Saturday, March 7, 2009

தவிர்க்க இயலாதா இந்த தற்கொலைகளை?




மழலைகளை பேட்டிகாணும் மங்கையர்கள் வைக்கும் முற்றுப்புள்ளி கேள்வி இதுதான்:

"நீ வளர்ந்து பெரிய ஆளானபிறகு என்னவாகப்போகிறாய்?"
குழந்தைகள் பெரும்பாலும் சொல்லும் பதில்:
"நான் டாக்டராகப்போகிறேன்"
"நான் இஞ்சீனியராகப்போகிறேன்"

ஆக, பிறந்த அன்றே பெற்றோர்கள் குழந்தைகளை டாக்டர்களாகவும், இஞ்சீனியர்களாகவும் பார்க்கத்தொடங்கிவிட்ட காலம் இது. குழந்தைகளை குழந்தைகளாகப்பார்க்கும் காலம் மலையேறிப்போய்விட்டதுபோல் தோன்றுகிறது. பால்குடி மறக்காத குழந்தைகளையும் பள்ளியில் அடைக்க நாம் தயாராகிவிட்டோம்.

இது எதில் போய் முடிந்திருக்கிறது?

99 மதிப்பெண் வாங்கிய குழந்தையை புத்திசாலியாகவும், 91 மதிப்பெண் வாங்கிய குழந்தையை மெதுவாகக் கற்பவனாகப்பார்க்காமல் முட்டாளாகப் பார்க்கும் காலம் இது.
மழலைப்பருவத்தில் தொடங்கும் தாக்குதல் குமரப்பருவத்தில் உச்சத்தை அடைகிறது.
மகனுக்கோ, மகளுக்கோ நல்ல எதிர்காலம் வேண்டும் என்கிற ஆசையில் புத்தகம் மட்டுமே அவர்களின் கனவிலும் நனவிலும் நிலைநிறுத்தப்படுகிறது. சுற்றியுள்ள சமூகம், அன்றாட நிகழ்வுகள், விளையாட்டு, இசை போன்ற புறவினைகள் யாவுமே தடைசெய்யப்படுகின்றன.

இந்த ஓட்டப்பந்தயத்தில் பெற்றோர்களுக்கு இணையாக பள்ளிக்கூட நிர்வாகங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றன.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி.

பள்ளிநிர்வாகத்திற்கு கல்வித்துறையின் நெருக்குதல்தான் கேள்விக்குறி.

இந்த நெருக்குதலில் நசுங்கிப்போன பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான் இன்றைய சோகச்செய்தி.

மாணவர்களின் தற்கொலைச்செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும், நாகரிக உலகம் அலட்சியப்படுத்தக்கூடிய செய்திகள் இல்லை இவைகள்.

நல்ல மதிப்பெண் பெறத்தவறிய மாணவியை பெற்றோர்கள் கண்டித்தார்களாம்: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

நல்ல மதிப்பெண் பெறத்தவறிய மாணவனை ஆசிரியர் தண்டித்தாராம்: மாணவன் விஷம் குடித்து இறந்தான்.

இன்னும் பெற்றோரை அழைத்துவரச்சொல்லி பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்தியதால் நஞ்சுகுடித்து மாணவர்கள் இறந்துபோன செய்திகளும் உண்டு.

இந்த சோக நிகழ்வுகளுக்கு கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டமா? இதைத் தவிர்க்க இயலாதா? பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் நிதானமாயிருந்த கல்வித்துறை இப்போது நிதானமிழந்து போனது எப்படி? இந்த பேயாட்டத்தின் சூத்திரதாரி யார்? இந்த விவாதம் பாராளுமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது. பள்ளிகளுக்கிடையே தேர்வு முடிவுகளை எட்டுவதில் கடுமையான போட்டி நிலவுவதாக உறுப்பினர்கள் கவலைப்பட்டுள்ளனர். இப்போதைய கல்விமுறை குழந்தைகளின் படைப்புத்திறனை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக முடக்கிப்போடும் வேலையை செய்துகொண்டிருப்பதாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

உளவியல் நிபுணர்கள் அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி நம்முடைய அடிவயிற்றை கலக்குகிறது. தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தீர்க்க மாணவர்கள் போதை மருந்துகளையும் புகையிலையையும் சாப்பிடுகிறார்களாம். டூத்பேஸ்ட்டையும், ஊர்ந்துசெல்லும் பல்லியையும் சாப்பிட்ட மாணவர்கள்கூட உண்டாம். இதையெல்லாம் பார்க்கும்போது உண்மையிலேயே மதிப்புசார்ந்த கல்வியைத்தான் நாம் அளிக்கிறோமோ என்கிற சந்தேகம் கூட வருகிறது.

2005 ஆம் ஆண்டில் நாட்டில் 113,914 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் இந்த எண்ணிக்கை வெறும் 108,506 தான். தற்கொலையில் நல்ல வளர்ச்சிதான். இதில் இரண்டு சதவீத தற்கொலைகள் தேர்வு முடிவுகளோடு தொடர்புடையவை.

கேரளாவில் 91 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன்கூட தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

தமிழ்நாட்டில் ஒரு மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வை சரியாக எழுதவில்லை என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டான். தேர்வு முடிவுகளில் அவன் 94 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தான். ஒரு வேளை அவனுடைய பெற்றோர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் இதைவிட அதிகமாக இருந்திருக்குமோ?

ஒரு சிறிய கணக்கு பார்ப்போம்:

அரையாண்டுத்தேர்வில் நூறு மாணவர்கள் எழுதியதாகவும், அனைத்து பாடங்களிலும் 60 மாணவர்கள் தேறியதாகவும் வைத்துக்கொள்வோம். மீதமுள்ள நாற்பது மாணவர்களில் ஆங்கிலப்பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்கள் 30 மாணவர்கள். இந்த முப்பது மாணவர்களை ஊக்குவித்தால் அல்லது கசக்கிப்பிழிந்தால் அல்லது சித்திரவதை செய்தால், ஒரு 5 மாணவர்கள் "நான் இந்த விளையாட்டிற்கு வரவில்லை" என்று பள்ளியை விட்டு நின்று கொள்ளலாம். குறைந்தது பத்து மாணவர்களாவது ஆங்கிலப்பாடத்தை தீவிரமாக மனப்பாடம் செய்து அடுத்து வரும் பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெறலாம். இதனால் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். கல்வித்துறை போடும் கணக்கும் இதுதான்.

பள்ளியை விட்டு நின்றுகொண்ட ஐந்து மாணவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் இடம் எது?

நம்முடைய கட்டுரையின் நோக்கம், கசக்கிப்பிழிந்தும் சாறுவராத மாணவனை என்ன செய்யலாம்?

மதிப்பெண்களை முன்னிறுத்தி மன அழுத்தத்தை விதைக்கும் கல்வித்துறையை என்ன செய்யலாம்?

"ஆக்டிவ் வாய்சும் பேசிவ் வாய்சும்
முள்புதரில் பின்னி வளர்ந்த ஓணான் கொடி போல
எனக்கு மட்டும் பிரியாது"
என்று சொல்லும் மாணவனை என்ன செய்யலாம்?

"துள்ளித்திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி
பள்ளிக்கு அனுப்பாத பாதகனே, என் அப்பனே!" என்று தகப்பனைத்திட்டிக்கொண்டிருப்பவர்கள் நம்மில் இல்லையா?
மாணவர்களின் துடுக்கை அடக்கும் கடமை வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் இல்லையென்றால் வேறுயாருக்கு தான் அந்தக்கடமை இருக்கிறது?

பெற்றோரும், ஆசிரியரும் கண்டித்ததால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்பற்றிய செய்திகளை ஊதிப்பெரிதாக்க வேண்டாம். பெற்றோர்கள் திட்டியதால், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்டர்கள் என்பது முழுமையான காரணம் இல்லை. இன்னும் சற்று நெருங்கிப்போகும் போதுதான் பாடத்திட்டமும் ஒரு காரணம் என்பது தெளிவாகும்.

பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் அக்கறை சந்தேகத்திற்கிடமானது அல்ல. கல்வித்துறை மாணவர்கள் மீது காட்டும் அக்கறை போலியானது. மாணவ சமுதாயத்தின் மீது கல்வித்துறைக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் பாடநோட்டுகளின் அட்டைமேல் நடிகைகளின் படங்களை அனுமதிப்பது ஏன்? பள்ளிக்கூடங்களுக்கு பக்கத்திலேயே கஞ்சா விற்கும் கடைகள் எப்படி வந்தன?

ஆசிரியர்கள் மூளையைத்திறந்து திணித்துவைத்த செய்திகளை தேர்வு சமயத்தில் வெளியே எடுக்க முடியாத ஒரு மாணவனுக்கு இயற்கைச்சூழல் நன்றாகத்தெரியும்; பருவத்திற்கேற்ற பயிர்வகைகள் தெரியும்; பறவைகள் மற்றும் விலங்குகளின் வழக்குப்பெயர்கள் தெரியும்; பழவகைகள், மரவகைகள் எல்லாம் தெரியும்; இயல்பான அனுபவ அறிவு இருக்கிறது; என்றாலும் கல்வித்துறை அவனை தேர்ச்சி பெற இயலாத முட்டாள் என்றல்லவா முத்திரை குத்துகிறது !

இது முரண்பாடுதானே!

அய்யனாரப்பா! இந்தமுரண்பாட்டை தீர்க்கப்போகிறவனை எங்கே பிறக்கவைத்திருக்கிறாய்?

No comments:

Post a Comment