Sunday, March 8, 2009

பணமும் புகழும்...




மனிதர்கள் எதற்காக பணத்திற்கும் புகழுக்கும் ஆலாய்ப்பறக்கிறார்கள்?

பஞ்சைப்பராரிகள், அன்றாடங்காய்ச்சிகள், அன்றன்றைக்குத்தேவையான பொருளை சம்பாதித்து, சாப்பிட்டு, கல்யாணங்காட்சிகள் கண்டு திருப்தியுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக கொஞ்சம் பணம் வேண்டும். புகழ்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

மனிதனுக்கு அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகிவிட்டால்...அதாவது உடை, உணவு, இருப்பிடம், ஆகியவை பூர்த்தியாகிவிட்டால் அத்துடன் அவன் நின்றுவிடுவதில்லை. எதிர்காலத்திற்கு இருக்கட்டுமே என்று பொருள் சேர்க்க ஆசைப்படுகிறான். பொருள் சேர்க்க ஆரம்பித்துவிட்டால் அதில் எவரும் திருப்திநிலை அடைய முடிவதில்லை. பணம், மேலும் மேலும் பணம் என்று ஆலாய்ப்பறப்பார்கள். பணம் இரண்டு தலைமுறைகளுக்கு சேர்ந்துவிட்டால் அந்தஸ்து, புகழ் என்று அதன்பின் ஆலாய் பறப்பார்கள்.

மனிதனின் இரண்டு பெரும் தேடல்களாகிய பணம், புகழ் இரண்டுக்கும் அவனிடம் எது காரணமாக இருக்கிறது என்பதை அவனது மூளையிலேயே தேடிவிடுவது என்று சாடாடோ என்ற ஜப்பானியர் முயன்றார்.

பார்க்கின்ஸன்ஸ் நோயுற்றவர்கள் ஒரு சிலரிடம் கட்டுப்படுத்தமுடியாத சூதாட்டவெறி ஏற்படுவதைக்கண்டார். பார்க்கின்ஸன்ஸ் நோயானது மூளையில் நரம்புசெல்களில் ஏற்படும் சிதைவினால் ஏற்படுகிறது.

சாடாடோ இதை சோதனை செய்தே பார்த்திட விரும்பினார். பங்கேற்பாளர்களை வீடியோ கேம் விளையாடச்செய்தார். அது ஒரு வகை சூதாட்ட விளையாட்டு. அதில் பாயிண்டுகள் பணமாக கிடைக்கும்படி செய்தார். விளையாட்டில் பங்கேற்பாளர்களை அடிக்கடி வெற்றி பெறுவதுபோல செய்து பணம் பரிசாகக் கிடைக்கும்போது அவர்களது மூளையில் எங்கே அதிக செயல்வேகம் நிகழ்கிறது என்று ஸ்கேன் செய்தார்.

இன்னொரு பரிசோதனையில் கம்ப்யூட்டர் திரையில் பங்கேற்பாளரின் படம் காட்டப்பட்டு அதன் பக்கத்தில் பிறர் அவரை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதும் திரையிடப்பட்டது. அதில் அவரைப்புகழ்ந்து நல்ல வார்த்தைகள் காட்டப்பட்டன. உடனுக்குடன் அவரது மூளையையும் ஸ்கேன் செய்தார்.

என்ன ஆச்சரியம்! பணம் புரளும்போது எங்கே மூளையில் செயல் மிகுகிறதோ அதே இடத்தில்தான் புகழ் உயரும்போதும் செயல் மிகுந்தது. பார்க்கின்ஸன் வயப்பட்டு சூதாட்டவெறி ஏற்பட்டவர்களிடமும் அதே இடத்தில்தான் செயல் காணப்பட்டது.

ஸ்ட்ரையேட்டம் என்ற மூளைப்பகுதியில்தான் பணம்-புகழ் இரண்டுக்குமான தூண்டலும், அதனால் பெறும் பலாபலன்களுக்குமான விளைவுகளும் ஏற்படுகின்றன. மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு பணம், புகழ் இரண்டும் காரணமாக உள்ளன.

தக்க மருந்தின் மூலம் மனநோய்களைக் கட்டுப்படுத்த இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கின்றன.

No comments:

Post a Comment