Saturday, February 12, 2011

காதல் கீதம் இசைக்கும் திமிங்கலங்கள் (029)

கிரீன்லாந்தின் வடமேற்கே, டிஸ்க்கோ வளைகுடா பகுதியில் கோபன்கேகன் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆர்ட்டிக் களப்பணி நிலையத்தை நிறுவி இருக்கிறது.

டிஸ்க்கோ வளைகுடாவின் பனிக்கட்டிகள் நிறைந்த நீரில் ஒருகாலத்தில் பெருமளவில் காணப்பட்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் படிப்படியாக குறைந்துபோயின.

அழிந்துபோன உயிரினங்களின் பட்டியலிலும் அவை இடம்பெற்றன.

இவற்றின் தோலுக்கடியில் உள்ள அடர்த்தியான கொழுப்பு படிவங்களும், எலும்புகளும் திமிங்கல வேட்டைக்காரர்களுக்கு இலக்காகிப்போயின.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழ்.

18 மீட்டர் நீளமும் 100 டன் எடையும் கொண்ட வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தற்போது டிஸ்க்கோ வளைகுடா பகுதிக்கு திரும்பிவரத்தொடங்கியுள்ளன.

உயர்ந்துவரும் புவிவெப்பம் காரணமாக இதுவரை பனிக்கட்டிகளால் அடைபட்டிருந்த வடமேற்கு பாதை 125,000 ஆண்டுகளில் இப்போதுதான் உருகத்தொடங்கியுள்ளது.

ஆண்டின் சில மாதங்களில் இந்த பனிப்பாறைகள் உருகி வழிவிடுவதால் வடபசிபிக் கடலில் வாழும் வில்வடிவ திமிங்கலங்கள் டிஸ்க்கோ வளைகுடாவிற்குள் இடம்பெயர்ந்து ஏற்கனவே அங்குவாழும் திமிங்கலங்களுடன் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவற்றின் வாய் வில்வடிவத்தில் வளைந்து இருக்கும். கீழ்த்தாடை வெள்ளை நிறமாக இருக்கும். வயிற்றில் வெள்ளைப்புள்ளிகள் காணப்படும்.

பெண் திமிங்கலங்கள் மூன்று முதல் ஆறு வருடங்களில் குட்டி போடும் இயல்புடையவை.

குட்டிகள் பிறந்தவுடன் நீலமும் சாம்பலும் கலந்தநிறத்தில் இருக்கும்.

பின்னர் படிப்படியாக நீலம் கலந்த கறுப்புநிறத்திற்கு மாறுவதும், பின்னர் தாயின் நிறத்திற்கு மாறுவதும் நடைபெறும். மற்ற சிறிய கடல்வாழ் உயிரினங்களை இவை உண்டு வாழ்கின்றன.

நீருக்கடியில் எழுப்பப்படும் ஒலிகளை ஆராயும்போது, இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் தங்களுடைய இணையை ஈர்ப்பதற்காக காதல் கீதம் இசைப்பது தெரியவந்துள்ளது.

திமிங்கலங்களின் காதல் கீதம் என்பது ஒரு புதிய நிகழ்ச்சியல்ல.

ஆனால் இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் பலகுரலில் காதல் கீதம் இசைப்பதுதான் புதுமையான நிகழ்வு. அவை முதலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் கீதமிசைக்கின்றன. பின்னர் அவற்றை இணைத்தும் ஒலியெழுப்புகின்றன.

மற்ற திமிங்கலங்கள் இதுபோன்ற இசையை எழுப்புவதில்லை.

இதில் வியப்பைத்தரும் இன்னொரு செய்தியும் உண்டு. ஓர் ஆண்டில் திமிங்கலங்கள் எழுப்பும் இந்த இசையை அடுத்த ஆண்டில் எழுப்புவது இல்லையாம். ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இந்த வில்வடிவ தலையுடைய திமிங்கலங்கள் உருவாக்கி இசைப்பது ஏன்?

திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால் இனச்சேர்க்கைக்கான எதிர்பாலினரின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒவ்வோர் ஆண்டும் புதிய காதல்கீதங்களை இவை இசைக்கின்றன என்பது வியப்பான செய்தி.

இவற்றின் காதல் கீதம் உயர் அதிர்வெண் கொண்டது. 100 முதல் 2000 அதிர்வெண்கள் கொண்ட ஒலியில் இந்த கீதங்களை இசைக்கின்றன என்கிறார் கோபன்கேகன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஓட்டி மரியா டெர்வோ என்னும் ஆய்வாளர்.

இவர் வில்வடிவ திமிங்கலங்களின் காதல்கீதங்களை ஆய்வுசெய்து வருகிறார். இந்த காதல் கீதங்களைக்கொண்டு அவற்றை இசைப்பது ஆணா பெண்ணா என்பதை இதுவரை தீர்மானிக்க இயலவில்லை.
வில்வடிவ தலையுடைய திமிங்கலங்களின் காதல்கீதத்தை நீங்களும் இங்கே கேளுங்கள்.

இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/07/090729074523.htm

No comments:

Post a Comment