Monday, May 10, 2010

நூறுசதவீத பைத்தியங்கள்




வணிக நோக்கில் நடத்தப்படும் கல்விக்கூடங்களின் பைத்தியக்காரத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய தினமணி செய்தித்தாளில் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நடத்திய அட்டூழியம் வெளியாகி உள்ளது.

தனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் முப்பதுபேரை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளது இந்தப்பள்ளி.

மாணவர்கள் செய்த தவறென்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 30 மாணவர்களும் தேர்ச்சிபெற வாய்ப்பில்லையாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் இந்த 30 மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இந்தப்பள்ளியில் வேறு என்னவேலை நடந்துகொண்டிருக்கிறது?

நூறுசதவீத தேர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளவும், அதன்மூலம் பெற்றோரின் பணப்பையை தட்டிப்பறிக்கவும் துடிக்கின்றன இந்த தனியார் பள்ளிகள்.

இந்த லட்சணத்தில் அதிகாரிகளின் நெருக்குதல் வேறு.

ஒவ்வோர் ஆண்டும் நூறுசதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.

மாறாக, 90 சதவீதத்திற்குமேல் தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு பொன்னாடை போர்த்தலாம்; விருது வழங்கலாம்; வேறு எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

போதுமான ஆசிரியர்களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.

ஆனால் நூறுசதவீத தேர்ச்சிவேண்டும் என்று பள்ளித்தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்க மட்டும் இந்த அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.

இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது.

முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை தன்னுடைய பள்ளியில் படித்த முப்பது மாணவர்களை கடுமையாக உழைத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இதுபோன்ற பள்ளிகள் இந்த நாட்டிற்குத்தேவைதானா?

வெட்கக்கேடு!

1 comment:

Muhammad Ismail .H, PHD., said...

வணக்கம் திரு.மு.குருமூர்த்தி அய்யா,

தங்களின் இந்த பொறுப்பான இடுகைக்கு எனது முதல் பின்னூட்டம். கல்வித்துறையில் நிரம்ப அனுபவம் பெற்ற உங்களின் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் நீங்கள் பணியில் இருந்த போது உங்களின் மனசாட்சியின் படி இவற்றில் கொஞ்சமாவது செயல்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் அது போல் உங்களை செயல்பட விடாமல் தடுத்த சக்திகளையும் , அதன் பின்னணிகளையும் கண்டிப்பாக எழுதுங்கள்.


அது எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். காரணம், எதிர்காலத்தில் அவற்றை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் அதை திறமையாக கையாள எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறோம்.

இதைப்போல் ஒரு முறை ஒரு (ஆ)சிறியர் பெருங்கூட்டமாக மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரது வீட்டில் டியூசன் எடுத்துக்கொண்டிருந்தபோது நான் அவரிடம் கேட்ட கேள்வி இது.

நான் : காலை மணி 10 லிருந்து மாலை 5 வரை பள்ளியில் பாடங்களை நடத்தியும் ஏன் இந்த மாணவர்களுக்கு மறுபடியும் மாலை 6 to 8 இந்த ட்யூசன் வகுப்பு ?

(ஆ)சிறியர் : மாணவர்களுக்கு இந்த நேரத்தில் பாடம் நடத்தினால் அது மனதில் எளிதாக பதியும்.

நான் : அப்படியா ! பிறகு ஏன் ஒரு நாளில் காலை 10 to மாலை 5 வரை அவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்? அது சரியாக பலனளிக்கவில்லை என்றால் இந்த 6 to 8 மட்டுமே பாடம் நடத்தி அவர்களை அந்த நேரத்தில் வேறு உபயோகமான விஷயத்தில் ஈடுபடுத்தலாமே ?

தவிர காலை 10 to மாலை 5 வரை நடத்தியும் புரியாத பாடம் எப்படி மாலை 6 to 8 க்குள் நடத்துவது அவர்களுக்கு புரியும் ? வெகுநேரம் நடத்தியும் புரியாத பாடம், குறுகிய நேரத்தில் புரிந்து கொள்ள முடிகிறதென்றால் கண்டிப்பாக மாணவர்களிடம் குறை கிடையாது! பிறகு யாரிடம் குறைபாடு ? பிறகு ஏன் இத்தனை பெரிய பள்ளிக்கட்டிடம், அதற்கு இவ்வளவு செலவினம், அதிகாரிகள் பட்டாளம் ?

நீங்கள் சொல்வது சரியென்றால் மாணவர்களுக்கு உங்களைப்போன்றவர்களின் வீட்டிலேயே மாலை 6 to 8 மட்டுமே பாடம் நடத்த அவர்களை சிறந்த கற்றவர்களாக மாற்றி விட இயலுமே ?

இப்படி அடுக்கடுக்கான கேள்விக்கணைகளால் நான் துளைத்தெடுத்த பிறகு அவரது முகத்தில் ஈயாடவில்லை. நான் அவரது கணனியை சரி செய்யாமல் திரும்பி வந்துவிட்டேன்.




பிறகு உங்களின் கனவான "அனைவருக்கும் தரமான இலவசக்கல்வி வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம்." என்பதை உங்களுக்கு அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில், அரசவனங்காடு கிராமத்தில் ஷிக்ஸாயதன்/Shikshayatan என்ற பெயரில் 15 வருடங்களுக்கு மேலாக அருணா, ராகவன் தம்பதியினர் செயல்படுத்தி வருகின்றனர். இந்த துறையில் பழுத்த அனுபவம் உள்ள நீங்களும் அவர்களுக்கு இந்த முயற்சியில் இயன்றால் உதவலாம். ராகவன் அவர்களுடைய செல்லிடபேசி எண் - 94431.69478. இயன்றால் ஒரு முறை வாருங்களேன்.


அங்கே ஒரு மாணவனாக நானும் நிறைய கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன், இனிமேலும் கற்றுக்கொள்வேன். உங்களின் பதிலை எதிர்பார்க்கும்,,,



with care & love,

Muhammad Ismail .H, PHD.,

Post a Comment