை தானே கொல்லமுடியும்"

"யாரையாவது இரண்டு தடவை கொல்லவேண்டுமென்று தோன்றியிருந்ததா?" தானியேல் கேட்டான்.

"ஒருவனை மட்டும் கொன்ற விதம் திருப்தியாக இல்லை. துண்டுதுண்டாக அறுத்துக்கொல்லவேண்டிய பரம துஷ்டன் அவன். ஒரே அடியில் செத்துப்போய்விட்டால் சப் பென்று போய்விடாதா நமக்கு?"

"நான் வெறுமனே தொட்டேன். அவ்வளவுதான். முகத்தில் 'சப்'பென்று ஒரு அறை கொடுத்தேன். ஆள் செத்துக்கிடக்கிறான். வேறு யாரும் அங்கே இல்லை. அப்புறம் மேசையை சுவரோடு சேர்த்துப்போட்டேன். ஒரு கயிற்றை கழுத்தில் சுருக்குப்போட்டு அவனை உத்திரத்தில் தொங்கவிட்டேன். "

"யார் அவன்?' தானியேலின் கேள்வி.

அந்த ஆயுள் கைதி சிரித்துக்கொண்டே சொன்னான்."ஒரு போலீஸ்காரன். பெயர் இடியன் பணிக்கர்"

Friday, April 10, 2009

ஓடிப்போ குதிரையே! லாயத்தைப் பூட்டவேண்டும்!



10-4-2009 வெள்ளிக்கிழமை அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கருத்தாழமிக்கது. மக்களின் அன்றாட பிரச்சினைய வெளிச்சம்போட்டுக்காட்டும் அந்த தலையங்கத்தை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளிகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதை இந்தத் தலையங்கம் குறைகூறுகிறது. அண்மையில் வெளியான தமிழக அரசின் அறிவிப்பின்படி தேர்தல் முடிந்தபிறகு தவறுசெய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு முன் தேதியிட்டு இந்த பணப்பயன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் ஒருநாள் தாமதமாக சம்பளம் கிடைத்தது என்கிற காரணத்திற்காக 74 பள்ளிகளை மூடிவிட்டு 158 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முன் தேதியிட்டு இரத்து செய்யப்பட்டது.

ஆனால் கல்விக்கட்டணம் என்கிற பெயரில் பொதுமக்களிடம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளின் மீது தேர்தல் முடிந்தபிறகுதான் நடவடிக்கையாம். இது என்ன நியாயம்?

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தனியார்பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முடித்து கல்லா கட்டிவிடும். குதிரை ஓடிப்போனபிறகு லாயத்தை பூட்டுவது போன்றது இது.

சிறிய நகரத்தில்கூட ஒரு குழந்தைக்கு கல்விக்கட்டணமாக 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கொடுத்து அழ வேண்டியிருக்கிறது. இதைத்தவிர பாடப்புத்தகம், சீருடை, காலணி என்று இந்தப்பள்ளிகள் அடிக்கும் கொள்ளை தனி.

ஆனால் இந்த தனியார் பள்ளிகளுக்கு அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இப்போதும் அளித்து வருகிறது.

பெரும்பான்மையான தனியார்பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுவதால் தேர்தல் சமயத்தில் அவர்களின் வாக்கு வங்கியை சீண்டவேண்டாம் என்றுகூட இந்த அரசு கருதியிருக்கலாம். தங்களுடைய குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பல சவுகரியங்களையும் தியாகம் செய்யும் பெற்றோர்களை இந்த அரசு எண்ணிப்பார்க்காததுதான் இப்போதைய சோகம்.

இந்த அரசு எதை எதையோ இலவசமாக அளிக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத்தேவையான கல்வியை மட்டும் எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று மட்டுமே நாம் இப்போது சொல்லமுடியும்.

Tuesday, April 7, 2009

ஆன்லைன் வியாபாரமும் அன்னாடங்காச்சிகளும்...




ஒரு முறை பராளுமன்றத்தில் கூக்குரல் எழுந்தது. அப்போது எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன.விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.

"வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா...." என்றார் நிதியமைச்சர்.

"விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை," என்றார் பிரதமர்.

வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.

பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.

வெங்காயம் விலையேறிப்போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் அன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ இருந்ததை தொலைக் காட்சியில் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாகவேண்டும். வசதிபடைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்னாடங்காச்சிகள்தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்லுகிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக்கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத்தொடங்கிவிட்டது.

விளைவு கூட்டணிக்கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூடியிருக்கின்றன....புதிய வடிவத்தில்.

ஆக்கபூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப்பிசைந்து கொண்டிருக்கிறது.

மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிகொண்டிருக்கிறது.
கடப்பாரையை விழுங்கிவிட்டு இஞ்சிக்கஷாயம் குடித்துக்கொண்டிருக்கிறது இந்த அரசு.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவுதானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசிஉயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இப்போதைய விலைவாசிஉயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப்பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறினார்.....பிரதமரின் முன்னிலையில்.

டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்னாடங்காச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.

இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்துகொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம்.

அரிசி பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊகவணிகர்கள் கொள்ளைலாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.

பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.
ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.

ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப்பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டுவிடுகிறது.

பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக்கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.

பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும்.

பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொருவாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN.

பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பிவிட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்துகொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத்தன்மையை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.

கலப்புப்பொருளாதாரத்தையும், கிராமத்தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத்தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.

நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடுமுன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நாடு முன்னேறிக்கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக்கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளைநிலங்களை மேம்படுத்தவேண்டும் என்பதில் அக்கறையில்லை.

ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்துவிடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக்கதைதான்.

இந்தியாவில் உணவுப்பொருள்விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.

இந்தியர்களின் ஆதாரத்தொழிலான வேளாண்மைக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப்போவதில்லை.

நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப்பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.

உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும்வரை அன்னாடங்காச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப்போவதில்லை.

Monday, April 6, 2009

பழனிவிபூதியும் டெல்லிஅடுப்பும்






மலையாள மூலம்: ராமகிருஷ்ண பாலாட்
தமிழில்: மு.குருமூர்த்தி

சுப்பிரமணியனும் என்னுடைய நண்பன்தான். பழனிக்குப்பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். கோழிக்கோட்டிற்கு வந்து பிழைத்துக்கொண்டிருந்தான். செருப்புத்தைக்கும் தொழில்தான். ஏழை என்பதை சொல்லவேண்டியதில்லை.

அவனை நான் பார்த்தது ஐந்தாறு மாதங்களுக்கு முன்புதான். ஒருகண்பார்வைதான் அவனுக்கு. பிறவியிலிருந்தே மற்றொரு கண்ணுக்கு பார்வை இல்லையாம். எண்ணெய் பார்க்காத செம்பட்டை தலைமுடியும், எப்போதும் அணிந்திருக்கும் நைந்து கிழிந்த லுங்கியும், பொத்தல் சட்டையும் அலங்காரங்கள்.

சுத்தம் சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத ஆள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து போகும். ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக்கிழமை வருவான். செருப்பு ரிப்பேர் செய்யவேண்டியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டுப்போவான்.

பாலக்காட்டு கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது தெரிந்துவைத்திருந்த தமிழ் அறிவை உபயோகித்துப்பார்க்க எனக்குக்கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை. அவனுடைய குரல் கேட்டால் போதும். ஒரு கிளாஸ் காப்பியோடு எங்கள் வேலைக்காரி அடுப்படியிலிருந்து வந்துவிடுவாள். சுப்பிரமணியனுக்கு காப்பி கொடுப்பதற்காகவென்றே ஒரு கண்ணாடி தம்ளரை தனியாக வைத்திருக்கிறார்களென்றும், அதை வேறுயாரும் உபயோகிப்பதில்லையென்றும் எனக்கு நேற்றுதான் தெரியவந்தது. இன்று நான் அந்த கிளாஸில் தான் காப்பி குடித்தேன்.

கொஞ்சநாட்களுக்கு முன்னால் காலைநேரத்தில் சுப்பிரமணியன் என்னுடைய வீட்டுக்கு வந்தான். சொந்த ஊருக்குப்போவதாகச்சொன்னான். மகன் தமிழ்ச்செல்வனுக்காக பாளையத்தில் வாங்கிய அல்வாப்பொட்டலம் கைப்பையில் இருந்தது. போகிறவழியில் பழனியில்தான் மனைவிக்கு சேலை வாங்கவேண்டுமாம். பழனியில் சேலை வாங்குவதற்கு பதினைந்து ரூபாய் போதுமாம். ஊரிலிருந்து திரும்பிவரும்போது எனக்கென்று ஏதாவது கொண்டுவரவேண்டுமாம். எனக்கு என்னவேண்டுமென்று தெரிந்துகொண்டு போவதற்காக வந்திருப்பதாக சொன்னான்.

என்னால் உடனடியாக பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. ஒன்றும் வேண்டாமென்று பலமுறை கூறியும் சுப்பிரமணியன் என்னை விடுவதாக இல்லை.
"பழனி வழியாகத்தானே போகிறாய்? போகும்போது எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டால் அதுவே போதும்."

நான் தட்டிக்கழிக்க முயன்றேன்.

இதைக்கேட்டதும் அவனுக்கு நான் ஒரு பழனிபக்தன் என்று தோன்றியிருக்கவேண்டும்.
"அப்படியென்றால் பஞ்சாமிர்தம் கொண்டுவரட்டுமா?" என்று பிடித்துக்கொண்டான்.

கடைசியில் பழனியிலிருந்து எனக்காக கொஞ்சம் விபூதி கொண்டுவருவது என்று எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. சுப்பிரமணியன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து போனதும், "எப்போதிருந்து இந்த பக்தி முளைத்தது?" என்ற என்மனைவியின் குரல் உள்ளிருந்து கேட்டது.

அதேநாள் மாலையில் என்னுடைய நண்பன் ஜோசப், மனைவி மேரியோடு அவனுடைய புதிய ஃபியட் காரில் என்னைப் பார்க்க வந்தான். என்னுடைய மனைவி வாசல்வரை ஓடிப்போய் அவர்களை வரவேற்றாள்.

"அதிக நேரம் உட்காரமுடியாது. நாளைக்கு நாங்கள் டெல்லிக்கு போகிறோம். இன்னும் 'பாக்கிங்'கூட ஆகவில்லை." வீட்டுக்குள் நுழையும்போதே மேரி புலம்பிக்கொண்டு வந்தாள்.

இவ்வளவு அவசரமாக வந்திருப்பதால் ஏதாவது முக்கிய காரியம் இருக்கும் என்று நான் நினைத்தேன். விசாரித்ததில் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆகா, இந்த சேலை எவ்வளவு அழகாக இருக்கிறது! டெல்லியில் இதைப்போல் நிறைய வாங்கலாம் இல்லையா?" என்னுடைய மனைவி அவளுக்குப்பிடித்த விஷயத்தைப்பேசிக்கொண்டிருந்தாள். அதைக்கேட்ட உடனேயே மேரியின் முகம் மலர்ந்தது.
"இதொன்றும் அவ்வளவு விலையில்லை! டூ ஹண்ட்ரட் அண்ட் ஸம்திங்........அவ்வளவுதானே?" மேரி ஜோசப்பைக் கேட்டாள்.
"ம்ஹூம்........அது இருநூற்று நாற்ப்பத்தேழு ரூபாய்!"

ஜோசப் எப்போதும் இப்படித்தான். இத்தனை பைசா என்றுகூட கணக்குப்பார்ப்பான்.

"இவளுடைய ஷாப்பிங்குக்காகத்தான் டெல்லிக்குப்போகிறோம். இங்கேதான் நல்ல 'திங்ஸ்' எல்லாம் கிடைக்கமாட்டேனென்கிறதே?"
'திங்ஸ்' வாங்குவதற்காக டெல்லிக்குப்போகும் அவர்களைப்பார்த்து மலைத்து நின்ற என்னைப்பார்த்து திடுக்கிடவைக்கும் கேள்வியை ஜோசப் கேட்டான்.
"மிஸ்டர் ராமகிருஷ்ணன்! நீங்களும் எங்களோடு வருகிறீர்களா? ஜாலியாகப் போய்விட்டு வரலாம்......என்ன மேரி?....இவர்களும் வந்தால் நல்லா இருக்கும் இல்லையா?"
"ஆமாம் ப்ளீஸ் சீதா! நீங்களும் எங்களோடு வாருங்கள்," மேரி என் மனைவியின் பக்கம் திரும்பி சொன்னாள்.

நான் நினைத்துக்கொண்டேன். 'இவர்கள் டெல்லிக்குப்புறப்பட இன்னும் இருபத்து நான்கு மணிநேரம்கூட இல்லை......இப்போது வந்து கூறுகிறார்கள். நேற்றும் அதற்கு முன் தினமுமெல்லாம் சந்தித்திருக்கிறோம். இன்றைக்கு இந்த நிமிஷம் வரை இப்படியொரு பேச்சு இல்லை. திடீரென்று புறப்பட எங்களால் முடியாது என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிந்த இவர்கள், நாங்கள் இல்லாமல் தனியாகப் போகமுடியாது என்பதுபோல் பேசுகிறார்கள்!

ஏதோவொரு சமாதானம் சொல்ல நான் திணறிக்கொண்டிருந்தபோது என்மனைவி குறுக்கிட்டாள்."ஓ, மேரி.....நாங்களும் உங்களோடு வரலாம்தான். ஆனால் எங்களுடைய நாயை எங்கே விட்டுவிட்டு வருவது என்பதுதான் ப்ராப்ளம்!"

எங்களுடைய நாயை அடுத்த வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்கில் வெளியூர் போயிருக்கிறோம். இருந்தாலும் சீதா இப்படிக்கூறிய சமாதானம் எனக்கு சரி என்று தோன்றியது.

ஜோசஃப்- மேரி தம்பதியின் முகத்தில் வருத்ததின் நிழலாடியது. நாங்கள் இல்லாமல் டெல்லிக்குப்போகவேண்டியிருப்பதை நினைத்து அவர்களுக்கு துக்கமான துக்கம்போலும்.
அவர்கள் புறப்படுவதற்காக எழுந்தபோது என்மனைவிக்கு 'பளிச்'சென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

"இதோ பார் மேரி! அங்கே 'நூதன் ஸ்டவ்' கிடைக்கும். டெல்லி ஸ்டவ் வாங்கவேண்டும் என்று எனக்கு ரொம்பநாளாக ஆசை. உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையென்றால்....."
"சே....சே...! அதில் என்ன சிரமம்? ஒன்று போதுமா? போதாதென்றால் இரண்டாக வாங்கி வருகிறேன்.

இப்போதெல்லாம் 'காஸ்' தீர்ந்து போனால் மீண்டும் கிடைப்பதற்கு எத்தனை நாட்களாகின்றன!.......இரண்டே கொண்டுவந்து விடுகிறோம். நினைவுபடுத்தியதும் நல்லதாய்ப்போயிற்று. எங்களுக்கும் ஒன்று வாங்கவேண்டும்....." இப்படி ஜோசஃப் உறுதியாகச் சொன்னதால் என் மனைவி உள்ளே போய் நூறு ரூபாயோடு திரும்பி வந்தாள்.

"என்ன சீதா இது?.....இது எங்களையெல்லாம் 'இன்சல்ட்' செய்வது போல..." என்றெல்லாம் மேரி சொன்னாலும் பணத்தை வாங்கி கைப்பையில் வைத்துக்கொள்ள தவறவில்லை.
அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது இனம்புரியாத வேதனை. முகத்திலுள்ள தசைகளெல்லாம் வலித்துக்கொண்டிருந்தன. ஒரு வேளை ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக முகத்தில் சிரிப்பை வலிந்து வரவழைத்துக் கொண்டிருந்ததால் கூட இருக்கலாம்.

"அப்பாடா! இந்தமுறை 'காஸ்' தீர்ந்துபோனால் கவலைப்படவேண்டாம். இரண்டு நூதன்ஸ்டவ் மட்டும் இருந்துவிட்டால் போதும்!" என்று சொல்லிக்கொண்டே மனைவி உள்ளே போய்விட்டாள்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் அதிகாலையில் சுப்பிரமணியன் வந்தான். பழைய லுங்கியும் சட்டையும்தான். பிரயாணத்தினால் இன்னும் கொஞ்சம் கசங்கியிருந்தன. கையில் சிறிய மூட்டை. நான் இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டேன்.

ஐந்தாறு எலுமிச்சம்பழங்களும், இரண்டு பாக்கெட் விபூதியும், அரைலிட்டர் அளவிற்கு நிலக்கடலையும். இவைதாம் என் நண்பனுடைய அன்பளிப்புகள். ஒரு ரூபாய்க்குக் குறைவான வருமானத்தோடு சில நாட்களையும், முழுப்பட்டினியாகச் சிலநாட்களையும் கழிக்கும் சுப்பிரமணியனுடைய அன்பளிப்பு.

பழனியிலும் வீட்டிலும் நடந்த விஷேசங்களையெல்லாம் என்னிடம் சொன்னான். நான் எவ்வளவோ முயன்றும் கொடுக்க முயன்ற பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டான். தான் கொண்டுவந்த கடலையைக்கொண்டு எப்படிக்கறி செய்யலாம் என்று என்னுடைய மனைவிக்கு சொல்லிக்கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டுப்போனான்.

அன்று சாயுங்காலம் நாங்கள் ஜோசஃப்-மேரி வீட்டிற்கு போனோம். அவர்கள் திரும்பிவந்து ஒருவாரமாகிவிட்டது என்று கேள்விப்பட்டிருந்தோம். காத்திருந்து, காத்திருந்து என் மனைவி பொறுமை இழந்துவிட்டிருந்தாள். 'காஸ்' தீர்ந்துபோகும் நிலையிலிருந்ததால் 'சரி அங்கேதான் போய்வருவோமே' என்று போயிருந்தோம்.

டெல்லியில் எல்லா 'திங்ஸ்' களைப்பற்றியும் அவைகளின் விலைகளைப்பற்றியும் வாய்சலிக்காமல் சொன்னார்கள். ஸ்டவ்வைப்பற்றி ஒன்றும் வாய் திறக்கவில்லை. டெல்லியில் வாங்கிய 'டங் கிளீனரை' பார்ப்பதற்காகவோ என்னவோ சீதாவும் மேரியும் உள்ளே போயிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் 'ஸ்டவ்' விஷயத்தை எடுத்தேன். முதலில் ஜோசப் 'என்ன...ஏது' என்று புரியாமல் விழித்தான்.

"ஸ்டவ்வா?....எந்த ஸ்டவ்?....ஓ நூதன் ஸ்டவ்வா? வெரி ஸாரி! நாங்கள் அதை மறந்தே போய்விட்டோம். சே! கொஞ்சம்கூட ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை. பக்கத்தில் மிட்டாய்த் தெருவில்தான் நல்ல ஸ்டவ் கிடைக்குமே! அப்பாடா! ஒரு வார அலைச்சல்! ஐயாயிரம் ரூபாய் காலி!"

ஜோசஃப் மீண்டும் விலைவாசியைப்பற்றி அலச ஆரம்பித்துவிட்டான்.

உள்ளேயிருந்து வந்த என் மனைவியின் முகத்திலும் மகிழ்ச்சியில்லை.

"பாருங்க....டெல்லியில் எல்லா இடத்திலும் கேட்டிருக்கிறார்கள். நூதன் ஸ்டவ் 'அவுட் ஆஃப் ஸ்டாக்'காம். நமக்காகத்தேடி அலைந்ததில் ஒரு நாள்முழுவதும் வீணாகப்போய்விட்டதாக மேரி சொல்லுகிறாள். நமக்காக அவர்களுக்கு ரொம்ப கஷ்டம்! " சீதா வருத்தத்தோடு சொன்னாள்.
நான் ஜோசஃப் முகத்தைப்பார்த்தேன். அது நன்றாக இல்லை.

"ம்.....பெரிய நூதன்! சரிதான் போ!...இங்கே 'ஜனதா ஸ்டவ்' இருக்கவே இருக்கிறது! 'ஈக்வலி குட்' அதைவாங்கினால் போதும், போ!"

பிறகு ஜோசஃப் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை.

வீட்டுக்குத்திரும்பி நடந்துகொண்டிருந்தபோது சீதா சொன்னாள்.

"எப்படிப் புளுகுறாங்க!......பார்த்தீங்களா? அவங்க கொண்டுவந்திருக்கிற புது நூதன் ஸ்டவ் அடுப்படியில் இருப்பதை நானே பார்த்தேன். அப்படியிருந்தும் ஸ்டவ் கிடைக்கவில்லையென்று எதற்காக இப்படி நேருக்குநேர் பொய்சொல்லவேண்டும்?"

"அந்தப்பணத்தை மேரி திருப்பிக்கொடுத்துவிட்டாளா?" நான் கேட்டேன்.
"சே!....அதை எப்படிக்கேட்பது? அவர்களாகத்தரும்போது தரட்டும். வேகமாக நடங்கள். சுப்பிரமணியன் சொன்னமாதிரி கடலைக்கறி சமைத்துப்பார்க்கவேண்டும்." மனைவி நடையை எட்டிப்போட்டாள்.

கதவைத்திறந்ததும் வேலைக்காரி "காஸ் தீர்ந்து போச்சு," என்றாள்.

எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு நான் அன்றுதான் நெற்றிநிறைய விபூதி இட்டுக்கொண்டேன்.

நிச்சயமாக அது கடவுள்மீது எனக்குள்ள பக்தியினால் அல்ல!

இரண்டு கிளாஸ் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தேன். அதுவும் நிச்சயமாக தாகம் தணிப்பதற்காக அல்ல!

அவன் அல்லவா உண்மையில் மனிதன்!

Sunday, April 5, 2009

நாளெல்லாம் போகிப்பண்டிகைதான் இனி நமக்கு...




சாமிக்கண்ணுவோட வயலில் களையெடுப்பு.
பதினோரு சனத்துக்கு டீயும் வடையும் போயாகணும்.
கோணமுக்கு சிங்காரம் டீக்கடையில் நிற்கிற சாமிக்கண்ணுவுக்கு அவசரம்.
சாவகாசமாக அஞ்சு பார்சல் டீயை கொதிக்கக்கொதிக்க கலந்து பிளாஸ்டிக் கேரி பையில் போட்டு முடிச்சும் போட்டாயிற்று.
பன்னிரெண்டு வடையை இன்னொரு கேரி பையில் போட்டு அதையும் முடிச்சு போட்டாயிற்று.
இரண்டு முடிச்சையும் இன்னொரு கேரி பையில் போட்டு கூடவே பன்னிரண்டு பிளாஸ்டிக் கப்பையும் எண்ணிப்போட்டு காசை வாங்கிக்கொண்டான் சிங்காரம்.

எங்கெல்லாம் உடலுழைப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் பதினோரு மணிக்கு டீயும் வடையும் போயாகணும்.
சூடான டீயை மலிவான பிளாஸ்டிக் கேரி பையில் கொண்டுபோய் பிளாஸ்டிக் கப்பில் பிதுக்கிக்கொடுப்பது இன்று சர்வசாதாரணம்.

வேலைசெய்யும் இடம் எதுவாக இருந்தாலும் சரி...
அது வயல் வரப்பாக இருக்கலாம்....
பூமிக்கு மேலே துருத்திக்கொண்டிருக்கும் கட்டிடமாக இருக்கலாம்....
தொழிற்பட்டறையாக இருக்கலாம்........
அங்கெல்லாம் இறந்துபோன பிளாஸ்டிக் குப்பைகள் மவுனமாக கிடப்பது அன்றாடக்காட்சி.

ஒரு பார்சல் சாப்பாடு வாங்கப்போனால் பெரிய கேரி பைக்குள் ஒன்பது சிறிய கேரி பைகள்............

சந்தைக்கு நண்டுவாங்கப்போன கணவன் திரும்பும்போது இரண்டு கேரி பைகள். நண்டுக்கால்கள் பொத்தலிட்ட ஒரு பிளாஸ்டிக் பை.

தக்காளியும், பச்சைமிளகாயும், கொத்துமல்லித்தழையும் பிதுங்கிக்கிடக்கும் இன்னொரு பிளாஸ்டிக் பை.

டாஸ்மாக் கடைக்கு போனால் குடிகார பற்களால் கடிபட்டு வீசிஎறியப்பட்ட காலி தண்ணீர் பைகள், ஊறுகாய் பைகள்......

கிராமப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் பள்ளிவிட்டபிறகு சென்று பார்த்தால் காலி பாக்குப்பொட்டல உறைகள்........

உடலுழைப்புத்தொழிலாளிகள் பசியைமறக்க பயன்படுத்திய பான்பராக்கு காலி உறைகள்....

விளையாட்டு மைதானத்தில்கூட வெற்றியைக்கொண்டாட பான்பராக்கு உபயோகம்....

திருமணக்கூடத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கப்புகளும், பைகளும்........

சித்திரைமாதத்தில் வயல்களில் எரு அடிப்பார்கள். நிலமில்லாதவர்களின் வீடுகளில் இருக்கும் குப்பைமேட்டை விலைபேசி வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அது குப்பையாக இருந்து உரமாக மாறிய காலம் போயேபோய்விட்டது.

இப்போதெல்லாம் எருஅடித்த வயலைப்போய்ப்பாருங்கள். கிழவன் தலை பஞ்சு முடியைப்போல் வயல்முழுவதும் வெள்ளைநிறத்தில் பிளாஸ்டிக் காகிதங்கள்.
நடவுப்பெண்களின் கால்களில் சிக்கி இழவெடுக்கும் வெள்ளை மாசு.

இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் உறைகள் பூவுலகில் பிறந்து 150 ஆண்டுகள்தான் ஆயிற்று என்ற செய்தி ஆச்சரியமானது.

பத்தாண்டு பழமையானவற்றையே “பரண்மேல் ஏற்று” என்று கூக்குரலிடும் மனிதமனம் இந்த பிளஸ்டிக்கைமட்டும் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது ஒன்றும் தற்செயலானது அல்ல.

இலேசானது.......
கவர்ச்சியானது......
விலைகுறைவானது......
என்றெல்லாம் அது பிறந்தபோது போற்றப்பட்டது உண்மைதான்.

இன்றைய தினம் நம்முடைய நகராட்சிகளுக்கு நரகாசுரனாக தோற்றமளிப்பதும் இந்த பிளாஸ்டிக் பைகள்தான்.

நரகாசுரனாவது தீபாவளிக்கு தீபாவளி வந்து ஒழிந்துபோவான். இந்த பிளாஸ்டிக் அரக்கன் ஒவ்வொரு மணித்துளியும் அவதாரமெடுத்து நம்முடைய நகரசபைகளை வதைக்கிறான் என்பதுதான் உண்மை.

சீனாவும், வங்காளதேசமும், உகாண்டாவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக்கட்டுவதில் முன்னணி நாடுகள்.

அமெரிக்க மாநிலங்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான போருக்கு இடுப்புத்துணியை வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டன.

இங்கெல்லாம் “கடைக்குப்போகும்போது துணிப்பைகளை எடுத்துப்போங்கள்” என்று மக்களை கையெடுத்துக்கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நம்மை ஆளுபவர்கள் கடைசியாக ஓட்டுக்கேட்கும்போது கையெடுத்து கும்பிட்டதாக ஞாபகம்.

பாலிஎத்திலீன் என்பது எண்ணெயிலிருந்து உண்டாக்கப்படும் தெர்மோ பிளாஸ்டிக் ஆகும். இது கரப்பான் பூச்சிகளால் அரிக்கப்படாதது. நாட்கள் செல்லச் செல்ல இந்த வகையான பிளாஸ்டிக்குகள் தீங்கு தரக்கூடிய நுண்ணிய பெட்ரோ பாலிமர்களாக சிதைவடைந்து மண்ணையும், நீரூற்றுக்களையும் சென்றடைகின்றன. இதன் காரணமாக இன்று பிளாஸ்டிக் நம்முடைய உணவுச்சங்கிலியிலும் ஊடுருவியிருப்பது உண்மை.

பெட்ரோ பாலிமர்கள் நீர்த்தாரைகளின் வழியாக கடலில் எப்போதோ கலந்துவிட்டன. வடக்கே ஆர்க்டிக் முதல் தெற்கே பாக்லண்ட் தீவுகள் வரையில் பெட்ரோ பாலிமர்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடுமையான பிளாஸ்டிக் துகள்கள் “வெள்ளை மாசு” என்று பெயரிடப்பட்டுள்ளது.
வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்ற எல்லா உயிரினங்களிலும் வெள்ளை மாசு பரவி அவற்றின் இனத்தை அழித்தொழிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சட்டமுன்வடிவை கொண்டு வந்தது. தொழிலதிபர்களிடமிருந்து பெறப்பட்ட நெருக்குதல் காரணமாக சட்டமுன்வடிவு விவாதப்பொருளாகி வலிமையிழந்துவிட்டது. பெருமளவு தொழிலாளர்கள் வேலையிழப்பர் என்பதை காரணம் காட்டி அரசின் சட்டமியற்றும் எண்ணம் வீரியமிழந்துவிட்டது.

மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் இன்று உச்சத்தில் உள்ளது.

இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் தடைசெய்யப்படுமானால் இருபத்தோரு மைக்ரான் பிளாஸ்டிக்கை ஏராளமாக தயாரிக்க தொழிலதிபர்கள் தயாராக இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளின் ஆரோக்கியமற்ற பணிநிலை, குறைந்த ஊதியம் ஆகியவற்றில் அக்கறையில்லாத முதலாளிகள் தொழிலாளிகளின் வேலையிழப்பை மட்டும் முன்னிறுத்தி வெள்ளை மாசை பரப்பிவிடும் பணியில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாட்டில் ஒன்றும் வியப்பான செய்தியில்லையல்லவா!

இந்த விவாதத்தின்போது பிளாஸ்டிக் குடங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்றகேள்விதான் அரசை அச்சுறுத்தியிருக்கவேண்டும். இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பிளாஸ்டிக் குடங்கள் நீரை சேமித்து வைப்பதற்கு ஏற்றவை அல்ல. அவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் காட்மியம், பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் குடிநீரை நச்சுநீராக மாற்றும் வலிமை கொண்டவை.

பிளாஸ்டிக் குடங்களுக்கு தடைவிதிக்கப்படுமானால் ஈறைப் பேனாக்கி....பேனைப்பெருமாளாக்கும் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்.

சட்டம் போட்ட கட்சி கட்டம் கட்டப்பட்டு பெருமளவு வாக்குகளை இழக்கநேரிடும்.

மக்களின் உடல் நலமா, ஆட்சி அதிகாரமா என்ற பட்டிமன்றத்தில் ஆட்சி அதிகாரம் வென்றது என்பது சரிதானே!

பிளாஸ்டிக் நாகரிகத்தில் இன்று மக்கள் அதிகமாகப்பயன்படுத்தும் மெல்லிய பிளாஸ்டிக்குகள் ஒழிக்கப்படமுடியாதவை. மறுசுழற்சிக்கு மசியாதவை.
அவற்றை எரிக்க முற்படும்போது டையாக்ஸின் என்ற சிக்கலான வேதிப்பொருள் புகைவடிவில் வெளிப்படுக்கிறது. இவை உண்டாக்கும் நோய்களும் சிக்கலானவை.

புற்றுநோய், பிறவிக்குறைபாடுகள் போன்ற சிக்கலான நோய்களைஉண்டாக்கி இன்றைய மருத்துவர்களின் பணச்சிக்கல்களை தீர்த்துவைக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்திசெய்யும் தொழிலதிபர்களே பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்காக வாங்கும்படி அரசு சட்டமியற்றவேண்டும்.

வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு துணிப்பைகளும், காகிதப்பைகளும் செய்யும் வேலையை அரசே ஏற்படுத்தித் தரவேண்டும்.

இன்று நகராட்சிகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளின் முன்னால் கைகட்டி நிற்கின்றன. அவற்றை வெல்லும் வழியறியாது தீயிட்டு கொளுத்துமாறு தன்னுடைய தொழிலாளிகளை நிர்பந்திக்கின்றன.
விளைவு....

ஒவ்வொரு நாளும் வீதியெங்கும் புகை மண்டலம்.

மதுரையை எட்டிவிட்டோம் என்பதை அங்கிருந்துவந்த நறுமணம் கோவலனுக்கும், கண்ணகிக்கும், கவுந்தியடிகளுக்கும் உணர்த்தியதாம்.

இன்று.....

நகர எல்லையை எட்டிவிட்டோம் என்பதை டையாக்ஸின் புகை நமக்கு உணர்த்துகிறது.

தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பதுதான் போகிப்பண்டிகையின் நோக்கமாம்.

அய்யா! ஆளப்பிறந்தவர்களே!

மக்களின் ஆரோக்கியத்தை எப்போது சேர்த்தீர்கள் தேவையில்லாதவை என்ற பட்டியலில்?

Friday, April 3, 2009

பகவான் சன்னதியில்......




மலையாள மூலம்:ஓ.வி.விஜயன்
தமிழில்:மு.குருமூர்த்தி

டெல்லியில் ஜீவனம் நடத்துவதற்கான சம்பளம் கிடைத்தவுடன் குருவாயூர் கோவிலுக்குவருவதாக நேர்ந்துகொண்டிருந்தேன். மாதச்சம்பளம் லட்சம் ரூபாயானபோது லீவு எடுத்துக்கொண்டு குருவாயூருக்கு புறப்பட ஆயத்தமானேன்.
விபரத்தை மனைவியிடமும் சொன்னேன்....

" என்னுடன் கோவிலுக்கு வருவதில் உனக்கு ஒண்ணும் சங்கடமில்லையே?, பி.கெ.மரியாம்மா?"
"இப்போ என்னை இந்துவாக்கிடணும். கல்யாணம் கட்டியது அதுக்குத்தானே?"
"அப்படி யார் சொன்னது?"
"அப்போ நான் ஏன் குருவாயூருக்கு வரணும்?"
"நீ உன்னோட மதத்திலேயே இருந்துக்கோ பி.கெ.மரியாம்மா............புருஷன் நேர்த்திக்கடன் செலுத்தப்போகும்போது மனைவியும்கூட போவதுதான் நல்லது. வேண்டிக்கொண்டதற்கு ஒரு மரியாதை..."
"சரி....நான் வருவேன்.....ஆனால் என்னுடைய மதத்தை விடமாட்டேன்....."
"ஒரு விஷயம்..." நான் இடைமறித்தேன்."இழுத்துப்போர்த்திக்கொண்டு வரவேண்டாம். அரைமுண்டு உடுத்து வரணும்."
"ஏன் அப்படி?"
"அப்படிப்போகவில்லையென்றால் கோவில் கூட்டத்தில் அடி விழும்."
"ஓகோ!" அவளுடைய சங்கடம் குரலில் தெரிந்தது.
"ஆலயப்பிரவேசனத்திற்கு முன்பாக நான் ஒரு முறை குருவாயூர் கோவிலுக்குப்போயிருந்தேன். அப்போதே எனக்கு அடிவிழுந்தது. நானொரு ஷெட்யூல்ட் ஜாதிக்காரனென்று கல்யாணத்திற்கு முன்பே உனக்கு சொல்லியிருக்கிறேனில்லையா?......."
அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
"கடவுளே! நான் எப்போதாவது உங்களோட பேச்சை மீறியிருக்கேனா? நீங்க போற வழிக்குப் பின்னாலெதானெ நானும் வாரேன்.. எப்போதாவது மாட்டேனென்று சொல்லியிருக்கேனா?நீங்க சங்கடப்படவேண்டாம். அரைமுண்டு கட்டிக்கிறேன்."

பெட்டி படுக்கையெல்லாம் சத்திரத்தில் வைத்த கையோடு நானும் பி.கெ.மரியாம்மாவும் கோயிலுக்குப்போனோம்.
கீர்த்தனைகள் சொல்லியபடி கோவில் சன்னதியில் நடந்தேன். என்னைச்சுற்றிலும் அஷ்டபதி பாடி நடந்த பக்தர் கூட்டம் என் கண்ணில் படவில்லை. அங்கிருந்த கருங்கல் தூண்கள் கண்களில் படவில்லை. அஞ்சன நிறத்தான்.......அந்த குருவாயூரப்பன் மட்டும் தான் கண்ணில் தெரிந்தான். அவன் முன்பாக சாஷ்டமாங்க விழுந்தேன்.

"ஸாலே......." குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
குருவாயூரப்பன் தான்....... என்னைப்பார்த்து கண்ணடித்தார்.
பக்திப்பரவசத்தோடு எழுந்து நின்றேன்.
"வொ க்யா ஹை?"
கேட்டது குருவாயூரப்பன் தான். என்னுடைய கையிலிருந்த ஹிந்தி மாத இதழை சுட்டிக்காட்டி கேட்டார்.
"இதுவா?..........ஹிந்தி புத்தகம்.......சினிமா மாதப்பத்திரிக்கை...."
"இங்கே கொடு...." குருவாயூரப்பன் கைநீட்டினார்.
நான் இதழைக்கொடுத்தேன். அதை ஆவலாக குருவாயூரப்பன் படித்து முடித்தார்.
"இன்னும் ஏதும் இருக்கா?"
நான் கையெடுத்துக்கும்பிட்டேன்.
"தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால் இன்னும் நிறைய ஹிந்தி மாதப்பத்திரிக்கையெல்லாம் கொண்டுவந்திருப்பேன்."
"என்ன தெரியாமல் போனது?"
"பகவானே.....உங்களுக்கு ஹிந்தி தெரியுமென்கிற விஷயம்...."
"ஹிந்தி தெரியுமென்கிற விஷயமா!......முட்டாள்.."
பி.கெ.மரியாம்மா சட்டென்று குறுக்கிட்டாள்.
"ஹிந்துக்களோட தெய்வமே ! உங்களோட தாத்தாவயசு இவருக்கு......முட்டாள் என்று சொல்லவேண்டாம்..."
"இது யாருடா?" குருவாயூரப்பன் கேட்டார்.
என்னுடைய கை தானாகவே கூப்பிக்கொண்டது.
"என்னோட மனைவி. பி.கெ.மரியாம்மா. கூட்டிவைத்துக்கொண்டது. கலப்புக்கல்யாணம். என்னை மன்னிக்கணும்."
"ஓ! அதனாலென்ன?......."
எனக்கு நன்றிமேலிட்டது. கைகூப்பி குருவாயூரப்பனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றேன்.
"க்யா தேக்யோ தும், ஸாலே?" குருவாயூரப்பன் தான் கேட்டார்.
" ..ம்....ஒன்றுமில்லை..." வார்த்தை இடறியது.
"ஒண்ணுமில்லையா?" குருவாயூரப்பனுடைய கேள்வி.
எனக்கு அழுகைவந்துவிட்டது.
"தெய்வமே! இந்த முட்டாள் மீது கருணைவைக்கணும். நான் வெறும் முட்டாள்."
"கருணை வைத்தோம், சொல்!"
"தாங்கள் மலையாளி என்கிற நினைப்பில்தான் நாங்கள் வளர்ந்தும் ஆளானதும்."
"நான் மாயக்காரனென்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே?"
"மலையாளியென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். நீங்கள் நம்பூதிரியாகவோ, ஷாரடியாகவோ, வாரியராகவோ இருக்கலாமென்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.
"மலையாளிகள் முற்றிய பைத்தியங்கள்! பில்கூல் பாகல்லோக் ஹை!"

பட்டதிரியின் குருட்டு பக்தியைவிட பூந்தானத்தின் பக்தியே தனக்கு ரொம்ப இஷ்டம் என்று சொன்னது. அப்புறம் அனந்தன்காட்டுக்கு வரச்சொல்லி அஸனவில்வாதிமங்கலத்திடம் சொன்னது எல்லாம் எனக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
"தெய்வமே! அதையெல்லாம் சுத்தமான மலையாளத்தில் எப்படி சொல்லிவைத்தீர்கள்?"
"நானொண்ணும் அதெல்லாம் சொல்லவில்லை, சாலே! லோக் ஜூட் போல்த்தா ஹை!" இதைக்கேட்டதும் இந்துஸ்தான்காரர்கள் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது. பகவானின் அன்பு பெருகி ஆறாய் உருவெடுத்தது. ` என்னுடைய கோபம் அதில் அடங்கிப்போயிற்று.
கண்களைத்திறந்து ஒளிவீசும் அந்த உருவத்தைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பி.கெ.மரியாம்மா குருவாயூரப்பனிடம் கேட்டாள்.
"ஃபேமிலியெல்லாம் இங்கேதானே?"
"ஓ........ராதாவா?....இல்லை. ஊரிலிருக்கிறாள். இங்கே இருக்கமுடியாது. பிள்ளைகளுடைய படிப்பு கெட்டுப்போகும்."
குருவாயூரப்பனுடைய பதிலால் பி.கெ.மரியாம்மா திருப்தியடையவில்லை.
"எத்தனை பிள்ளைகள்?"
"பத்துலட்சம் பெண்கள். ஏழரை லட்சம் ஆண்கள். அத்தோடு நிறுத்தியாயிற்று."
"சரிதான்." மரியாம்மா தலையாட்டினாள்.
"பிள்ளைகளை இங்கே கொண்டுவந்தால் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகும். கம்யூனிஸ்ட்காரர்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொள்வார்கள்."
"நானும் அதையேதான் நினைத்தேன்," குருவாயூரப்பன் சென்னார்.
"பிள்ளைகளெல்லாம் எங்கே படிக்கிறார்கள்?"
"எல்லாம் வடக்கே இருக்கிற யுனிவர்ஸிட்டிகளில். இடையிடையே மாணவர் போராட்டம் வேறு."
"பிள்ளைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் குருவாயூரப்பா," மரியாம்மா சொன்னாள்.
"பகவானே!" நான் இடைமறித்தேன். "ராதையை பிரிந்து ரொம்ப நாளாயிற்றா?"
குருவாயூரப்பன் சிந்தனையிலாழ்ந்தார்.
"யுகங்கள்..." குருவாயூரப்பனின் பதிலில் ஏக்கம் தெரிந்தது.

எனக்கும் பி.கெ.மரியாம்மாவிற்கும் குருவாயூரப்பனைப்பார்க்க பாவமாயிருந்தது.
எங்களுடைய கல்யாணம் முடிந்தபிறகும் ஐம்பது வருஷம் நாங்கள் பிரிந்து வாழவேண்டி யிருந்ததை நாங்கள் நினைத்துக்கொண்டோம். நான் டெல்லியிலும் பி.கெ.மரியாம்மா அவளுடைய ஊரிலும். மாதச்சம்பளம் எழுபத்தையாயிரம் ஆனபோதுதான் அவளை டெல்லிக்கு அழைத்துவர எனக்கு சாத்தியப்பட்டது.

"தெய்வமே, நான் ஒரு பாட்டுபாடவா? உங்கள் திருவடிக்கு ஆறுதலாக இருக்கும்."
"பாடு."
நான் பாடத்தொடங்கினேன்.
"மேரே மன் கி கங்கா
ஒளர் தேரே மன் கி ஜம்னா கா
போல் ராதா போல், ஸங்கம்
ஹோகா கி நஹி"
"வாவ்! அரே வாவ்!" குருவாயூரப்பன் கூவினார்.
"சொந்த வீட்டில் இருப்பது போல இருக்கிறது இல்லையா?" மரியாம்மாவின் கேள்வி.
"ஆமாம்" குருவாயூரப்பனின் முகத்தில் சிரிப்பு.
"அத்தோடு இதையும் வைத்துக்கொள்ளுங்கள்," என்று சொல்லியபடி மேல்துண்டின் முடிச்சவிழ்த்து குருவாயூரப்பனுக்கு முன்பாக நீட்டினேன். டெல்லியில் 'வெங்கேர்ஸ்' ல் வாங்கிய கோதுமை அவல் அது. குருவாயூரப்பன் ஒரு பிடி அவல் வாரி எடுத்தார்.
இரண்டாவது பிடி எடுக்கும்போது மேல்சாந்தி நம்பூதிரி குருவாயூரப்பனைத் தடுத்தார்.
என்னுடைய மூட்டையை நம்பூதிரி தட்டிப்பறித்துக்கொண்டார்.

இத்தனை சம்பாஷணைக்கு இடையிலும் குருவாயூரப்பன் கர்ப்பக்கிரகத்திற்கு பின்னால் இருந்த குளோஸட்டிற்கு இரண்டு மூன்று தடவைகள் போய்வந்து கொண்டிருந்தார்.
"என்ன?......உடம்பு சரியில்லையா?" மரியாம்மா கேட்டாள்.
"இவங்க போடுற அரிசி......." குருவாயூரப்பன் அலுத்துக்கொண்டார். "நித்தமும் அரிசிச்சோறும், அரிசிப்பாயஸமும் தான். நாசம். என்னுடைய வயிற்றை புரட்டிக்கொண்டே இருக்கிறது."
நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
குருவாயூரப்பன் தான் பேசினார்."இருக்கட்டும். இதற்கெல்லாம் ஒரு முடிவு வருமடா! கட்டாய இந்தியும் கட்டாய சப்பாத்தியும் வரத்தான் போகிறது. அன்றைக்கு இந்த அரிசி சாப்பிடுகிற தேவஸ்தான கமிஷனரை தூக்கியடிப்பேன். ஒரு கோடி சூரியன் பொங்கிவந்தாற்போலிருக்கும் அப்போது."
"அது எப்போது நடக்கும்." பக்தி மேலீட்டு நான் கேட்டேன்.
"கல்கி!" குருவாயூரப்பன் தான் சொன்னார்.

"போகலாம்" மேல்சாந்தி இடைமறித்தார். "தரிசனம் முடிந்தது. நீங்கள் போகலாம்."
"பத்மாஷ்" குருவாயூரப்பன் கொதித்தெழுந்தார்.
"உங்களுக்கு வேண்டுமென்கிறதை எங்களிடம் கேளுங்கள்," நம்பூதிரி குருவாயூரப்பனை அமைதிப்படுத்தினார்.
என்னிடம் திரும்பி,"ஸால், நீங்கள் இடத்தைவிட்டுப்போவது தான் உத்தமம். மறுபடியும் ஏதாவது பர்பியோ, ஷம்மிகபாபோ கொடுத்து சங்கடம் உண்டாக்கப்பார்க்கவேண்டாம்."
உடனே பகவானிடம் திரும்பி,"விளையாட்டெல்லாம் வேண்டாம். போனதடவை நீங்கள் செய்த முட்டாள்தனத்தால் தேவஸ்தானத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம்."
"ஏய்! நம்பூதிரி.....பி.கெ.மரியாம்மா கொதித்தெழுந்தாள்." சின்னப்பையனைப்பார்த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாதே!"
குருவாயூரப்பன் திரும்பி நின்று கொண்டார். ஒன்றுமறியாதவரைப்போல 'உச்' கொட்டினார்.
அதற்குமேல் அங்கு நிற்கப்பிடிக்காமல் நானும் பி.கெ.மரியாம்மாவும் அங்கிருந்து வெளியேறினோம்.

வாசலைக்கடந்து வெளியே வரும்போது உரத்தகுரலில் ஒரு கேள்வி."யாரடா இந்த முட்டாள்!"
அங்கே தொங்கிக்கொண்டிருந்த பெரிய மணியிலிருந்துதான் அந்தக்கேள்வி வந்தது. பக்கத்தில் போய் நான் அந்த மணியைப்பார்த்தேன். ஒரு சிறிய வால் அந்த மணியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்தது. பெருவிரலுக்கும் சுண்டுவிரலுக்கும் இடையில் அந்த வாலை அழுத்திப்பிடித்துக்கொண்டு அது என்னவென்று பார்த்தேன். ஒரு பாம்புக்குட்டியிலன் வால் அது. அதை மெல்ல வெளியே இழுத்தபோது நீண்டுகொண்டே வந்தது.
"அய்யோ!" பி.கெ.மரியாம்மா அலறினாள்.
பாம்பு மிகப்பெரியதாக நீண்டுகொண்டிருந்தது. நான் அதைப்பிடித்தவாறே நடந்தேன். பிரதட்சணம் செய்தேன். மூன்றுமுறை பிரதட்சணம் செய்தேன். மூன்று முறை தெய்வத்தை கூவி அழைத்தேன். பாம்பு அப்போதும் நீண்டுகொண்டே இருந்தது.
"அடியே......பி.கெ.மரியாம்மா " என்று மரியாம்மாவைக் கூப்பிட்டேன். "நீ பஸ் ஸ்டாண்டிற்குப் போ.
நான் வரும்வரை அங்கேயே காத்திரு!"
பாம்பின் வாலைப்பிடித்தபடி நான் கோவில் குளத்தைநோக்கி ஓடினேன். பிடித்தபிடியை விட்டுவிடாமல் நீரில் மூழ்கியபடி நூறுமுறை கடவுளை ஜபித்தேன். "ஸாலா பேஞ்சோத்!"
அசரீரி கேட்டது.
"வாஸூகி.....விட்டுவிடு. அவன் டெல்லியிலிருந்து வருகிறவன். "
தண்ணீர்ப்பரப்பிற்கு மேலாக மேகக்கூட்டங்களுக்கிடையில் அசரீரி முழங்கியது."ச்சோடோ,வாஸூகி!.......ச்சோடோயா!"
கடைசியில் நான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தபோது பி.கெ.மரியாம்மா எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
"அன்பே!" என்று வாஞ்சையோடு அழைத்தாள்.
"நீங்கள் எல்லாவற்றையும் சமாளித்து வந்துவிடுவீர்கள் என்று எனக்குத்தெரியும். நான் உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்."
அவள் அத்தோடு நிற்கவில்லை.
"திருவிதாங்கூர்காரர்களை நம்பினாலும் நம்பலாம், இந்துஸ்தானி காரர்களை நம்பக்கூடாது."


`