Friday, May 29, 2009

அரசுப்பள்ளிகளில் தொடரும் அவலம்




அரசுப்பள்ளிகளை அரசே புறக்கணிக்கும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழியாக தவறுகளை சுட்டிக்காட்டியும் அடிப்படை வசதிகளற்ற சூழலில் அரசுப்பள்ளிகள் இயங்குவதைக்கண்டு நாம் துக்கப்படாமல் இருக்கமுடியாது.

இன்றைய செய்தித்தாளில் தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதநிலை பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் கொன்றைக்காடு கிராமத்தில் இயங்கிவரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறவைக்கும் நூற்றுக்கு நூறு பள்ளியாகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப்பள்ளியில் இருந்து பொதுத்தேர்விற்கு அனுப்பப்பட்ட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கூடம் மட்டும் அடிப்படை வசதிகள் என்கிற தேர்வில் ஒவ்வோர் ஆண்டும் தோற்றுப்போய்க்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். பள்ளியில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் இல்லை. ஆறு வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இருப்பதோ மூன்று வகுப்பறைகள்தான். இப்போதைக்கு மாணவர்கள் அமர்ந்துபடிக்க உதவிசெய்வது மரநிழல்தான். மழைக்காலத்தில் மரங்கள் கைவிரித்துவிடும். அப்போது மாணவர்பாடு திண்டாட்டம்தான். கலைமகளுக்கு தமிழக அரசைநினைத்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரசு கணினியை வழங்கியுள்ளது. ஆனால் அந்த கணினியை வைப்பதற்கு போதிய வசதி கொண்ட அறை இல்லாததால் கணினி தற்போது முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறது. குதிரை கொடுக்கும்போது சாட்டையும் கூடவே கொடுக்கவேண்டாமா?

“முதலில் சாட்டையைத்தருகிறேன்; கொஞ்சகாலம் கழித்து குதிரையை வந்து வாங்கிப்போ” என்பதெல்லாம் கவைக்குதவாத வேலை.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மனுக்கள் அனுப்பியாயிற்று என்பது எல்லா ஆசாமிகளுக்குத்தெரியும்.

மனுக்களுக்கு என்னகதியாயிற்று என்பது அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் சாமிக்குமட்டும்தான் தெரியும்.

3 comments:

வனம் said...

வணக்கம் குருமூர்த்தி

என்னங்க புதுசா வருத்தபடுரீங்க, அரசு பள்ளி நடத்துவது, போக்குவரத்து கழகம் நடத்துவது இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு தானே இதுக்குபோய்....

இராஜராஜன்

அமர பாரதி said...

சார், இந்த வாரம் ஜூனியர் விகடன் படித்தீர்களா? அதில் ஒரு அரசு பள்ளி ஹை-டெக் காக நடந்து வருவதைப் படித்துப் பாருங்கள். அவ்வளவும் அந்த பள்ளியின் தலைமையாசிரியரின் முயற்ச்சியால் மட்டும் நடந்திருக்கிறது. அவருடைய மனுக்கள் மட்டும் கவனம் பெறுகிறதென்றால் அவர் அதை சரியாக செய்திருப்பதாகத்தானே அர்த்தம்?

வடுவூர் குமார் said...

:-(

Post a Comment