Friday, May 7, 2010

தடுமாறி விழுகிறதா சமச்சீர்கல்வி?




தமிழ்நாட்டில் அரசு அனுமதியுடன்,

12 ஆம் வகுப்புவரை 1307 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும்,

10 ஆம் வகுப்புவரை 3244 மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகளும்,

இயங்குகின்றன.

அரசின் முழுமையான கட்டுப்பாட்டில்,

உயர்நிலைப்பள்ளிகள் 2860 ம்,

மேல்நிலைப்பள்ளிகள் 2320 ம்

இயங்குகின்றன.

இவை தவிர அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 90,000.

மாணவர் வருகை குறைவாக இருப்பதால் ஒவ்வோர் ஆண்டும் அரசு நடத்தும் தொடக்கப்பள்ளிகள் ஓசையின்றி இழுத்து மூடப்பட்டுவருகின்றன.

ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் தழைத்து வளருகின்றன. அரசின் ஊழல் போல பல்கிப்பெருகிவருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை மத்திய மாநில அரசுகள் கொட்டியழுதபோதிலும், இந்த சவளைப்பள்ளிகள் தேறமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.

என்ன காரணம்?

பெற்றோர்களின் ஆங்கில மோகம்.

அரசுப்பள்ளிகளின் மீது பெற்றோர்களின் நம்பிக்கையிழப்பு.

பெற்றோர்கள் நம்புவது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே தங்களுடைய பள்ளியின் மீது நம்பிக்கையில்லை.

எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்கூட தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

சமச்சீர்கல்வியை ஆராய்ந்த முத்துக்குமரன் குழு அண்மைப்பள்ளித்திட்டத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

காலம் காலமாக கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் திட்டம்தான் அண்மைப்பள்ளித்திட்டம்.

அது என்ன அண்மைப்பள்ளித்திட்டம்?
ஒவ்வொரு குழந்தைக்கும் அது வசிக்குமிடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிதான் படிக்கவேண்டிய பள்ளி.

பெற்றோர் அந்தப்பள்ளியை பாடாவதி பள்ளிக்கூடம் என்று கருதினாலும் கூட அங்கே தான் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்கவேண்டும்.

ஒரு மாவட்டக் கலெக்டரோ, எம்.எல்.ஏ.வோ இதுபோன்ற ஒரு பாடாவதிபள்ளியில் தன்னுடைய பிள்ளையை சேர்ந்தபிறகு அந்த பள்ளியின் தரத்தை உயர்த்தத்தானே முயலுவார்?

பெற்றோர்கள் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தமக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிகளை கண்காணிக்கும்போது காலப்போக்கில் பாடாவதி பள்ளிகளே இல்லாமல் போகும் என்பது சர்வ நிச்சயம்.

பள்ளி வாகனப்போக்குவரத்து குறையும்.

விபத்துகள் குறையும்.

எரிபொருள் மிச்சமாகும்.

பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் மேம்படும்.

அரசு மார்தட்டிக்கூறும் சமச்சீர் கல்வி அடிக்கடி விழுந்து எழுகிறது.

ஒரேயடியாக விழுந்துவிடுமோ என்றுகூட நமக்கு ஐயம் தோன்றுகிறது.

அரசு ஒப்புதல் அளித்த பாடத்திட்டத்தில் தனியாரே பாடப்புத்தகம் தயாரித்துக்கொள்ளலாம் என்று ஆபத்தான் புதிய அறிவிரை பிறந்திருக்கிறது.

சமச்சீர் கல்விக்கு அடிமேல் அடி.

அரசு இந்த அடிகளை ஏற்குமா? சமச்சீர்கல்வியை தாங்கிப்பிடிக்குமா?

2 comments:

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை!

/ஒரு மாவட்டக் கலெக்டரோ, எம்.எல்.ஏ.வோ இதுபோன்ற ஒரு பாடாவதிபள்ளியில் தன்னுடைய பிள்ளையை சேர்ந்தபிறகு அந்த பள்ளியின் தரத்தை உயர்த்தத்தானே முயலுவார்?/

:-)

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு. என் பிளாக்குக்கும் வாங்க. நல்ல ஆலோசனைகள் தருக...இணைவோம் இழுப்போம் நல்ல ஆரோக்கியமான கல்விக்கு மக்களை. வாழ்த்துக்கள்

Post a Comment