Thursday, March 5, 2009

விபத்தில் சிக்கியது பள்ளிவாகனம் மட்டுமல்ல...இலவசக்கல்வி வாகனமும்தான்...





05/03/2009 நாளிட்ட தினமணி இதழில் கல்வியாளர் திரு எஸ்.எஸ்.இராஜகோபாலன் இப்படி எழுதுகிறார்.

“மாநகராட்சியின் கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கப்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப்பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி பெற்றவர்கள். முதுகலை, ஆய்வுப்பட்டதாரிகளும் இவர்களுள் அடக்கம். பல்லாண்டு அனுபவமும், பல சிறப்புப் பயிற்சிகளும் பெற்றவர்கள். பணியில் ஈடுபாடு கொண்டவர்கள். இத்தனை சிறப்புகள் இருந்தும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்குக்காரணம் ஆங்கிலவழிக்கல்வி மீதுள்ள மோகம் என்று கருத இடமிருக்கிறது. ஆனால் ஆங்கிலவழி வகுப்புகளை பள்ளிகளில் புகுத்துவதே தீர்வு என்று கருதுவது தவறு. மாநகராட்சிப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத்தொடங்கினால், தனியார் பள்ளிகளில் இருந்து சாரிசாரியாக மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ஓடிவந்துவிடப்போவதில்லை. இன்று, அரசுப்பள்ளிகள் சமுதாயத்தில் தாழ்நிலையில் உள்ளவர்களுக்குமட்டுமே என்ற கருத்து மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இந்தக் குழந்தைகளுடன் தங்களுடைய குழந்தைகள் சேர்ந்து படிப்பதை நடுத்தரவர்க்கத்தினர் விரும்பவில்லை. இதுவே அரசு சார்ந்த பள்ளிகளின் தேய்விற்கு காரணம். எனவே, பொதுப்பள்ளி முறை, அண்மைப்பள்ளித்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதே சமூகத்தில் ஒருமைப்பாட்டை உருவாக்கும்.”

அண்மையில் போலியோ சொட்டுமருந்து தொடர்பான வதந்தியால் தாய்மார்களிடையே பீதியும் அதைத்தொடர்ந்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசின் நடவடிக்கைகளும் தொடங்கின. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய மகனுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுத்த செய்தி நாளிதழில் வெளியாகி தாய்மார்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல் பாராட்டிற்குரியது.

கல்வியாளர் திரு எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறியுள்ள அண்மைப்பள்ளித்திட்டம் என்பதை புரிந்துகொள்ள ஒர் எடுத்துக்காட்டுடன் இந்தக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.

தஞ்சாவூர் பழைய வீட்டுவசதிவாரியக் குடியிருப்பில் ஒரு நகராட்சிப்பள்ளி இயங்கிவருகிறது. தஞ்சாவூர் மாவட்ட அளவிலான உயர்நிலை அதிகாரிகளின் குடியிருப்புகள் இந்த பள்ளிக்கூடத்தை சுற்றியே அமைந்துள்ளன. அதிகாரிகள் வீட்டுப்பிள்ளைகள் இந்த நகராட்சிப்பள்ளியில் படிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியானால் ஏராளமான பெற்றோர்கள் நம்பிக்கையூட்டப்பெற்று அரசு சார்ந்த இந்த பள்ளியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் இல்லையா? இதுதான் அண்மைப்பள்ளித்திட்டம்.

அண்மைப்பள்ளித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மாணவர்கள் பேருந்திலோ, மற்ற வாகனங்களிலோ பள்ளிக்கு சவாரிசெய்யவேண்டிய அவசியம் இருக்காது.
அண்மையில் உள்ள பள்ளிக்கு தோழர்களுடன் நடந்தே சென்றுவிடலாம்.
பெற்றோர்களுக்கு வாகனச்செலவு மிச்சம்.
அரசுக்கு பெட்ரோல் மானியம் மீதமாகும்.
எல்லாவற்றையும்விட “பள்ளிவாகனம் கவிழ்ந்து 34 மாணவர்கள் காயம்” என்பது போன்ற அன்றாடசெய்திகள் இருக்காது இல்லையா?

தமிழ்நாட்டு மக்கள் செய்த புண்ணியத்தால் மேலே சொன்ன எதுவும் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால், விபத்துக்கு உள்ளானது பள்ளி வாகனம் மட்டுமல்ல; இலவசக்கல்வி வாகனமும்தான்.

No comments:

Post a Comment