Wednesday, March 4, 2009

கட்டுப்பாடில்லாத கல்வி நிறுவனங்கள்


கல்லூரிக்கு செல்லும் மாணவர்களைவிட எல்.கே.ஜி. வகுப்புக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணமும், புத்தகங்களும் அதிகமாகத்தான் இருக்கின்றன. கல்விக்காக காமராஜ் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் யாவும் இன்று கேட்பாரற்றுப் போய்விட்டன. அனைத்து தரப்பினரும் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கவைப்பதையே விரும்புகின்றனர்.

இதோ பள்ளிகளுக்கு விடுமுறை விடப்போகிறார்கள். அப்பாடா!.... நமக்கு இனி கொழுத்த வேட்டைதான் என்பதைப்போல சாக்குப்பையுடன் பணத்தை சுருட்டிச்செல்ல பல கல்வி நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன.

அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியைப்படித்தபோது பெற்றோர்கள் எப்படியெல்லாம் குழந்தைகளுக்கு பள்ளியில் சீட் வாங்க அலைகிறார்கள் என்பதும் எப்படியெல்லாம் கல்விநிறுவனங்கள் பெற்றோர்களை ஏமாற்றமுடியும் என்பதும் அம்பலமானது.

ஆம்.... சென்னையில் ஒரு கல்வி நிறுவனத்தின் கட்டிடப்பணிகளே நிறைவடையாத நிலையில் அட்மிஷன் அறிவிப்பு வெளிவந்தது. தங்கள் குழந்தைகளுக்கு எப்படியாவது சீட் வாங்கவேண்டும் என்பதற்காக பணத்துடன் நீண்ட வரிசையில் பெற்றோர்கள் நின்றார்கள் என்பதைப்பார்க்கும்போது நாடு எந்த அளவிற்கு முன்னேறி வருகிறது என யோசிக்கவைத்தது.

தஞ்சாவூரில் ஓர் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அடிக்கல்நாட்டுவிழா நடந்த அன்றே முதல் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஐயம் எழுப்பியவுடன் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் அடித்த பல்டி:

“நாங்கள் அங்கீகாரத்தை எல்லாம் ரத்து செய்யவில்லை. சும்மா விளக்கம்தான் கேட்டோம்.”

இப்படிப்பட்ட தகிடுதத்தங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போனதுதான் இன்றைய சோகம். இதற்கு முதலும் முடிவுமான காரணம் அரசியல்தான். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சரிக்கட்டி அங்கீகாரத்தை வாங்கிவிடுகின்றனர். அடிப்படை வசதிகள், கட்டடம், சுகாதார வசதிகள் இவற்றைப்பற்றியெல்லாம் யாரும் எதுவும் கேட்பதில்லை. கல்விக்கட்டணம், புத்தகம், பேருந்து, சீருடை......தங்கும் விடுதி என்றெல்லாம் வசூல் வேட்டை நீண்டுகொண்டே போகிறது. இந்த அவலங்களைக்குறித்து மாணவர்கள் வாய்திறந்தால் ஹால் டிக்கெட் மறுக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டு எதிர்காலத்தைத்தொலைத்த மாணவர்கள் ஏராளம். பள்ளிமுதல் கல்லூரிவரை அனைத்தும் இலவசம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் இத்தனை அதிகமான கட்டணம் வசூலிக்க எப்படி அனுமதிக்கிறது? பராமரிப்புச்செலவு, ஆசிரியர்களின் ஊதியம், மின்கட்டணம், தொழிலாளர்களுக்கு ஊதியம் இப்படி நியாயமான தேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எல்லா மாணவர்களும் செல்வந்தர்கள் இல்லை. ஏழை மாணவர்கள் எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் வீட்டில் இருந்துகொள்ளவேண்டியதுதான். கட்டணம் மட்டுமே வசூலிப்பதில் குறியாக உள்ள கல்வி நிறுவனங்களை வரைமுறைப்படுத்த முறையான சட்டத்தை அரசு வகுக்கவேண்டும். நேர்மையான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும். மறைமுகக்கட்டணங்கள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்யும் செலவினங்களுக்கு காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற விதி இயற்றப்பட்டால் ஒவ்வோர் கல்விநிறுவனத்தின் செலவினங்களையும் கண்காணிப்பது எளிதானது.

இவ்வளவு பணம் செலுத்தியும் ஆசிரியர் பற்றாக்குறை, கற்பிக்கத்தகுதியில்லாத ஆசிரியர்கள், இடவசதியின்மை, பாதுகாப்பு குறைவு, தரமற்ற விடுதிகள், தரம்குறைந்த உணவு போன்ற குறைபாடுகள் கல்விநிறுவனங்களில் மலிந்துகிடக்கின்றன.

இந்தக்குறைபாடுகளை கண்காணிக்கவும், தட்டிக்கேட்கவும் அரசுதான் ஏதாவது செய்யவேண்டும். செய்யுமா இந்த அரசு?

நன்றி: எஸ்.ரவீந்திரன், தினமணி 05/03/2009

No comments:

Post a Comment