Wednesday, March 4, 2009

விதியோடு போராடும் வீதியோரக்குழந்தைகள்


தனக்கு வேண்டாத குழந்தையை ஒரு தாய் என்னவெல்லாம் செய்யலாம்?
அந்தக் கண்மணியைப் பார்க்காமல் கருவிலேயே அழித்துவிடலாம்;
தப்பிப் பிழைத்தால், கள்ளிப்பாலை தாய்ப்பாலாகக் கொடுக்கலாம்;
நெல்மணியின் சுவையை அறிமுகப்படுத்தலாம்;
கதறியழவிட்டு பசியாலேயே உணர்விழக்கச்செய்யலாம்... நிரந்தரமாக.
அதிலும் தப்பிப் பிழைத்தால் துணியில் சுற்றி புதரில் வீசியெறியலாம்.
அண்மையில் ஒரு பெண்மணி கொடுத்திருக்கும் டிப்ஸ்:
துணியில் சுற்றி லாரி சக்கரங்களுக்கு அடியில் வீசிவிடலாம்.
இவற்றுக்கெல்லாம் உபயம் நம்முடைய பெரிய திரைகளின் சிறிய முதலாளிகளும், சின்னத் திரைகளின் பெரிய முதலாளிகளும் தான். இதுதான் வீதிக்குழந்தைகளின் வரலாறு பிறப்பெடுக்கும் புள்ளி.
நாகரிக மனிதன் எவனுக்கும் அதிர்ச்சி தரும் செய்திதான் இது. அன்றாடம் வீசியெறியும் குப்பைகளின் வரிசையில் இப்போது குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டோம். இது மக்கும் குப்பையா? நினைவுகள் மக்காத குப்பையா? பச்சை நிறத்தொட்டியா? இல்லை சிவப்பு நிறத்தொட்டியா? இன்னும் குழப்பம் தீரவில்லை.
வறுமை, தகாத உறவு போன்ற பலகாரணங்கள் சொல்லப்பட்டாலும் வீதியில் திரியும் குழந்தைகள் மானுடத்திற்கு விடப்பட்ட சவால் என்பதை மறுப்பதற்கில்லை. அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தூக்குவது பயங்கரவாதம் என்றால் தர்மத்தை அழிக்கும் இந்தச் செயலும் பயங்கர வாதம்தானே!
நூறுமில்லியன் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில் மனிதக் கூளங்களாக நெளிந்து கொண்டிருக்க, மனித சமுதாயம் கண்மூடிக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. போகிறபோக்கில் "கனவுகாணுங்களடா இளைஞர்களே" என்று உபதேசம் வேறு செய்கிறது.
ராக்கெட்டுகளுக்காக பலகோடி செலவு செய்யும் நாம் நம்மில் ஒரு அங்கமான இந்த வீதிக் குழந்தைகளை விதியின் விளிம்பில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்!
நடுவீதியில் காகிதங்களைப் பொறுக்கியும், கழிவுகளுக்குள் உணவைத் தேடியும் காலம் கழிக்கும் இந்த நடமாடும் பிண்டங்களுடன்தான் நம்முடைய வல்லரசு மலரப் போகிறதா?
தமிழகத்திற்கோ, இந்தியாவிற்கோ சொந்தமான பிரச்சினையல்ல வீதிக் குழந்தைகளின் துன்பங்கள். உலகம் முழுமையும் காணப்பட்டாலும், நாம் கண் முன்னே காணும் இந்தக் கொடுமையை விரட்டியடிக்க ஏதாவது செய்தாகத்தான் வேண்டும்.

வீதிக்குழந்தைகளைப் பார்த்து "சீ...ஓடுங்க நாய்களே" என்று கர்ஜிக்கும் குரல்களையும், அன்புடன் அழைத்து தின்ன ஏதாவது கொடுத்தனுப்பும் ஆதரவான குரல்களையும் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
வீதியோரக் குழந்தைகளில் எத்தனையோ வகை...
குடும்பத்தோடு எப்போதாவது தொடர்புடையவர்கள்...
பெற்றோர்களால் முற்றாக கைவிடப்பட்டவர்கள்...
வீட்டுச் சூழல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியவர்கள்...
வறுமை, உதாசீனப்படுத்தப்படுதல், பெரியவர்களின் போதைப் பழக்கம் ஆகியவற்றால் வெளியேறியவர்கள்...

வேலை செய்து கொண்டே படிக்கலாம் என்று வீட்டை விட்டு வெளியேறி நகர வாழ்க்கையின் கவர்ச்சியாலும், சினிமா மற்றும் மலிவான இதழ்களாலும் கவரப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.
1994ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 11 மில்லியன் தெருவோரக் குழந்தைகள் இருந்ததாகவும், மும்பை, கல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தலா ஒரு லட்சம் முதல் ஒண்ணேகால் லட்சம் வரையில் இந்தக் குழந்தை கள் சுற்றித்திரிந்ததாகவும் கணக்கு. பெங்களூரின் ஸ்கோர் மட்டும் 45,000.
பொதுவாக வீதிக் குழந்தைகளில் முக்கால் வாசிப்பேர்கள் இந்துக்களாக இருப்பதையும், அவர்களில் சரிபாதி பேர்கள் ஷெட்யூல்ட் இனத்தவர்களாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. மதமாற்றத்திற்கு இவர்கள் எளிதாக இரையாகிப் போவதில் நமக்கு ஒன்றும் வருத்தமில்லை. வீதியோரக் குழந்தைகளில் பெண்குழந்தைகளைக் காண்பது அரிது. பெண்சிசு வேண்டாம் என்று வீசியெறிய ஒரு கூட்டம் இருப்பதைப் போல் வீதியோர பெண் குழந்தைகளை வாரியணைக்கவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது இந்த நாகரிக உலகத்தில்.
இவர்களுக்கென்று எந்த வேலைவாய்ப்பு நிறுவனமும் இல்லை. தங்கள் வேலையை தாங்களாகவே தேடிக்கொள்கின்றனர். பழைய காகிதங்களைப் பொறுக்குவதை வேலையாக பலர் செய்கின்றனர். குறைவான ஊதியம், கூடுதலானவேலை, கொத்தடிமைக் கொடுமை ஆகியவையெல்லாம்
வீதியோரக் குழந்தைகள் சந்திக்கும் கொடுமைகள்.
தங்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கைவேண்டும் என்றும், இப்போதைய வாழ்க்கையை விட்டு வெளியில் வரவேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் இந்த வீதியோரக் குழந்தைகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் மூன்றிலொரு பகுதியினர் பள்ளி செல்லும் பருவத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் கைதூக்கி விட வேண்டியதுதான் நாகரிக உலகின் கடமை.

போலீஸ்காரர்கள் தங்களுடைய ஆற்றாமையை தீர்த்துக் கொள்வது வீதியோரக் குழந்தைகள் மீதுதான். குற்றங்களின் பேரால் இவர்கள் கைது செய்யப்படும் போது சித்திரவதைக்குள்ளாகி வளர்ந்த கைதிகளுடன் சிறையில் அடைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை.
சிறையில் சின்னஞ்சிறு வேலைகளைச் செய்வதற்காக இந்த சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதை நானே அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இந்த சிறுவர்கள் சரியான கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் போலீஸ்காரர்களால் சிறைக்கு கொண்டு வரப்படுவதுதான்.

இவர்களின் மீது போடப்படும் கேஸ்களின் செல்லப் பெயர் என்ன தெரியுமா?
’தலை காய்ந்த கேஸ்.’
அதாவது பரட்டைத்தலைகேஸ். இதைப் பார்த்த பிறகு தலையில் எண்ணெய் தடவாமல் நான் ரோட்டில் நடப்பதில்லை. காலப்போக்கில் இந்த சிறுவர்களுக்கு நீதித்துறைமீதும், காவல்துறை மீதும் நம்பிக்கையில்லாமல் போய் விடுகிறது. ஒரு வேடிக்கையான செய்தி என்னவென்றால் சுதந்திர இந்தியாவில் 1993க்கு பிறகுதான் "வீதியோரக்குழந்தைகள்" என்கிற நாமகரணம் சட்டத்தில் சேர்க்கப்பட்டதாம்.
2006 ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்ற இயல்துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வீதியோரக்குழந்தைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சென்னை நகரத்தில் மட்டும் 37,683 வீதியோரக் குழந்தைகள் இருப்பதாக அந்த கணக்கெடுப்பு கூறியது. வீதியோரக் குழந்தைகளை பராமரிப்பதற்காக சென்னையில் பல்வேறு காப்பகங்கள் அரசாங்கத்தாலும், தொண்டு
நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன.

1900 குழந்தைகள் மட்டுமே இந்த நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்ததை அறிந்த தமிழக அரசு, மேலும் 1800 வீதியோரக் குழந்தைகளை பராமரிப்பதற்காக ஆறுதொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியும் பணமும் 2006ல் ஒதுக்கீடு செய்தது பாராட்டிற்குரியது.

இந்த நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ஒன்றுக்கு 225 ரூபாய் அரசு செலவிடுகிறது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாக்கப்படவேண்டும்.
சென்னையில் சுற்றித் திரியும் 37,683 வீதியோரக் குழந்தைகளில் வெறும் 3,700 பேருக்கு மட்டும் இருக்க இடமும், உண்ண உணவும், கல்வியும் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ளது போதாது. நல்ல வருவாயை பெற்றிருக்கும் தமிழக அரசு ஏனையோரையும் நினைத்துப்பார்க்கவேண்டும். கூடுதலாக நிதியும், புதிய காப்பகங்களும் துவங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள வீதியோரக் குழந்தைகளை தங்களுடைய நிறுவனங்களில் சேர்த்து பராமரிப்பதை சட்டபூர்வ கடமையாக்கலாம்.

அநியாய நன்கொடை வசூல் என்கிற பாவத்தில் இருந்து இவர்களுக்கு விமோசனம் கிடைக்க இந்த புண்ணிய சேவை உதவும்.
வீதியோரக் குழநதைகளை இந்தக் காப்பகங்கள் எப்படி பராமரிக்கின்றன?

சாம்பிளுக்கு ஒன்று....
வீதிக்குழந்தைகளுக்காக பதினெட்டு ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்பு ஒன்று நேசக்கரம். சென்னையில் இயங்கி வருகிறது. இருக்க இடம், உண்ண உணவு, கல்வி அனைத்தும் கொடுத்து அவர்களுக்கு ஒரு இலக்கை நிர்ணயித்து அடைவதற்கான உதவியையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. பெற்றோரின் புறக்கணிப்பு மட்டுமே வீதிக்குழந்தைகள் பெருகக்காரணம் என்று நேசக்கரம் அமைப்பு கருதுவதால் தாய்மார்களை ஒருங்கிணைத்து பிள்ளைகளை சரியாக பராமரிக்க செய்கிறது. இந்த பயணத்தின் திசை சரியானது தான்.
சுனாமிபோன்ற இயற்கை சீற்றங்களால் ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகளையும் நேசக்கரம் அணைத்துக் கொண்டிருக்கிறது.

2004 சுனாமிப் பேரழிவில் பாதிக்கப்பட்ட ஆறு கடற்கரை கிராமங்களை இந்த அமைப்பு தத்தெடுத்துக்கொண்டிருக்கிறது.
எந்தரோமகானுபாவலு... அந்த்தரிகிவந்தனமு....!!!

மு.குருமூர்த்தி

No comments:

Post a Comment